பொய்யான தகவல்களால் போரை வெல்ல முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தங்கக் கிரீடம் அணிந்து முற்றுமுழுதாக இந்த உலகத்தை ஒரு தரப்பு நிர்வகிப்பது என்பது ஏற்புடையதல்ல. மேற்குலகம் அதனைச் தற்செயலாகப் பெறவில்லை, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்து பெற்றுக்கொண்டதே அவர்களின் இந்த நிலை. எனவே தான் அவர்கள் தற்போது பதற்றமடைய ஆரம்பித்துள்ளனர் என கூறியுள்ளார் ரஸ்ய அதிபர் விளடிமீர் பூட்டின்.

இந்தக் கருத்தின் மூலம் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது உக்ரைன் மீதான படை நடவடிக்கையையும் தாண்டி மேற்குலகத்தின் ஆழுமையை உடைப்பதே ரஸ்யாவின் நோக்கமாகும்.

உக்ரைன் சமரில் டொன்பாஸ் பகுதிக்கும் அப்பால் தமது இலக்கு விரிவடையும் என தெரிவித்துள்ளார் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ். அமெரிக்கா வழங்கும் நீண்டதூர தாக்குதல் திறன்மிக்க ஆயுதங்கள் தான் அதற்கான காரணம் என்பதையும்கூற அவர் தவறவில்லை.
உக்ரைன்-ரஸ்யப் போரானது தற்போது ரஸ்ய மற்றும் அமெரிக்கப் போராகவே இடம்பெற்று வருகின்றது. இரு தரப்பும் ஒருவர் மற்றவரின் படைப் பலத்தையும், பொருளாதார பலத்தையும் சிதைப்பதில் குறியாக உள்ளனர். அமெரிக்காவை நம்பிக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான சேதங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

ரஸ்யாவின் எரிபொருட்களை இலகுவாக மாற்றீடு செய்துவிடலாம் என்ற அவர்களின் கனவு நனவாகவில்லை. மாறாக தாம்போட்ட தடைகளை தாமே மீறவேண்டிய பரிதாப நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளின் அரசியலிலும் உறுதித்தன்மை குறைந்துள்ளது. பிரித்தானியா பிரதமரின் விலகலுடன், தற்போது இத்தாலிப் பிரதமரும் தனது பதவியை துறந்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள நிலையில் கனடாவும், நியூசிலாந்தும் கூட பணவீக்கத்தை எதிர்கொண்டு நிற்கின்றன.

களமுனையைப் பொறுத்தவரையில் லுஹான்ஸ் பகுதியை முற்றாக கைப்பற்றிய ரஸ்யா, டொனஸ்க் பகுதியில் மெதுவாகவே முன்நகர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் மேற்குலக நாடுகள் வழங்கிய நீண்டதூர பல்குழல் உந்துகணை செலுத்திகளே. களமுனைகளைச் சென்றடைவதற்கு முன்னர் ரஸ்யாவினால் அழிக்கப்பட்டவை தவிர களமுனைகளை அடைந்தவைகளால் ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கணிசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட HIMARS  வகை பல்குழல் உந்துகணை செலுத்திகளைத் தேடி அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செற்குரு. இந்த உந்துகணைகளை அழிப்பதற்கு ரஸ்யா இரண்டு வழிமுறைகளை பின்பற்றுகின்றது. ஒன்று அவற்றால் ஏவப்படும் ஏவுகணைகளை வானில் வைத்து அழித்துவிடுவது, இரண்டாவது HIMARS வகை உந்துகணை செலுத்திகளை, அவற்றின் ஏவுகணைகளுடன் தரையில் வைத்து அழிப்பது. கடந்த புதன்கிழமை (20) கூட கெரசன் பகுதியில் உள்ள முக்கிய பாலத்தைத் தகர்க்கும் நோக்கத்துடன் உக்ரைன் படையினர் ஏவிய ஐந்து ஏவுகணைகளில் நான்கு ஏவுகணைகளை ரஸ்யாவின் வான்பாதுகாப்பு படையினர் வானில் வைத்து அழித்தபோதும், ஒரு ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறைகளில் இருந்து தப்பிச் சென்று வெடித்ததால் பாலம் கடுமையாக சேதமடைந்திருந்தது.
எனவே தான் தற்போது ரஸ்யா ஆயுதங்களைப் பெறும் கட்டளைப் பீடங்களையும் தேடித் தாக்குவதற்கு தலைப்பட்டுள்ளது. கடந்த வாரம் வினிற்சா பகுதியில் உக்ரைன் படையின் தளபதிகளுக்கும், வெளிநாட்டு ஆயுத முகவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தை குறிவைத்து ரஸ்யா மேற்கொண்ட கலிபர் வகை குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

எனினும் இந்த தாக்குதலில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தபோதும், வான்படை தளபதி கேணல் டிமிறி பேர்டிகோ, ஜெனரல் கொன்ஸ்ரன்ரின் பிசிரின்கோ மற்றும் 112 ஆவது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் விளடிமீர் டற்சென்கோ உட்பட பல அதிகாரிகள் கொல்லப்பட்டதை உள்ளுர் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

களமுனையிலும், களமுனைகளுக்கு அப்பாலும் உக்ரைன் படையினர் தொடர் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (19) களமுனைகளில் கொல்லப்பட்ட உக்ரைன் இராணுவத்தினரின் 45 சடலங்களை ரஸ்யா ஒப்படைத்திருந்தது. அதனைப் பெற்றுக்கொண்ட உக்ரைனின் காணாமல் போனவர்களுக்கான பிரிவின் அதிகாரி ஒலேக் கெரன்கோ கடந்த 4 மாதங்களில் 7200 உக்ரைன் படையினர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற வான்சண்டையில் ரஸ்யாவின் எஸ்.யூ-35 ரக வான் தாக்குதல் விமானம் உக்ரைன் படையினரின் இரண்டு மிக்-29 ரக விமானங்களை நிக்கலோவ் பகுதியிலும், ஒரு எஸ்.யூ-25 ரக விமானத்தை செவர்க் பகுதியிலும் சுட்டு வீழ்த்தியதுடன், ரஸ்யாவின் வான்காப்பு படையினரின் எஸ்-300 ஏவுகணை ஒரு எம்.ஐ-8 மற்றும் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியிருந்தது.
நான்கு மாதங்கள் கடந்தும் உக்ரைன் படையினரின் வான்படை தற்போதும் தாக்குதல் விமானங்களை கொண்டுள்ளதா என்ற கேள்வி இங்கு எழலாம். பதில் என்னவெனில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் சோவியத்தின் விமானங்களை வைத்துள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து விமானங்களைப் பெற்றுக்கொடுகின்றது. அதற்கு பதிலாக தனது எப்-16 விமானங்களை வழங்க முன்வந்துள்ளது.
அண்மையில் ஆப்கானின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள் கூட உக்ரைனில் பறந்ததை காணமுடிந்தது. ஆப்கான் படையினரின் வீழ்ச்சியின் போது ஆப்கான் வான்படை தனது விமானங்களை பாதுகாக்கும் பொருட்டு நட்பு நாடுகளுக்கு நகர்த்தியிருந்தது. அவை தான் தற்போது உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உக்ரைன் படையினர் பெருமளவில் வெற்றியீட்டாதபோதும், அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கி வருகின்றது. மேலும் நான்கு வகை பல்குழல் உந்துகணைச் செலுத்திகளை வழங்கவுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். அதேசயம் அமெரிக்காவின் வான்படையில் இருந்து ஒய்வுபெறும் ஏ-10 தண்டபோல்ற் தாக்குதல் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குமாறும் அமெரிக்க வான்படை அதிகாரிகள் அமெரிக்க அரசைக் கேட்டுள்ளனர்.

ஆனால் உக்ரைன் படையினரின் உட்கட்டமைப்பு ஆட்டங்காண ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ஆயுதங்கள் எவ்வாறு களமுனைகளை வெல்லும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த வாரம் உக்ரைன் அதிபர் தனது பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி இவன் பகனோவ், மற்றும் நீதியரசர் ஐரின் வெனடிக்ரோவ் உட்பட ஐந்து மாகாணங்களின் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதித் தலைவர் விளமிடீர் கொபர்ன்கோவும் நீக்கப்பட்டுள்ளார். ரஸ்யாவுக்காக உளவு பார்த்தது மற்றும் ரஸ்யாவுக்கு ஆதரவாக செயற்பட்டதே அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம்.
அதாவது களமுனையில் ஏற்படும் இழப்புக்கள், படைத்தரப்பின் உட்கட்டுமானங்களில் ஏற்படும் விரிசல்கள் என போரின் வலியை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்துள்ளது உக்ரைன். அதேசமயம் உக்ரைனுக்கு ஆதரவான மேற்குலகமும் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது.

அதனைத் தான் அமெரிக்க படையின் தளபதியான லெப். கேணல் டானியல் டேவிஸ் இன் கருத்தும் உணர்த்துகின்றது. அதாவது உக்ரைன் போரில் வெல்வதாக மேற்குலகம் கூறும் பொய்கள் அரசியல் தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் தவறான நம்பிக்கைகளை விதைப்பதுடன், மேற்குலக நாடுகளில் வாழும் மக்களின் வரிப்பணமும் விரயமாக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.