Tamil News
Home ஆய்வுகள் தனக்கான நேரத்திற்காக காத்திருக்கினறது சீனா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தனக்கான நேரத்திற்காக காத்திருக்கினறது சீனா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அமெரிக்காவின் நாடாளுமன்ற பேச்சாளர் நான்சி பெலொஸ்கியின் தாய்வானுக்கான பயணம் ஆசிய பிராந்தியத்தில் புதியதொரு களமுனையை திறந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்டுத்தியிருந்தபோதும் அதனை சீனா தவிர்த்துவிட்டது.

சீனாவின் ஒரு சீனா என்ற கொள்கையை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்தபோதும், தாய்வனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல், அதனை உலகளாவிய ரீதியில் அங்கீகரித்தல் போன்ற விடயங்கள் மூலம் சீனாவில் இருந்து பிரித்து அதில் அமெரிக்காவினதும், யப்பானினதும் கூட்டுப்படைத் தளத்தை அமைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.

அதற்காகவே உயர்மட்ட இராஜதந்திரிகளை அங்கு அனுப்புவதுடன், ஏனைய நாடுகளில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் செல்லும் ராஜதந்திரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிதிகளையும் அமெரிக்கா தனது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வழங்கி வருகின்றது.

அண்மையில் தய்வானின் தூதரக அலுவலகம் ஒன்று லுத்துவேனியாவில் திறக்கப்பட்டதையும் அமெரிக்காவே ஊக்குவித்திருந்தது. அதனை சீனா கண்டித்திருந்தது. தற்போது பெலொஸ்கியின் பயணத்தையும் வெள்ளைமாளிகை தனிப்பட்ட பயணம் என கூறினாலும் அதன் பின்னனியில் அமெரிக்கா இருப்பது எல்லோரும் அறிந்ததே.

1997 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்காவின் பேச்சாளர் நிவ்ற் ஜின்றிச் இன் பயணத்தின் பின்னர் இடம்பெற்ற அமெரிக்காவின் உயர் மட்டப் பயணம் இதுவாகும். அன்று சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவுகள் இருந்தால் அது அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய பயணம் என்பது சீனா எமது எதிரி என நேட்டோவின் தலைவர் ஸ்ரோலென்பேர் வெளிப்படையாக தெரிவித்தபின்னர் இடம்பெற்ற பயணம்.

இந்த பயணம் தொடர்பில் சீனா தனது கடுமையான எதிர்ப்புக்களை கண்பித்திருந்தது. சீனாவின் வெளிவிவகாரத்துறை கடும் எச்சரிக்கையை விடுத்ததுடன், சீனாவின் CV-17 Shandong, CV-16 Liaoning ஆகிய இரண்டு விமானந்தாங்கி கப்பல்களும் தாய்வனை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தன.

தாய்வானை சுற்றிய வான்பரப்பில் சீனாவின் வான் தாக்குதல் விமானமான எஸ்யூ-35 மற்றும் ஜே-16 விமானங்களும், ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 விமானமும் களமிறக்கப்பட்டிருந்தன.

தாய்வானுக்கு எதிரேயுள்ள சீனாவின் தென்கிழக்கு கடற்கரையான சியாமென், புஜியன் கடற்பகுதியை நோக்கி சீனா தனது எச்-கியூ-22 என்ற வான் எதிர்ப்பு தொகுதியையும், டி.எப்-16 எனப்படும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், பெருமளவான டாங்கிகளையும், ZBL-09 ரக துருப்புக்காவி வாகனங்களையும் நகர்த்தியிருந்தது.

அதேசமயம் தாய்வானின் அரச தலைவர் செயலகத்தின் இணையயத்தளம் உட்பட அரச இணையத்தளங்கள் பல சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.

தாய்வானும் பெலொஸ்கியின் விமானத்தை பாதுகாப்பதற்காக தனது பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ்-2000 விமானத்தை வானில் இறக்கியதுடன், விமான எதிர்ப்பு பிரங்கிகளையும் விமான நிலையத்தை சுற்றி நிறுத்தியிருந்தது.

அமெரிக்காவும் றொனால்ட் றீகன் என்ற விமானம் தாங்கி கப்பல் தலைமையில் 4 தாக்குதல் கப்பல்களையும், அதில் எப்-18 ரக விமானங்களையும் தென்சீனக் கடலை நோக்கி நகர்த்தியிருந்தது. அது மட்டுமல்லாது யப்பானில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்து 5 இற்கு மேற்பட்ட வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அனுப்பியிருந்தது. அமெரிக்காவின் இரண்டு Beech King Air 360 கண்காணிப்பு விமானங்களும் தாய்வானில் இறங்கியிருந்தன.

இதனிடையே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தமக்கும் உக்ரைன் மக்களின் நிலையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை தாய்வான் மக்களுக்கு ஏற்படுத்தியதால் பலர் பெலொஸ்கியின் பயணத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியிருந்தனர். அதேசமயம் விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், தாய்வான் தனது நாட்டின் பாதுகாப்பு நிலையை தாக்குதல் எச்சரிக்கைக்கு உயர்த்தியிருந்தது.

இந்த சம்பவங்கள் ஆசிய பிராந்தியத்தில் ஒரு போர் இரு பெரும் வல்லரசுகளுக்கிடையில் ஏற்படலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்திருந்ததுடன், பெலன்ஸ்கியின் விமானத்தின் நடமாட்டத்தை 9 இலட்ச்சத்திற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து அவதானித்துக்கொண்டும் இருந்தனர்.

எனினும் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா பெலொஸ்கியை ஏவியதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் நோக்கம் என்பது சீனாவில் இருந்து தாய்வனை பிரிப்பது இல்லையெனில் சீனாவை ஒரு வலிந்தபோருக்கு இழுத்து அதன் பொருளாதாரத்தை சீரழித்துவிடுவது.

எனவே தான் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் படைத்தளங்கள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் டொனால்ட் றம்பின் காலத்தில் சீனா மீது வர்த்தகப் போர் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தற்பேது பைடனின் காலத்தில் ஒரு சீனா கொள்கையை முற்றாக இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்கா ஏன் போரை தூண்டுகின்றது?

உக்ரைன் விவகாரம் அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் பொருளாதாரத்தை முற்றாக வீழ்ச்சியடையும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே அதை கைவிடவேண்டிய நிலை மேற்குலகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் ஐரோப்பிய ஒன்றியம் வழங்க தீர்மானித்த 8 பில்லியன் டொலர் கடன் உதவியையும் ஜேர்மனி நிறுத்திவிட்டதாக செலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

அதாவது தமது நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், மற்றும் உக்ரைன் போரை திசைதிருப்பும் முயற்சியாகவே அமெரிக்கா இதனை மேற்கொண்டுள்ளதாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது, முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனும், வெளிவிவகாரச் செயலாளர் கெசிங்கரும் பொதுவுடமை கொள்கையுள்ள சீனாவை ஏற்றுக்கொண்டதும், சீனாவை மிகவும் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களாக பயன்படுத்த நினைத்ததும் தான் தற்போதைய நிலைக்கான காரணம். அதாவது உற்பத்தித்துறையை சீனாவிடம் வழங்கிவிட்டு, சேவைகள் துறையை தாம் வைத்திருந்க நினைத்தது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் பொருளாதாரம் போர் சார்ந்ததாக மாற்றம் பெற்றுவிட்டது.

போரை நடத்துவது, ஆயுதங்களை விற்பனை செய்வதே பிரதானமாக மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் அமெரிக்காவுக்கு போர் தேவையாக உள்ளதுடன், தனது நாட்டிலும் தூப்பாக்கி விற்பனையை ஊக்குவிக்கின்றது.

90 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட பெலொஸ்கியின் பயணத்தின் மூலம் அமெரிக்கா எதனை சாதித்தது?

ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது, அது மட்டுமல்லாது தாய்வான மீண்டும் சீனாவுடன் இணைப்பது வாரலாற்றின் கடமை என்பதை இந்த பயணம் தமக்கு உணர்த்தியுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

அதாவது அமெரிக்கா எதிர்பார்த்த போர் எற்பட்டு சீனாவின் பொருளாதாரம் அழியவில்லை மாறாக தாய்வான் மீதான சீனாவின் பிடி இறுக்கமையவுள்ளது. அதாவது பெலொஸ்கியின் பயணத்தின் பின்னர் தான் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என வொசிங்டன் போஸ்ட் தெரிவித்திருந்தது.

அதற்கு அமைவாக தாய்வான் மீது மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை விதித்துள்ள சீனா, ஆறு முனைகளில் தாய்வானை சுற்றிவளைத்து மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது. 9 H-9K போன்ற நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களும் (இந்த விமானங்கள் தாய்வானின் எப்-16 இல் இருந்து ஏவப்படும்  AIM-120 air to air missiles ஏவுகணைகளை விட வேகமாக பறக்கக்கூடியவை.), துருப்புக்காவி வாகனங்களை ஏற்றிய தரையிறங்கு கலங்களும் பங்குபற்றுவதுடன், ஏவுகணைகளும் தாய்வானுக்கு மேலால் ஏவப்படுகின்றன.

அதாவது தாய்வான் மீது சீனா தனது படையினரின் அழுத்தத்தை அதிகரிக்கப்போகின்றது. உக்ரைன் மீதான படை நடவடிக்கைக்கு முன்னர் ரஸ்யா மேற்கொண்ட படை ஒத்திகை ஒன்றைபோல சீனா தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த ஒத்திகை பின்னர் நிஜமாக மாறும் என தெரிவித்துள்ளார் சீனாவை தளமாகக் கொண்ட படைத்துறை ஆய்வாளர் சொங் சொங்ன்பிங்.

அதாவது உண்மையான படைத்துறை வியூகம் என்பது எதிரி வகுக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் வீழ்ந்துவிடுவதில்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. அது தன்னை தயார் படுத்தியவாறு தனக்கான நேரத்திற்கு காத்திருக்கின்றது.

Exit mobile version