Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் கட்சி அடிப்படையில் நோக்காது தமிழ் தேசிய நலன் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

கட்சி அடிப்படையில் நோக்காது தமிழ் தேசிய நலன் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

சிறீலங்காவில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கில் கோத்தபாய ராஜபக்சா அணியும், வடகிழக்கில் தமிழர் அணியும் தமது பெரும்பான்மையை தக்கவைப்பதற்காக போராடுகின்றன. ஆனால் இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. தெற்குஅணி தனது குடும்ப அரசியல் நலன்களை காக்கவும், இனஅழிப்புக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் போராடுகின்றது.

ஆனால் தமிழர்அணி தனது இனவிழுமியங்களை காப்பாற்றவும், தம்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்காக நிதிகோரி மேற்கொள்ளப்படவுள்ள போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கவேண்டிய பிரதிநிதிகளை தேடியும் போராடுகின்றது.

225 உறுப்பினர்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஏறத்தாள 14 தொடக்கம் 16 உறுப்பினர்களை கொண்ட ஒரு அணி எதனையும் சாதிக்கமுடியாது என்பதை தமிழ் இனம் அறிந்தபோதும், எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளை நாம் அனைத்துலக சமூகத்திடம் எடுத்துக்கூற எமக்கான பிரதிநிதிகள் தேவை.

போரின் பின்னர் இரண்டு தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தமது ஆணையை வழங்கிபோதும், அவர்கள் அதனை புறம்தள்ளியது எமது இனத்தின் உரிமைக்கான முன்னெடுப்புகளை  மிகவும் பின்தள்ளியுள்ளதாக மக்கள் உணர்கின்றனர்.

தற்போதைய தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒரு கூட்டணியை அமைக்கமுடியாதது பின்னடைவாக இருந்தபோதும் களமிறங்கியுள்ள மூன்று தமிழ் கட்சிகளில் பல உறுப்பினர்கள் தேசியச் சிந்தனையுள்ளவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை சிறீலங்கா அரசின் உள்ளடகப்பொறிமுறை ஊடாக பெறமுடியாது என நம்பும் இரு கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியும், தமிழத் தேசிய மக்கள் முன்னனியும் தன்னாட்சி உரிமைகளை பெறுவதற்கான வழிகளாக புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணைந்து இயங்கி அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளை பெறும் திட்டத்தையும், சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கான நீதி கோரல் மூலம் எமது இனத்தின் தேசிய உரிமைகளை காப்பாற்றும் திட்டங்களையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளன.

அதாவது எது நடைமுறைச்சாத்தியமோ அதனை நோக்கி அவர்கள் தமது நிலைப்பாட்டை வகுத்துள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது 1977 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி முன்வைத்த தேர்தல் அறிகையில் சில மாற்றங்களை கொண்டதாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சுயாட்சி உரிமைகளை வழக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதிகளை உள்ளடக்கி பெறுவது என்பது அவர்களின் கொள்கையாக பல பத்து ஆண்டுகளாக உள்ளது.

முப்பது வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற போரில் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் மூலம் எமது விடுதலைப் போரை நகர்த்துவதற்காக எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் தமது கொள்கைகளை மாற்ற முனையவில்லை. எனவே தான் இனப்படுகொலை என்றவார்த்தையை அவர்கள் தவிர்த்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டுக்கும் தற்போது உள்ள நிலைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது, இந்திய இலங்கை உடன்பாட்டில் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சிறீலங்கா அரசு 2006 ஆம் ஆண்டு இல்லாது செய்துள்ளது. அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் கிழக்கு மாகாணத்தில் 60 விகித மக்கள் தமிழர் அல்லாதேராக மாற்றம் அடைந்துள்ளது.

எனவே தற்போதுள்ள நிலையில் நாம் ஒரு தேசிய இனம் என்ற பதத்தை வலியுறுத்துவது, எம்மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கான நீதி கோருவது ஆகியவற்றின் ஊடாகவே சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்குள் இணைந்து வாழமுடியாத ஒரு இனம் என்ற கருத்தை அனைத்துலக சமூகத்தில் வலுவாக நாம் முன்வைக்க முடியும்.

அதனை மேற்கொள்ளக்கூடியவர்களுக்கு அல்லது இந்த கொள்கையின் நிமிர்த்தம் ஒருங்கிணைந்து செயற்படுபவர்களுக்கு கட்சி பேதம் கடந்து நாம் வாக்களிக்கவேண்டும். எனவே மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் முடிவெடுப்பதுடன், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் கட்சிகளை புறக்கணியுங்கள். தாயகத்து மக்களிற்கு உறுதுணையாக நின்று அவர்களின் முடிவெடுக்கும் பக்குவதற்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய கடைமைய புலம்பெயர் தமிழ் சமூகம் ஆற்றவேண்டும்.

 

 

 

Exit mobile version