அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயம்- இரு நாடுகளிற்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங்கின் சீன விஜயத்தை தொடர்ந்து இரு நாடுகளிற்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக தடைகள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது என அவுஸ்திரேலியாவும் சீனாவும் இணங்கியுள்ளன. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயத்தை தொடர்ந்தே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்  உறவுகளை ஸ்திரப்படுத்துவதை நோக்கி இரு நாடுகளும் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகம் துணைதூதரகங்கள் காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. இரு நாடுகளும் ஸ்திரமான உறவை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் செயற்படுகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் கருத்துவேறுபாடுகளை புத்திசாலித்தனமாக கையாண்டால் நாங்கள் எங்கள் இரு தரப்பு உறவுகளை மேலும் வளர்க்கலாம் தேசிய நலன்களை பேணலாம் என்ற கருத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன் எனவும் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

சீனா பரஸ்பர மரியாதை சமத்துவம் பரஸ்பர நன்மை கருத்துவேறுபாடுகளை புத்திசாலித்தனமாக கையாள்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட உறவுக்கு ஒப்புக்கொண்டது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.