Home செய்திகள் பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள்-இரா.சாணக்கியன்

பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள்-இரா.சாணக்கியன்

506 Views

கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள்

இலங்கையில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போதே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் மகளிருக்கு நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இன்றைய நாளுக்கான தலைப்பிற்கமைய பேசப்படுவதை விட நாடு முகம் கொடுத்திருக்கும் பாரிய பிரச்சினைகளான மின்விநியோக துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு இவ்விடயங்களை பற்றி உரையாற்ற விரும்புகிறேன்.

அண்மையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேசத்தில் முன்னெடுத்த போராட்டத்திற்கு வந்த இளைஞர்கள் மின்விநியோக துண்டிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை அவ்விடயத்தில் வெளிப்படுத்தினார்கள்.

அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ளும் வழிமுறை குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நினைக்கிறோம். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் தன்மை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகள் யோசனைகளை முன்வைத்ததை தொடர்ந்து முக்கிய இரு அமைச்சர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மாவட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மௌனம் காப்பது கவலைக்குரியது.

உதாரணமாக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மக்கள் படும் துயரம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு திறனில்லாதவர்கள் என்பதும் எமக்கு தெரியும்.

இருந்தாலும் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு வெறும் வாய்மொழி மூலமான நிலைப்பாட்டையாவது குறிப்பிட வேண்டும். உரப்பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீன்பிடி துறை அமைச்சரின் செயலற்ற திறமையினால் வடக்கு கிழக்கு மாகாண மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனையடுத்து வடக்கு கிழக்கில் சிறுகைத்தொழில் அதாவது வெதுப்பகங்கள் கூட இயங்குவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்க்க கோரி மலையகத்திற்கு சென்றிருந்த போது அங்கும் இவ்வாறான நிலைமையை அவதானிக்க முடிந்தது.

விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வகித்துக்கொண்டு, பதவி ஆசைக்காக தங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகை கிடைப்பதால் மக்கள் படும் துயரத்தை கண்டும் அமைதிகாக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய தரப்பினர்கள் கூட மக்கள் தரப்பில் இருந்துக்கொண்டு கருத்துரைக்கையில் ஏன் வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரால் மக்களுக்காக குரல் கொடுக்க முடியாது. மக்களுக்காக இவர்கள் அரசியலுக்கு வரவில்லை தங்களின் சுயநலத்திற்காகவும், செய்த கொலை, கற்பழிப்பு ஆகியற்றை மறைப்பதற்காகவும் நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகளிர் தினமன்று சபை ஒத்திவைப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதை அவதானித்தேன். அப்பிரேரணையில் பல காலங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரேமினி என்ற சகோதரியை கற்பழித்து கொலை செய்தவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான கட்சியை வைத்திருக்கும் ஒருவர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இவ்வாறானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். மகளிர் தினத்தையொட்டி பிரேரணை கொண்டு வரும் வேளை இதனை பேசவிரும்புகிறேன்.

எமது மாவட்டத்தில் மிகமோசமான நிர்வாகம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வட்டாரத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த நிதி ஒதுக்கீட்டை கூட எடுத்து இன்று ஆளும் கட்சியை சேர்ந்த ஒருசிலர் தங்களின் பிரதேச அபிவிருத்தி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அந்த 40 இலட்சத்தையும் நாங்கள் தான் வழங்குவோம் என குறிப்பிடுகிறார்கள்.

அவ்வாறாயின் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையா, வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவருக்கு அந்த தெரிவை செய்ய முடியாவிடின் பிறகு எதற்கு ஜனநாயகம்.

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து விட்டு மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு முழுமையாக பொறுப்பினை வழங்குங்கள். இவ்விடயத்தை ஆளுநரிடமும் அறிவித்தோம். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ’ எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version