அரசின் முட்டாள் தனத்தால் திருமண சுதந்திரம் பாதிப்பு; கரு ஜயசூரிய காட்டம்

முட்டாள் தனத்தால் திருமண சுதந்திரம்இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கை, நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அரசின் முட்டாள் தனத்தால் திருமண சுதந்திரம் பாதிக்கப்படும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: –

“நாகரிகமான அரசிடம் இருந்து இப்படி ஒரு விடயத்தை எதிர்பார்க்கவே முடியாது. இத்தகைய ஒழுக்கக்கேடான கட்டுப்பாடுகள் சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே காண முடியும்.

இது அரசமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

வெளிநாட்டினரை அரசில் சேர்ப்பதற்காக நாட்டின் அரசமைப்பைக் கூட திருத்தியமைக்கும் வகையில் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திய ஆட்சியாளர்களின் இந்த முடிவு நெறிமுறையற்றதாகும்.

எனவே, வெளியுலகில் இலங்கையைக் கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்று உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.