“கார்த்திகை வீரர்கள் தினம் நினைவு கூரும் போது, தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்தத் தடை”

கடந்த காலங்களில்  சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து இலங்கை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்  ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல உறவுகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை. இதேபோல இலங்கை அரசுக்கு எதிராக இரு தடவைகள் ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்த ஜேவிபியினருக்கு அதில் இறந்த போராளிகளை நினைவு கூரும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நவம்பர் 13 ஆம் திகதி கார்த்திகை வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

அதேபோன்று  தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.  அதனடிப்படையில் இறந்தவர்களை நினைவுகூருவதை தடை விதிக்கும்  தார்மீக உரிமை மற்றும்  நியாயமான காரணம் இலங்கை அரசுக்கு இல்லை. மக்கள் இவ்வளவு காலமும் தொடர்ச்சியாக வீரவணக்கத்தைச்  செலுத்தியுள்ளார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று 10 நாட்களுக்குள்ளே மாவீரர் தினம் வந்ததால், அதை  தடுக்க விரும்பாத காராணத்தாலோ, அல்லது தடுக்கக் கூடாது என்ற நினைப்பினாலோ, அதைப்பற்றி  சிந்திக்காததாலோ கடந்த முறை நினைவு தினம் தடுக்கப்படவில்லை.

ஆனால் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு பல தடைகள் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமும் சாட்டப்பட்டது. அதன் பின்னர் தியாக தீபம் திலீபனின் நினைவும் இந்த அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது.

எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி வீர மறவர்களுக்கு மக்கள் தங்களின் அஞ்சலியை செய்ய யாரும் தடுக்க கூடாது. மக்கள் இறந்து போன தமது உறவுகளை நினைத்து பொது இடங்கள், ஆலயங்கள், வீடுகளில்  தீபம் ஏற்றி விழிபடும் உரிமையை மறுப்பது மிகக் கொடூரமானது.

தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மதித்து, மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். அரசு அதை தடுக்க நினைத்தால் தமிழ் கட்சிகள், தமிழ்  தலைவர்கள், பொதுமக்கள் இணைந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். முடிந்தளது அஞ்சலி உரிமையை நிலைநாட்டுவது தான் சிறப்பு.

நியாயமான காரணங்களுக்காக மக்கள் அனைவரும்  அடங்க மறுத்து ஆயிரக்கணக்கில் திரண்டால், அரசாங்கத்தினாலோ அல்லது வேறு எந்த சக்தியினாலோ தடுக்க முடியாது. சர்வதேசம் வரை எமது உணர்வுகள்  எதிரொலிக்கும் நிலை உள்ளது. ஆகவே ஒவ்வொருவரும் தமது பங்குக்கு ஒன்று சேர்ந்து  நினைவை அனுஸ்டிக்க தீர்மானம் எடுப்போமானால், பெரும் வெற்றி ஏற்படும். தாயகத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக வீர மறவர்களுக்காக  எப்பாடுபட்டாவது  அந்த உறுதி உரை நெஞ்சில் ஒவ்வொருவருக்கும் வருமாக இருந்தால், இதை சிறிய பிரச்சினையாக  எதிர்கொண்டு நாம் வெற்றி பெறலாம்.” என்றார்.