கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் கூறுகையில்,
”அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
அமெரிக்க நாடுகளில் வாரந்தோறும் சுமார் 10 இலட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு வாரத்துக்கு 5 இலட்சம் பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் நம்மை விட்டுச் சென்றுவிட்டதாக எண்ணக் கூடாது. தொற்றுப் பரவல் இன்னும் முடியவில்லை.
ஆனாலும், கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அதற்கான விலையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இதே போக்கு தொடர்ந்தால், கொரோனா வைரஸின் புதிய அலை வெகு விரைவில் ஏற்படலாம்” என்றார்.