Home செய்திகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார்

தவராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா காலமானார். இவர் இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 68ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற கணித ஆசிரியராகயிருந்த இவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகாலமாக ஆயுட்கால உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தார். எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்த இவர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்சங்கத்தின் செயலாளராகயிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியிருந்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மொழி அமுலாக்கலின் அவசியத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த அவர், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தூய தமிழுக்கு முன்னுரிமையளிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தினைக் கொண்டுவந்து அதற்குரிய நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் கலைகலாசார வளர்ச்சியை நோக்காக கொண்டு ஒவ்வொரு மாதமும் மாநகரசபையின் பௌர்ணமி கலை விழாவினை நடாத்தி மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கலைகலாசர மேம்பாட்டுக்காக  உழைத்தும் வந்துள்ளார்.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வலது கையாக செயற்பட்டதுடன் அவரது மறைவுக்கு பின்னர் அவர் வழியில் கொள்கைப்பற்றுடன் தனது அரசியல் பயணத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக முன்னெடுத்திருந்தார்.

நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தினை வெற்றிபெறச்செய்ய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் வெற்றியின் பின்னர் பெரும் மகிழ்ச்சியிலிருந்ததாகவும் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்ஈ அன்னாரின் பூதவுடல் அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணியளவில் மட்டக்களப்பு கல்லியங்காடு இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தமிழ்த் தேசியம் பால் தான் கொண்ட பற்று மாறாமல் தன் இறுதி மூச்சு வரை தமிழ்த் தேசியத்துக்காக பயணித்த ஒரு அர்ப்பணிப்பாளர் வே.தவராஜா அவர்கள் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version