வெடுக்குநாறி மலை விவகாரம் : வவுனியாவில் மாபெரும் போராட்டத்திற்கு மாவை அழைப்பு

வவுனியாவில் நாளை மறுதினம் (30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோல் வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.

அவர் குறித்த விடயம் தொடர்பில் விவரமாக தனக்கு அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார். அதன் அடிப்படையில் அவசரமாக அவருக்கு கடிதம் மூலம் பிரச்சினைகளை தெளிவாக எழுதி இருக்கின்றேன்.

அதேபோல நாளை மறுதினம் வவுனியாவில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம்  எமது குரல்களை எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.