நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு

IMG 20210804 165341 நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப் பட்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பாகவே நாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவருட காலப் பகுதிக்கு முன்பாகவே நகரில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச அதிபருடன் இணைந்து நாம் களவிஜயத்தின் மூலமாக ஆராய்ந்திருந்தோம்.

அந்த வகையில், மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, தமிழ்மத்திய மகாவித்தியாலயம், மற்றும் பொது வைத்தியசாலை வரையான வீதி, பூங்காவீதி ஆகியவற்றில் நடை பாதைகளை அமைத்தல், மற்றும் ஏ9 வீதிக்கு அருகாமையில் உபவீதி ஒன்றை அமைத்து அதனோடு இணைந்தவாறான வாகன தரிப்பிடம் ஒன்றையும் அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தோம். இந்த வேலைத் திட்டங்கள் நிச்சயம் நடக்கும்.

இது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட திட்டம் என்று சிலர் தெரிவித்திருக் கின்றனர். ஆனால் இதற்கான செயற்பாடுகளை கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவே நாம் முன்னெடுத் திருந்தோம்.

ஆயினும் அது ஆரம்பிக்கப்பட்ட பின்னரே அதனை அனைவருக்கும் வெளிப்படுத்தும் நோக்குடன் நாம் இருந்தோம். ஆனால் அரசியல் இலாபத்திற்காகவும், சுய லாபங்களிற் காகவும் தாங்களே இதனை கொண்டு வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர். எனவே இந்தப்பணிகள் கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவிருந்தே இடம்பெற்று வருகின்றது என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றேன்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021