வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ள வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு -பி.மாணிக்கவாசகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்;பு அந்தப் பிரச்சினையில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி விடயத்தில் குறிக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடித் திரியும் உறவுகள் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நீண்ட மௌனமே பதிலாகக் கிடைத்திருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறுமாறு கோரி தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களின் மூலம் அரச கதவுகளை அவர்களால் தட்ட முடியவில்லை.

ஆனால் நீதிமன்றம் தனமு முக்கியத்துவம் மிக்க தீர்ப்பின் மூலம் அரசாங்கக் கதவுகளை வலிமையாகத் தட்டியிருக்கின்றது. எவரும் அங்களிடம் சரணடையவில்லை என இதுவரையில் சாதித்து வந்த இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறுதி நேரத்தில் அவர்களுடைய பொறுப்பிலேயே இருந்துள்ளார்கள் என்பதை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தி அவர்களில் நானகு பேரை இம்மாதம் (மார்ச் மாதம்) 22 ஆம் திகதி நீதிமன்றத்திற் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று இராணுவத்திற்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட்டிருக்கின்றது.

அவ்வாறு அவர்களைக் கொண்டு வர முடியாவிட்டால், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. அதாவது அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு வர முடியாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நீதிமன்றத்திற்கு விளக்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் உட்பொருளாகும்;.

அது மட்டுமல்ல. இந்த ஆட்கொணர்வு மனுக்கள் ஆட்கள் இராணுவத்திடம் சரணமடைந்த முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் இராணுவ முகாமில் நடைபெற்றதனால், அது குறித்த ஆரம்ப விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு சாட்சியங்களில் வெளியிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் மறை பொருளாக நீதிமன்றம் தனத திர்ப்பில் வலியுறுத்தி இருக்கின்றது.

அந்த வகையில் இராணுவத்திடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

தமிழ் தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. யுத்த காலம் தொடக்கம் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிந்த பின்பும் 14 வருடங்களாகவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு இதுவரையிலும் முடிவு காணப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று பல தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்றது. ஆயினும் அரசாங்கம் அந்த பொறுப்பு கூறலை பின் போட்டுச் செல்கின்றது.

யுத்த காலத்தில் எண்ணற்றவர்கள் காணாமல் போயிருந்தார்கள். அவர்கள் வீதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்தார்கள். வாகனங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள.; பலர் இனம் தெரியாத முறையில் காணாமல் போயிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வழக்குகளுக்கு முகம் கொடுத்து பின்னர் ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால் பெரும் எண்ணிக்கையானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்;கள் எங்கே இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கின்றது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் முடிவு சொல்ல வேண்டும் அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்திருக்கின்றார்கள். அந்தப் போராட்டங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போயிருக்கின்றது. இருப்பினும் யுத்தம் முடிவற்ற 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இப்பொழுது மிகப் பெரிய அளவில் பேசப்படுகின்றது.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் ஆணை குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி விபரங்களைத் திரட்டியது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஆணைக் குழுக்களின் விசாரணைகளில் நம்பிக்கையற்ற நிலையில் பலர் சாட்சியம் அளிக்கச் செல்லவில்லை. இருப்பினும் சாட்சியமளித்த பலருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே தவிர அவர்களுக்கு எந்த விதமான முடிவும் சொல்லப்படவில்லை. இவ்வாறு 20,000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் புள்ளி விபரம் தெரிவித்திருக்கின்றது. ஆனாலும் இதையும்விட மேலும் அதிக எண்ணிக்கையானோர் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ஆனாலும் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் துல்லியமான விபரங்கள் இதுவரையில் சேகரி;க்கப்படவில்லை. வடமகாண சபை முதலமைச்சரின் கீழ் செயற்பட்டிருந்த போதிலும் அந்த சபையின் ஊடாகக்கூட இந்த காணாமலாக்கப்பட்டவர்களுடைய முழு விபரங்களும் துல்லியமாக திரட்டப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்களை அரசாங்கம் புனர்வாழ்வுப் பயி;ற்சியின் பின்னர் விடுதலை செய்துள்ளது. இருப்பினும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது.

இந்;த நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் தொகுதியாக ஐந்து பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை வவுனியா மேல் நீதிமன்றம் நடத்தியுள்ளது. இந்த விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் தமது கணவன்மாரும் பிள்ளைகளும் எவ்வாறு முல்லைத்தீவு வட்டுவாகல் இராணுவ முகாம் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என்பதை விபரித்திருந்தார்கள். இவர்களின் சாட்சியங்களை செவிமடுத்த நீதிமன்றம் இந்த காணாமலாக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடை பெற்றிருந்ததனால் முல்லைத்திவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தை பூர்வாங்க விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து வழக்குகளையும் பாரப்படுத்தியது.

செல்லையா விஸ்வநாதன் (சாந்தன்), பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்),  சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) மற்றும் நடேசு முரளிதரன், அவரது மனைவி கிருஸ்ணகுமாரி, அவர்களது ஐந்து வயது குழந்தை சாருஜன், மூன்று வயது குழந்தை அபிதா ஆகிய நால்வர் அடங்கிய முரளிதரனின் குடு;ம்பத்தினர் ஆகியோர் தொடர்பில் இந்த ஐந்து ஆட்கொணர்வு மனு வழக்குகளும் 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்று அவை தொடர்பான அறிக்கையை முல்லைத்தீவு நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததையடுத்து, அவற்றில் இரண்டு வழக்குகள் தொடர்பில் 2022 டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கு முடிவுற்ற பின்னர் அந்தத் தீர்ப்பு குறித்து, இந்த வழக்குகளில் முன்னிலையாகியிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்னவேல் பின்வருமாறு ஊடகங்களிடம் கருத்துரைத்தார்.

‘முதல் ஐந்து வழக்குகளின் பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விளக்கத்தில் எல்லா மனுதாரர்களும் சாட்சியம் அளித்தனர். இராணுவம் சார்பாக இராணுவ அதிகாரி சாட்சியமளிக்கும்போது சரணடைந்தவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகக் கூறியிருந்தார். எனினும் அந்தப் பட்டியல் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த (செல்லையா விஸ்வநாதன் என்பவருடைய) வழக்கின் பூர்வாங்க விசாரணை அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு முதலாவது வழக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் மனுதாரர் தன்னுடைய கணவரை தாங்களே நேரடியாக இராணுவத்திடம் சரணடைய வைத்தோம் என்றார்.  முகாமில் செய்த ஒலிபெருக்கி அறிவித்தலின் பிரகாரம் – அதாவது சரணடைந்தவர்கள் பாதுகாப்பாக வைக்ககப்படுவார்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தன்னுடைய கணவரை சரணடையச் செய்ததாகவும், அதன் பின் தன்னுடைய கணவரை வேறு பலருடன் இலங்கை போக்குவரத்துப் பேரூந்தில் அடைத்து இராணுவத்தினர் கொண்டு சென்றனர் என்ற அந்த சாட்சியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

எனவே இறுதியாக அந்த மனுதாரரின் காணாமல் ஆக்கப்பட்ட கணவர் (செல்லையா விஸ்வநாதன்) இராணுவத்தின் மத்தியில்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதை மன்று ஏற்றுக்கொண்டது. அதே சமயத்தில் அதனை எதிர்த்த இராணுவ தரப்பினர் அது தொடர்பாக திருப்திகரமான பதிலையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்தது.

அதாவது காணாமல் ஆக்கப்பட்ட நபர் இராணுவத்திடம் சரணடையவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் இருந்தது. ஆனால் அந்தப் பொறுப்பை அவர்கள் சரிவர தங்களுடைய சாட்சியங்களின் மூலம் எண்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது.

எனவே மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம் ஆட்கொணர்வு மனுவினுடைய எழுத்தாணையை நீதிமன்றம் அனுமதித்து, அடுத்த தவணையாகிய மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டது.

அதே சமயத்தில் இன்னுமொரு (நடேசு முரளிதரனும் அவருடைய நான்கு பேர் அடங்கிய குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட) வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்க வில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது என்றார் சட்டத்தரணி கே.எஸ்.இரட்னவேல்.

இந்த வழக்குகளில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய மனைவிமாரும் தாய்மாரும் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது தாங்கள் எவ்வாறு இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு வந்தார்கள் வரும்பொழுது எத்தகைய அனுபவங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பி முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை தமது சாட்சியங்களில் விபரித்தார்கள்.

தோலைவில் சண்டைகள் நடைபெற்றதனால் தாங்கள் தமது கிராமங்களில் பாதுகாப்பாக இருந்ததாகவும், பின்னர் தமது கிராமங்களுக்குள்ளேயும் எறிகணைகள் (ஷெல்கள்) வீழ்ந்து வெடித்து உயிர்களைப் பலி கொண்டதாலும் சொந்த இடங்களில் இருக்க முடியாமல் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்ததாக அவர்கள் சொன்னார்கள்.

இடம் பெயர்ந்து சென்ற இடங்களுக்கெல்லாம் ஷெல்கள் வந்து வீழ்ந்து வெடித்து பலரும் உயிரிழக்கவும், படுகாயமடையவும் நேர்ந்ததனால் இடத்துக்கு இடம் விட்டு அடிக்கடி இடம்பெயர்ந்து ஊர் ஊராக இடம்பெயர்ந்து அவலப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். தங்களது இடப்பெயர்வுகளின் போது மழையாகப் பொழிந்த ஷெல்கள் எவ்வாறு ஏவப்படுகின்றன என்பது நுணுகிக் கவனித்து அதற்கேற்ப தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்ற உத்தியை கடைப்பிடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஷெல் குண்டுகள் மோட்டார்களில் இருந்து புறப்படும்போது ஒரு சத்தம் கேட்கும் என்றும் அது ஷெல் புறப்பட்டு விட்டது என்பதைத் தெரிவிக்கின்ற அடையாளம் என்பதைக் கண்டு கொண்டதாகவும், அந்த ஷெல்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு தமது இலக்கை நோக்கிச் சென்று வீழ்ந்து வெடிப்பதற்கு சில நிமிடங்கள் செல்லும் என்பதையும் கணக்கிட்டு வைத்திருந்ததாகவும், அதற்கேற்ப சில வேளைகளில் ஷெல்களின் இலக்கைக் கூட தங்களால் அனுமானிக்கக் கூடியதாக இருந்ததாகவும், இதனால் அவற்றின் தாக்கத்தில் இருந்த பல தடவைகள் உயிர்தப்பியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று விமானக் குண்டுத் தாக்குதல்கள் எரிகுண்டு மற்றும் இரசாயன குண்டு கொத்துக்குண்டு என்பனவும் ஏவப்பட்டதாகவும் இதனால்  பல இடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மிதித்துக் கொண்டு குண்டு மழைகளில் இருந்து உயிர் தப்பி ஓடி வந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களை குறுக்கு விசாரணை செய்த இராணுவ தரப்பு சட்டத்தரணி நீங்களெல்லாம் படிப்பறிவற்றவர்கள். அறிவில்லாதவர்கள். இராணுவ விடயங்களைத் தெரியாதவர்கள் எவ்வாறு பல்வேறு வகையான குண்டுகள் ஏவப்பட்டன என்பதைக் கூற முடியும்? நீங்கள் கூறுவது எல்லாமே பொய் என கண்டனத் தொனியில் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குப் பதிலளித்த அவர்கள் தங்கள் கிராமங்களில் சில இடங்களை நோக்கி எதிர்பாராத விதமாக குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும் பேரிரைச்சலுடன் அந்த விமானங்கள் வரும் போது அவற்றின் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டதுடன், அவைகள் வானத்தில் எத்தனை தடவைகள் வட்டமடித்ததன் பின்னர் குண்டுகளை ஏவின என்பதையும் அவதானித்திருந்ததாகவும் அது தங்களது உயிர்களைக் காத்துக் கொள்ள உதவியதாகவும் தெரிவித்தனர.

வெடிக்காமல் மண்ணுள் புதையுண்ட குண்டுகளைப் பார்வையிட்டு எத்தகைய குண்டுகள் ஏவப்படுகின்றன அவற்றின் நிறை என்ன அதன் பாதிப்பென்ன என்பதைக் கூட அறிந்திருந்ததாகவும் படுகாயமடைந்தவர்களின் காயங்களைப் பார்த்து எத்தகைய குண்டுகளுக்கு அவர்கள் இலக்காகியிருந்தார்கள் என்பதை அனுமானிக்கின்ற வல்லமையையும் தாங்கள் பெற்றிருந்ததாகவும் கூறினார்கள்.

அத்துடன் எரி குண்டுகள், இரசாயன குண்டுகள் என்பன ஏவப்பட்டதை அவற்றின் தாக்கத்தில் காயமடைந்தவர்களின் காயங்களை வைத்து தாங்கள் இனங்கண்டு கொண்டதாகவும் அதேபோன்று குண்டுகள் வெடிக்கின்ற தன்மையைக் கொண்டு கொத்துக் குண்டுகள் ஏவப்பட்டன என்பதையும் அவர்கள் அடையாளம் கண்டிருந்ததாகவும் தெரிவித்தார்கள்.

இறுதியாக சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்த பின்னரும் அங்கேயும் தாக்குதல்கள் தொடர்ந்ததனால் முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேர்ந்ததாகவும் யுத்தம் முடிவடைந்ததும் இராணுவத்தினர் தங்களை கோத்தாபாயா முகாமுக்குக் கொண்டு சென்று ஒரு பரந்த வெளியில் முள்ளுக்கம்பி கூடமைத்து லட்சக்கணக்கான மக்களை ஒரு நாள் முழுதும் அடைத்து வைத்திருந்து விட்டு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக மறுமுனையில் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றதாகவும் அந்த சந்தர்ப்பத்திலேயே தமது கணவன்மார் அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தையடுத்து இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவர்களைத் தாங்களே சரணடையச் செய்ததாகவும் அப்போது பதிவுகளின் பின்னர் சரணடைந்தவர்களை பேரூந்துகளில் ஏற்றி இராணுவத்தினர் கொண்டு சென்றதைக் கண்டதாகவும் அவர்கள் தமது சாட்சியத்தில் தெரிவித்தனர்.

அந்த சாட்சிகள் தமது சாட்சியங்களில் இது போன்ற பல விடயங்களைத் தெரிவித்தவற்றை உள்ளடக்கிய அறிக்கையையே முல்லைத்தீவு நீதிமன்றம் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி இருந்தது. அந்த அறிக்கையைப் பரிசீலனை செய்த பின்னர் ஐந்து வழக்குகளில் எஞ்சியிருந்த மூன்று வழக்குகள் தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் 2022 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி வழங்கியது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்தத் தீர்ப்புக்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று இந்த வழக்குகளில் முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கூறினார். வழக்கு முடிந்த பின்னர் அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் தொடர்பில் அவர் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.

‘இன்று மூன்று வழக்குகளில் வழங்கப்பட்ட  தீர்ப்பின்படி, காணாமல் ஆக்கப்பட்டவர் அன்றைய தினம் சரணடைந்தார் என்பது சாட்சிகள் கூறிய சாட்சியங்களில் ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தி அடைந்து அவர் இராணுவத்தினரால் அவருடைய வசம் இருக்கலாம் அல்லது அவர்களால் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் அத்தகைய நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் வருகிற மார்ச் மாதம் 22 ஆம் தேதி இந்த வழக்குகள் திகதியிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஏபியஸ் கோப்பர்ஸ் என்று சொல்லப்படுகின்ற ஆட்கொணர்வு மனு மீதான அந்த கட்டளை இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆக்கப்பட்டிருக்கிறது. இது  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணத்தில் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இத்தனை நாள் வரையில் இந்த வழக்குகள் ஒன்பது வருடங்களுக்கு பிறகு பூரணமாக நிறைவடைந்து இருக்கின்றன. எனவே இது பற்றி அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அத்துடன் இது தொடர்பில் இலங்கை இராணுவம்  இதற்கான காரணத்தை சொல்லித்தான் ஆக வேண்டும். இதற்கு பொறுப்பு கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரைக்கும் ஏதோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கிறது. அதை அவர்கள் சொல்லித்தான் ஆக வேண்டும.; எனவே நீதிமன்றங்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி ஒரு நிவாரணம் என்றுதான் இதைக் கருத வேண்டி இருக்கிறது. இதைப்பற்றி எல்லாரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

அது மட்டுமல்ல இதுவரை மழுங்கடிக்கப்பட்டிருக்கின்ற மறைக்கப்பட்டிருக்கின்ற பல உண்மைகள் இந்த வழக்குகள் மூலம் வெளிவந்திருக்கின்றன. எனவே இனிமேலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றார்; சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல்.

இந்த நீதிமன்றத் தீர்ப்புக்கள் ஒருபக்கம் இருக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி வவுனியா முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்;ட பிரதேசங்களில் தாய்மார் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்ற காட்சிகளையும் காணக் கூடியதாக உள்ளது.