வவுனியா-வறுமை நிலையில், வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த இருவர் கைது

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 – 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர்.

அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.