Tamil News
Home செய்திகள் அவசியமான நிதியியல் உத்தரவாதம் கிடைத்த பின் இலங்கை IMF கடனுதவியைப்பெற தடை இருக்காது-பீர்-ஒலிவியர்...

அவசியமான நிதியியல் உத்தரவாதம் கிடைத்த பின் இலங்கை IMF கடனுதவியைப்பெற தடை இருக்காது-பீர்-ஒலிவியர் கோரின்சாஸ்

இலங்கை இன்னமும் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை அதன் கடன்வழங்குனர்களுடன் முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளரும் பொருளியல் ஆலோசகருமான பீர்-ஒலிவியர் கோரின்சாஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களிடமிருந்தும் அவசியமான நிதியியல் உத்தரவாதம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடையும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கத்தயாராக இருப்பதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்தமுடியும் என்பதுடன், அது வரவேற்கத்தக்கதொரு நகர்வாகும்.

இந்தியா பாரிஸ் கிளப்பில் அங்கம்வகிக்காத, இலங்கையின் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் நாடாகும். அதேவேளை இந்தியாவினால் அளிக்கப்பட்டதை ஒத்த நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அதன் ஏனைய இருதரப்புக் கடன்வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடன்வழங்குனர்களின் உத்தரவாதம் கிடைக்கப்பெற்றவுடன் எவ்வித தடையுமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்குக் கிட்டும் என்றும், அதன்மூலம் நாடு முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘இலங்கையின் ஏனைய இருதரப்புக் கடன்வழங்குனர்களின் அவர்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றும் பீர்-ஒலிவியர் கோரின்சாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version