எமது வரலாற்றை நாமே பிறழ்வுக் குள்ளாக்குவது எதற்காக?

சமஸ்டி என்ற பதமும் வேண்டாம். சிங்களவர்கள் மிரள்கின்றனர். தனிநாடும் புலிகளுடையது எங்களுடையது அல்ல. புலிகளில் இருந்து எம்மை விலக்கி வைப்பதே தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வழி. சிங்கள மக்களிற்கு சிங்களத்தில் நாமே அனைத்தையும் விளக்கிக் கூறி அவர்களை வென்றெடுக்க வேண்டும்… இது எம்மில் சிலர் இன்று முன் வைக்கும் வாதங்கள். அதுவும் தமிழரசுக்கட்சி சார்பில் முன் வைக்கும் வாதங்கள்.

ஆனால் வரலாறு மோசமாக இடிக்கிறதே. தந்தை செல்வா தமிழரசுக்கட்சி என்று தானே 1949இல் பெயரிட்டார். தமிழ் அரசு என்றால் என்ன விளக்கம் என அன்று பிறந்தேயிராமல் இன்று அதற்கு புதிய விளக்கம் அளிக்க முயல்பவர்களை கேட்க ஆசையாக இருக்கிறது? இருக்க Federal Party என அது ஆங்கிலத்தில் அமைந்தது. இந்த இடரலுக்கு மன்னிக்கவும் பெடரலுக்கு என்ன அர்த்தம்?

இருக்க 70 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, அடுத்து வரப்போவதை தீர்க்கதரிசனமாக நினைத்துஇ தமிழர்களை இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனத் தந்தை செல்வா ஏன் சொன்னார்? அதன் படலம் அரங்கேற தானே ஜி.ஜி. பொன்னம்பலம் வீடு சென்றுஇ நாங்கள் எம் இனத்தின் நலன்கருதி ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என வேண்டிஇ எதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒன்றுபட்ட தமிழர் பேரியக்கத்தை உருவாக்கினர்?

இதில் விடுதலை என்பதன் அர்த்தம் தான் என்ன? ஆங்கிலத்தில் வேறு அது Liberation என அமைந்தது. அந்த லிபரேசனின் அர்த்தம் தான் என்ன? 1976 இல் மேற்க்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ன சொன்னது? அதில் விடுதலைக்கும் லிபரேசனுக்குமான அர்த்தம் தான் என்ன? இந்த நிலைக்கு வருவதற்கு முன்னர் 1948இல் இருந்து 76 வரையிலான 28 வருடகால தமிழர் அரசியல் வரலாறு புகட்டும் பாடங்கள் தான் என்ன?
இவ்வாறு அகலஇ விரிந்துஇ பரந்து கிடக்கும் வரலாற்றை எங்கு ஒளித்தவிடலாம் என எம்மில் சிலர் கனவு காண்கின்றோம்?

இந்த வரலாற்றில் உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு இனத்தின் குருதி வழிந்தோடிக்கிடக்கிறது. அதன் ஆத்மா குத்திக் குதறி சிதைக்கப்பட்டுக் கிடக்கிறது. இந்தப் புரிதலை ஏற்க மறுக்கும்இ அதன் வலிகளை உணரத் தவறும் எந்த இனமாவது எமக்கு நிரந்தரமான தீர்வொன்றைத் தர முடியுமா? முயலுமா?

வரலாறும் உண்மைகளும் மட்டுமே எம்மை விடுவிக்கும் வாழவைக்கும். யாரையோ திருப்திப்படுத்த முனைகின்றோம் என எம்மை நாம் ஏமாற்றி ஏனையவர்களையும் ஏமாற்றலாம் என முனைவது கானல் நீரிற்கு ஒப்பானது. இப்புரிதலை எப்போது ஏற்படுத்திக் கொள்ளப்போகிறோம்? எமது வரலாற்றை பிறழ்வுக்கு உட்ப்படுத்துவதை எப்போது நிறுத்திக் கொள்ளப் போகின்றோம்?

நாம் பேசுபவர்கள் உண்மையாக புத்த சமயத்தைக் கைக்கொள்பவர்களாக இருந்தால் எமது வரலாறு அவர்கக்குப் புரியும். எமது வலிகளை அவர்கள் உணர்வார்கள். உண்மையை ஏற்று அதற்கான பரிகாரங்களிற்கு முனைவார்கள். அது தனித்துவமான உரிமைகளின் அடிப்படையில் எம்மிரு இனத்தின் உயரிய வாழ்விற்கு இலங்கைத்தீவில் வித்திடும். அது தான் உண்மை. அது தான் யதார்த்தம். இதற்கான முயற்சிகள் இருவழிப்பாதை. ஒருவழிப்பாதையல்ல.

VADDUKODDAI RESOLUTION

This Convention directs the Action Committee of the TAMIL UNITED LIBERATION FRONT to formulate a plan of action and launch without undue delay the struggle for winning the sovereignty and freedom of the Tamil Nation;And this Convention calls upon the Tamil Nation in general and the Tamil youth in particular to come forward to throw themselves fully into the sacred fight for freedom and to flinch not till the goal of a sovereign state of TAMIL EELAM is reached.