செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்

பாதிக்கப்படும் வறிய நாடுகள்

செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள்

தமிழில்: ஜெயந்திரன்

கோவிட் 19 நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கும் அந்த வைரசின் பரவலைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், இந்தப் பூகோளத்திலுள்ள 8 பில்லியன் மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் சொல்லொணாப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பெருந் தொற்றும் உலகின் பல்வேறு நாடுகள் இந்த நெருக்கடியைத் தணிக்க எடுத்து வரும் செயற்பாடுகளும் மனித உரிமைத் துர்ப்பிரயோகப் பெருந் தொற்றையும் ஏற்கனவே உலகில் நிலவுகின்ற வறுமையையும் ஏற்றத் தாழ்வையும் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.

கோவிட் 19க்கான தடுப்பூசிகள், அதற்கான சிகிச்சை வசதிகள், மற்றும் சுகாதாரத் தொழில் நுட்பங்கள் என்பவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய வகையில் இந்தப் பெருந்தொற்றுத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் போது, மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படி உலக சுகாதார தாபனம் உலக அரசுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இவையனைத்தும் பொதுச் சுகாதார விடயங்களாக உலகத்தால் கணிக்கப்படுவது மட்டுமன்றி, ஆரோக்கியமாக வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற மனித உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகவும் இது நோக்கப்படுகின்றது.

பாதிக்கப்படும் வறிய நாடுகள்ஆரோக்கியமாக வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு என்று வாய்ப் பேச்சுக்காகப் பேசுகின்ற பலர், தடுப்பூசி தொடர்பான அறிவியல் சொத்துரிமை விலக்களிக்கப்பட வேண்டும் என உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) மேற்கொண்ட முன்மொழிவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அறுபத்து நான்கு (64) நாடுகளின் இணை அனுசரணையுடன் கடந்த ஆண்டு (2020) ஒக்ரோபர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு மேலும் பல நாடுகள் தங்களது ஆதரவை வழங்கியிருக்கின்றன.

கோவிட் 19க்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்குத் தேவைப்படுகின்ற அறிவியல், அதற்கான தொழில்நுட்பம், தேவைப்படும் பொருட்கள், சிகிச்சை முறைகள் என்பவற்றை உலகம் பூராவும் அனைவரும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் முயற்சிக்குக் குறுக்கே இந்த நாடுகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

கோவிட் 19க்கான தடுப்பூசிகளையும், சிகிச்சை முறைகளையும் பெற்றுக் கொள்ள அறிவுசார் சொத்துரிமைகள் மட்டும் தடை அல்ல என்ற போதிலும் குறிப்பிடத்தக்க தடையை இவை ஏற்படுத்தி வருகின்றன. இதே போலவே, ஆரோக்கியம் தொடர்பான சிகிச்சை முறைகளை அனைவரும் சமமாகப் பெற்றுக் கொள்வதற்கு அளிக்கப்படும் விதிவிலக்கு மட்டும் தடையாக அமைவதில்லை என்ற பொழுதும் இவ்வாறான விடயங்கள் சமமாகப் பகிரப்படுதவற்கு அது அத்தியாவசியமான ஒன்றாகும்.

கோவிட் 19 பெருந்தொற்றைப் பொறுத்தவரையில், அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக ஏற்கனவே இருக்கின்ற தளர்வுகள் போதுமானவையல்ல. மேலும் கடந்த காலத்தை நோக்கும் போது, அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில்  உலக வர்த்தக அமைப்பு விதிவிலக்குகளை அளித்த வரலாறுகளும் உண்டு. மருந்துகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பொதுச்சுகாதார இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல, 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டோஹாப் பிரகடனம் (Doha Declaration)  பகுதியாகவும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்ளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

téléchargement 1 செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்மேற்குறிப்பிட்ட விதிவிலக்குக்கு பலம் வாய்ந்த அரசுகள் காட்டுகின்ற எதிர்ப்பு தொடர்பாக ஐநாவின் பல்வேறு குழுக்களும் (UN Treaty bodies) ஐநாவின் விசேட செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களும் உலக சுகாதார தாபனமும் கவலையடைந் திருக்கின்றன. இவ்வாறு இந்த நாடுகள் காட்டுகின்ற எதிர்ப்பைத் தொடர்ந்து, ‘பொதுமக்களுக்கான ஒரு தடுப்பூசி தேவை’ என்ற பரப்புரையும் இந்தப் பெருந்தொற்றை நீடித்து, அவ்வாறு நீடிப்பதன் மூலம் கட்டமைப்பு ரீதியிலான இனப்பாகுபாடு தொடர்ந்து நீடிக்க காரணமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியம், நோர்வே, சுவிற்சர்லாந்து இன்னும் இதனை எதிர்க்கின்ற ஏனைய நாடுகளுக்கு எதிராக இனரீதியிலான பாகுபாட்டை ஒழிப்பதற்குப் பொறுப்பான ஐநா சபையிடம் முறையிடப்பட்டிருக்கிறது.

இதுவரை ஆகக்குறைந்தது 5 மில்லியன் மக்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்து, உலகம் முழுவதும் வாழுகின்ற மக்களின் வாழ்வை சின்னாபின்ன மாக்கியிருக்கின்ற  கோவிட் – 19 பெருந்தொற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பின்புலத்தில், தமது பன்னிரண்டாவது (12) அமைச்சர்களின் மாநாட்டுக்காக உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் இவ்வாரம் சந்திக்க இருக்கின்றன. ஒமிக்குறோன் (Omicron) என்று அழைக்கப்படுகின்ற திரிபடைந்த கொரோணா வைரசின் தாக்கம் தற்போது அதிகமாக இருக்கின்ற படியால், இந்த உயர்மட்ட மாநாடு தற்போது பிற்போடப்பட்டிருக்கிறது.

உலகில் வாழுகின்ற பெரும்பாலான மக்களது உயிரைக் காக்கவல்ல கோவிட் – 19 தடுப்பூசிகளையும் அதற்கான உரிய சிகிச்சைகளையும் இன்னும் பெற்றுக் கொள்ள முடியாது தவிக்கின்ற ஒரு சூழலில் இந்த புதிய வைரஸ் திரிபு மக்களை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. மிகவும் குறைவான வருமானத்திலிருந்து நடுத்தர வருமானத்தைக் கொண்டிருக்கின்ற தென்பூகோள நாடுகளின் பெரும்பாலான நாடுகள் இவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளுகின்றன.

பாதிக்கப்படும் வறிய நாடுகள்வடபூகோளத்தில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போது தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்கும் அதே வேளை, இந்த ஊக்கித் தடுப்பூசிகளை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார தாபனம் கேட்டிருக்கும் பின்புலத்தில், இவர்களில் சிலர் ஊக்கித் தடுப்பூசிகளையும் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்கும் பின்னணியில் ஆபிரிக்க கண்டத்தில் வதிகின்ற 7 வீதமானோர் மட்டுமே தடுப்பூசிகளை இதுவரை பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக “இந்தக் கோவிட் நோய் இப்போது அடிப்படையில் ஏழை மக்களதும் வறிய நாடுகளினதும் நோயாக மாறிவிட்டது” என்று உலக சுகாதாரத் தாபனத்தின் ஒரு முன்னணிப் பிரதிநிதி கொரோனா வைரஸ் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்திலுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குமான மாநாட்டில் அங்கு வதியும் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூறியிருக்கிறார்.

ஆரோக்கியம், விஞ்ஞானம் மற்றும் இனப்பாகுபாடு அற்ற கொள்கை ஆகியவற்றுக்கான உரிமையைக் கொண்டிருக்கின்ற பன்னாட்டுப் பொருண்மிய, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான உடன்படிக்கையின் அடிப்படையிலும், உயிர் வாழ்வதற்கான உரிமை, சமத்துவம் மற்றும்  இனப்பாகுபாடு அற்ற கொள்கை, குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை போன்றவற்றுக்கான பன்னாட்டு உடன்படிக்கையின் அடிப்படையிலும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் தமக்கான கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் இப்படிப்பட்ட ஒரு சூழல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

முன்மொழியப்பட்ட இந்த விலக்களிப்புத் தொடர்பாக ஒரு சட்ட ரீதியிலான தங்கள் கருத்தை ஜூரர்களின் பன்னாட்டுச் சபை நவம்பர் மாதம் 8ம் திகதி வெளியிட்டிருந்தது. உலகளாவிய வகையில் 140 நிபுணர்களினால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கும் இந்தக் கருத்து, மேற்குறிப்பிட்ட இரண்டு உடன்படிக்கைளிலும் பங்கு வகிக்கின்ற உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு ஆகக்குறைந்தது இந்த விலக்களிப்பை எதிர்க்காது இருக்கின்ற கடப்பாடு உண்டு என்று தெரிவித்தது. இக்குறிப்பிட்ட விலக்களிப்புக்கு எதிராக தடைகளைப் போடும் போது இந்த நாடுகள் சட்டபூர்வமாக அவர்களைக் கட்டுப்படுத்துகின்ற இந்த ஆவணத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.

இந்த விலக்களிப்பை எதிர்ப்பதற்கோ அல்லது தாமதிப்பதற்கோ அல்லது அதற்கு எதிரான தடைகளைப் போடுவதற்கோ தொடர்புபட்ட நாடுகள் என்ன காரணத்தைக் கூறினாலும், கோவிட் – 19க்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் சமத்துவம் அற்ற முறையில் வழங்கப்படுவதை நியாயப்படுத்துகின்றனர். இதன் விளைவு தெளிவானது:  தென் பூகோளத்தின் வளங்கள் குறைந்த நாடுகளில் வாழ்கின்ற சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்கள் நடுவில் ஏற்படுகின்ற கோவிட் தொற்று, நோய், சாவு போன்ற விடயங்களில் விகிதாசாரமற்ற முறையில் அதிகரிப்பு ஏற்படுகிறது.

அதுமட்டுமன்றி, கோவிட்-19 தொற்றுத் தொடர்பான ஆரோக்கியத் தொழில் நுட்பங்கள் சமமற்ற முறையில் வழங்கப்படுவதன் காரணமாக, ஒமிக்ரோன் அடையாளப்படுத்தல் காண்பிப்பது போன்று, திரிபடைந்த நுண்ணுயிரிகள் அதிகமாக உருவாகி, பெருந்தொற்று தொடர்ந்து நீண்டு செல்லவும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அதிகம் பாதிக்கின்ற முடக்கநிலை போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அழுத்தத்தையும் கொடுக்கின்றன.

உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடு கூடுகின்றபோது, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளும் அவற்றின் பிரதிநிதிகளும் தங்களது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் போதும் தங்கள் வாக்களிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத யதார்த்தங்களாக இவ்விடயங்கள் அமைகின்றன.

அரசியல் ரீதியாக வெளியில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டாலும், சட்டங்கள் எவ்வாறு தான் தெளிவின்மையைத் தோற்றுவித்தாலும் மிகச் சாதாரணமான உண்மையை மறைத்துவிட முடியாது: உலக வர்த்தக அமைப்பின் அறிவியல் சொத்துரிமைக்கான விலக்களிப்பை எதிர்த்துக் கொண்டு, இலாபம் ஈட்டுவது ஒன்றை மட்டும் மையமாகக் கொண்ட மருந்து தயாரிக்கின்ற நிறுவனங்களின் வர்த்தக நலன்களை முதன்மைப்படுத்தி, தேவைக்கு அதிகமான கோவிட் 19 தடுப்பூசிகளைக் சேர்த்து வைப்பதன் மூலம் வறிய நாடுகளிலுள்ள மக்கள் நடுவில் நோய் அதிகரிக்கவும் இறப்புகள் ஏற்படவும் இவ்வரசுகள் காரணமாகின்றன.

பாதிக்கப்படும் வறிய நாடுகள்இதைவிட மோசமானது என்னவென்றால் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடாது அல்லது தொடரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தத் தென் பூகோளத்தில் உள்ள பல நாடுகள் நீண்ட காலமாக முயன்று வந்திருக்கின்றன. அறிவியல் சொத்துரிமை விலக்களிப்பின் மீது நீண்ட தாக்கத்தைச் செலுத்துகின்றது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் மீதும் அதன் உறுப்பு நாடுகள் மீதும் அதன் பிரதிநிதிகள் மீதும் வரலாறு நிச்சயம் தனது தீர்ப்பை மேற்கொள்ளும். அது இப்போது அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் ஒன்றாகவும் நடந்ததுக்கு வருத்தத்தைத் தெரிவிக்கும் ஒன்றாகவும் அமையலாம். அல்லது மனித உரிமைகளினதும் சட்டத்தின் ஒழுங்கினதும் வெற்றிக் கொண்டாட்டமாகவும் அமையலாம். காலநிலைப் பேரழிவுகளும் பெருந்தொற்றுகளும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின்புலத்தில் பூகோளரீதியாக ஏற்படுகின்ற நெருக்கடிகளை உலக நாடுகள் எவ்வாறாகக் கையாளுகின்றன என்பதற்கு எதிர்காலத்தில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் முன்னுதாரணங்களாக அமையலாம்.

நன்றி: அல்ஜசீரா

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad செல்வந்த நாடுகளால் தடுக்கப்படும் தடுப்பூசி: பாதிக்கப்படும் வறிய நாடுகள் தமிழில்: ஜெயந்திரன்