வடக்கின் சுற்றுலா வரைபடங்களில் தமிழினத்தின் வரலாறு திரிபுபடுத்தல் – சீ.வீ.கே. கடிதம்

வடக்கு மாகாண சுற்றுலா வரைபடங்களில் தமிழ் இனத்தின் வரலாறு, கலாசாரம், சமயம் சார்ந்த விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. வடக்கு மண்ணினதும், மக்களினதும் வரலாற்று விடயங்களை பாதுகாக்க வேண்டிய வடமாகாண சபை நிர்வாகம் அவற்றை திரிபுபடுத்துவதற்கு ஒருபோதும் பங்காளியாகஇருக்க முடியாது.

இவ்வாறு குறிப்பிட்டு, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், வடக்கு மாகாண சுற்றுலா வரைபடங்களில் தவறுகள் தொடர்பில் சங்கானை – மதவடியை சேர்ந்த க. தீபன் என்பவர் முறைப்பாடு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வடக்கு மாவட்டங்களை சாராத பல இடங்களும் மதத்தலங்களும் வடக்கு மாகாண மாவட்டங்களுடன் உள்ளடக்கப்பட்டு பல திரிபுபடுத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அயல் மாவட்டங்களில் உள்ள பௌத்த விகாரைகள் வட மாகாணத்து மாவட்டங்களுடன் இணைத்து பதிவிடுவது மிகவும் பாரதூரமானது. இந்த முறைப்பாடுகளின் உண்மை தன்மைகள் துரிதமாகவும் சுயாதீனமாகவும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது என்று கருதப்படுகின்றது.

முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகள் ஏதாவது சரியெனக் காணப்படின் அவற்றைத் திருத்துவதற்கான துரித நடவடிக்கை எடுத்தல் கட்டாயமாகிறது” என்றுள்ளது.