இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்,கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்

கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்

கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் எனவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் விதமாக எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என்றும்  ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் நீண்டகாலமாக வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகின்றது, அரசியல் அமைப்பு ரீதியில் ஒரு சில விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் முழுமையான அரசியல் தீர்வொன்று இல்லை.

தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இந்த விடயங்கள் குறித்து பேசுவதுடன் முடிந்துவிடுகின்றது. தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில் தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை நிறைவேற்றும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.

எனவே சர்வதேச நாடுகளின் மூலமாக எமக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இப்போதும் நாம் கொண்டுள்ள நிலைப்பாடு என்பதையும், எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும்.

தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டுள்ளது, அமெரிக்கா மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்கின்றமை திருப்தியளிக்கின்றது. அதேபோல் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா தீர்மானம் எடுக்க வேண்டும்” என சம்பந்தன்  ஜூலி சங்கிடம் தெரிவித்திருந்தார்.

மேலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை குறித்த சந்திப்புகள் இடம்பெறவில்லை என்பதையும், இறுதியாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தைகள் இரத்தானது குறித்தும் சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் எனவும், அதேபோல் அரசியல் தீர்வு விடயங்களிலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்திலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் எனவும் கூறியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் விதமாக அதற்கான அழுத்தங்களை முன்வைப்பதுடன் எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரும் விரிவான தீர்மானத்தின் போது அதனை நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

Tamil News