மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா

மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும்துரைசாமி நடராஜா

மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும்

மலையக மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அடிப்படை தேவைகளுக்குக் கூட இம்மக்கள் போராடும் நிலைமை மேலோங்கி வருகின்றது.

எனினும் போராட்டத்தின் மூலம் கிடைக்கும்   சாதக விளைவுகள் குறைவாகவே உள்ளன என்பதும் தெரிந்த விடயமாகும். மலையகம் இன்னும் பல்வேறு வெற்றி இலக்குகளையும் அடைந்து கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது. இவ்விலக்குகளை  அடைந்து கொள்வதற்கும், மலையக சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சகல துறை சார்ந்தவர்களினதும்  பங்களிப்பின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் பெண்களின் வகிபாகம்  தொடர்பில் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள். இந்த வகையில் குடும்பம், சமூகம், நாடு என்று எல்லா மட்டங்களிலும் பெண்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றார்கள். பெண்களை புறந்தள்ளுகின்ற சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை எட்டிப் பிடிப்பதில் சிரமமுள்ளது என்பதும் தெரிந்த விடயமாகும். எனவேதான் உலக நாடுகள் பெண்களுக்கு உரிய இடமளித்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. சமகாலத்தில் பால்நிலை சமத்துவம் தொடர்பில் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. பால் நிலையை மையப்படுத்தி பெண்களை புறந்தள்ளும் விடயங்கள் கண்டிக்கப்பட்டு வருகின்றன. “ஆணுக்கு பெண் நிகர்”, என்ற கோஷங்கள் தற்போது வலுப்பெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டு, பேசா மடந்தையாக அவர்களை வழிநடத்திய காலம் இப்போது மலையேறிவிட்ட நிலையில், பெண்களின் ஆதிக்கம் இப்போது பல துறைகளிலும் எதிரொலிப்பதும் தெரிந்ததேயாகும். சில வேளைகளில் பெண்கள் ஆண்களையும் முந்திச் செல்லும் நிகழ்வுகளும் இல்லாமலில்லை. இது ஒரு சிறப்பம்சமேயாகும்.

பெண்கள் இவ்வாறாக பல துறைகளிலும் பல சமூகங்களிலும் ஆழக்கால் பதித்து வருகின்ற நிலையில், மலையக பெருந்தோட்ட பெண்களின் அபிவிருத்தி அல்லது எழுச்சி தொடர்பில் இன்னும் திருப்தி கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்தகாலங்களைக் காட்டிலும் இப்பெண்களிடையே முன்னேற்றங்கள் காணப்படுகின்றபோதும் அது பூரணத்துவம் மிக்கதாக இல்லை. இவர்களின் அபிவிருத்தி இலக்குகள் இன்னும் அதிகமுள்ள நிலையில், அவற்றை அடைந்து கொள்ள துரிதமான வழிகாட்டல்கள் மற்றும் செயற்பாடுகள் என்பனவும் அவசியமாகவுள்ளது. இதேவேளை பெருந்தோட்டப் பெண்கள் தோட்டத் தொழிற்றுறையில் மட்டுமே ஈடுபட்டுழைத்த காலம் மாறியுள்ள நிலையில், இப்போது பல துறைகளிலும் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் தோட்டத்துறை சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ள மலையக இளம் பெண்கள்  புரியும் தொழில்களின் தன்மை குறித்து பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட  விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றமை நோக்கத்தக்கதாகும்

“இப்பெண்களில் 72.92 வீதத்தினர் தற்காலிக அல்லது நிரந்தரமற்ற தொழில்களிலும், 27.06 வீதத்தினர் மட்டுமே நிரந்தர தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நிரந்தர தொழில் தன்மையைக் கொண்டோர் பெரும்பாலும் அரசாங்கத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோராகவும், தற்காலிக தொழில்களில் ஈடுபட்டுள்ள இளம் பெண்களில் பெரும் பகுதியினர் தனியார் வர்த்தக நிலையங்கள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் அல்லது சுயதொழில்களில் ஈடுபட்டு உழைப்போராகவும் காணப்படுகின்றனர். மேலும் தோட்டத் துறையற்ற தொழில்களை நாடும் இளம் மலையக பெண்களில் 63.53 வீதத்தினர் நகரத்துறையிலும், 4.71 வீதத்தினர் கிராமியத் துறையிலும், 28.82 வீதத்தினர் தோட்டத் துறைக்குள்ளே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தொழில்களிலும் 2.94 வீதத்தினர் வெளிநாட்டுத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பெண்களில் 2.35 வீதத்தினர் மட்டுமே அரச நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர். 52.37 வீதத்தினர் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் வியாபார நிலையங்களிலும் தொழில்புரிகின்றனர்.

தொழிற்பயிற்சி நிலையங்கள்

இதேவேளை வெவ்வேறு தொழில்களிலும் ஈடுபடும் மலையகப் பெண்கள் தாம் புரியும் தொழில்களின் மூலம் உழைக்கும் மாதாந்த வருமானம் குறித்து நோக்குகையில், அவர்களில் 16.47 வீதத்தினர் ரூபா 5000 இற்கும் குறைவாகவும், 69.41 வீதத்தினர் ரூபா 5000 தொடக்கம் 10,000 வரையும், 13.53 வீதத்தினர் மட்டுமே ரூபா 10,000 இற்கும் மேல் மாதாந்த வருமானமாக உழைக்கின்றனர். வெளிநாட்டு தொழில் புரிபவர்கள் ரூபா 10,000 இற்கும் மேல் உழைப்பவர்களில் அதிகமாக உள்ளடங்குகின்றனர்” என்றும் பேராசிரியர் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.  தோட்டத்துறை சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ள  மலையகப் பெண்களில் பலர் கீழ்மட்டத் தொழில்களிலேயே.  அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். தொழில் தேர்ச்சியின்மை, உரிய கல்வித் தகைமைகள் இல்லாமை என்பன இதற்கு ஏதுவாகியுள்ளன. வருடாந்தம் பாடசாலையை விட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வெளியேறும் நிலையில், இவர்களுக்குரிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படாமையானது இவர்கள் கீழ்மட்டத் தொழில்களில் ஈடுபடுவதற்கு உந்துசக்தியாகியுள்ளது. எனவேதான் மலையகப் பகுதிகளில் பாடசாலையை விட்டு வெளியேறுவோரின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இதன் சாதக விளைவுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.

தொழிலாளர்கள் ஒன்றிணைவதற்கான சுதந்திரம், கூட்டுப் பேரம் பேசுவதற்கான உரிமை, தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயது, கட்டாய ஊழியத்திற்காக தடை, தொழில்சார் பாகுபாடுகளை தடுத்தல், தொழிலாளர்களுக்கான சமூக நன்மைகள், நட்ட ஈடு, விடுமுறைகள், இழிவுமட்டக் கூலி, பெண்களுக்கான இரவு நேர வேலை நேரம், பெண் தொழிலாளர்களுக்கான விசேட உரிமைகள், போன்ற தொழில் உரிமைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதோடு உத்தரவாதப்படுத்தும் தொழில் உரிமைகளாகவுள்ளன. இதற்கமைய அனைத்து தொழிலாளர்களுக்கும் நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை நேரம், உணவு மற்றும் ஓய்வுக்கான நேர ஒதுக்கீடு, மேலதிக வேலைக்கான விசேட கொடுப்பனவுகள், இருபாலார்களுக்கிடையில் சம வேலைக்கான சமமான கூலி போன்றவற்றை பெண் தொழிலாளர் அனைவருக்கும் சம அளவில் உரித்தாகும் உரிமைகளாக இலங்கை அங்கீகரித்திருக்கின்றது. ஆயினும் தோட்டத்துறைக்கு வெளியில் தொழில் புரியும் மலையக இளம் பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் தொழில் உரிமைகளும், தொழில் உரிமைகளுக்கான சம வாய்ப்புகளும் மறுதலிக்கப்பட்டு வருவதாக விசனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மலையகப் பெண்கள் ஆடைத் தொழிற்சாலை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தேயிலைத் தொழிற்றுறை என்ற தொழில் நிலைகளின் ஊடாக அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் இவர்களின் நலன்கருதி மேற்கொள்ளும் முன்னெடுப்புக்கள் எதுவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. நாட்டிற்கு ஒளி கொடுக்கும் இப்பெண்களின் வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளமை வருந்தத்தக்க விடயமேயாகும். தொழில் தளங்களில் இப்பெண்களின் உரிமைகள் பலவும் மீறப்பட்டு வரும் நிலையில் ஆண்களின் அத்துமீறல்களுக்கும் இவர்கள் சில சந்தர்ப்பங்களில் உள்ளாக நேரிடுகின்றது. மேலதிகாரிகள் அல்லது வேலை கொள்வோர் சிலர் பெண்களை தமது இச்சைக்கு உட்படுத்த முயல்வதும், அது சாத்தியமாகாத நிலையில் அப்பாவிப் பெண்கள் பழிவாங்கப்படுவதும், அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதும் புதிய விடயமல்ல. இதன் தாக்க விளைவுகளால் பல குடும்பப் பெண்களின் இல்வாழ்க்கை சீர்குலைந்துமுள்ளது.

ஒவ்வொரு சமூகத்தினரும் பெண்களுக்கு உரிய மதிப்பினை வழங்க வேண்டும். அவர்களின் கருத்துக்களில் உள்ள முக்கியத்துவத்தினை, செயற்பாடுகளின் சிறப்பினை உணர்ந்து அங்கீகரித்து மதிப்பளிக்க வேண்டும். கடந்த அன்னையர் தினத்தில் மலையகப் பெண்கள் தங்களது உரிமைகளையும், பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி கோஷமெழுப்பி இருந்தார்கள். இதனிடையே உழைக்கும் மலையகப் பெண்களும் தங்கள் உரிமைகளின் உறுதிப்பாட்டிற்காக பலமுறை கோஷமெழுப்பி இருக்கின்றார்கள். இத்தகைய கோஷங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் வர்க்கத்தினரின் இத்தகைய நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து சாதக விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கீடு

சமகால பொருளாதார நெருக்கீடுகளால் மலையகப்  பெண்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள். எனவே இவர்களின் வருமான அபிவிருத்தி கருதி சுயதொழில் வாய்ப்புக்கான கடன் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வசதிகளால் கிராமியப் பெண்கள் அரசாங்கத்தின் ஊடாக அதிகரித்த நன்மையினைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. இவற்றுடன் சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பட வேண்டிய நிலையில் அரசியல் துறையும் இதில் முக்கியமானதாகும். இலங்கையின் சனத்தொகையில் 51 வீதத்தினர் பெண்களாக உள்ளனர். எனினும் அரசியலில் பெண்களின் உள்ளீர்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மலையகப் பெண்கள் அரசியலில் அதிகமாக உள்ளீர்க்கப்படுமிடத்து பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள அது வாய்ப்பாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

கல்வி, பொருளாதாரம், சமூக நிலைமைகள், தலைமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்களிலும் மலையகப் பெண்கள் இன்னும் பல அபிவிருத்திக் கட்டங்களைக் கடக்க வேண்டிய நிலையில் இவற்றைக் கடப்பதற்கான  ஒத்துழைப்பினை சகல தரப்பினரும் வழங்க வேண்டும். இதேவேளை பெண்கள் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் என்பது மிகவும் அவசியமானதாகும். தொழிற்சங்கங்களில் மகளிர் பிரிவு என்று ஒரு பிரிவு உள்ளது. மகளிர் பிரிவுத் தலைவியாக பெண்கள் கடமையாற்றுகின்றனர். எனினும் தொழிற்சங்க மகளிர் பிரிவின் ஊடாக பெண்கள் அபிவிருத்தி கருதிய செயற்பாடுகள் எந்தளவுக்கு திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன? அல்லது தொழிற்சங்கங்களிடம் பெண்கள் அபிவிருத்தி கருதிய திட்டங்கள் ஏதுமுள்ளனவா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் பெண்களின் அபிவிருத்திக்கென்று தொழிற்சங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கம் என்று பல்வேறு தரப்பினரும் உரிய திட்டங்களை வகுத்து அமுல்படுத்துவதோடு நாட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் பங்களிப்பையும் உரியவாறு பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

 

Tamil News