பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் | வேல் தர்மா

மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்வேல் தர்மா

பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்

பாக்கிஸ்தானில் முதல் தடவையாக தலைமை அமைச்சராக தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் என எதிர் பார்க்கப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் பாக்கிஸ்தான் வரலாற்றில் முதல் தடவையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் ஊழலை ஒழிக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர் ஊழலுக்குப் பேர்போன முன்னாள் தலைமை அமைச்சர்  நவாஸ் ஷெரிஃப்பின் இளைய சகோதரரை தலைமை அமைச்சராக தெரிவு செய்துள்ளனர். பல கட்சிகள் ஒன்று கூடி இம்ரான் கானை வீழ்த்தி பின்னர் ஷெபாஸ் ஷெரிஃப் அவர்களை பாக்கிஸ்தான் தலைமை அமைச்சராக்கியுள்ளன. இந்த பல கட்சிக் கூட்டமைப்பு 2023-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரை நின்று பிடிக்க மாட்டாது என்பது உறுதி.

மட்டுப்படுத்தப்படாத பொருளாதாரப் பின்னடைவு

உலகத் துடுப்பாட்ட வரலாற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய சகலதுறை வீரர்களில் ஒருவராக திகழ்ந்த இம்ரான் கான் அரசியல் ஆடுகளத்தில் இறங்கிய போது, அதிலும் சகல துறை வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஊழல் ஒழிப்பை தன் முதல் நோக்காகக் கொண்டு அரசியலில் இறங்கிய இம்ரானால் ஊழலை ஒழிக்க முடியவில்லை. சீனக் கடன்களில் உள்ள ஆபத்தை தேர்தல் பரப்புரையாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த இம்ரானால் சீனாவிடம் கடன் வாங்குவதைத் தடுக்க முடியவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் பங்களாதேசம் தனிநபர் வருமானத்தில் இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் மிஞ்சி வளர்ந்தது. இதைப் பாக்கிஸ்தானியர் பெரும் அவமானமாகப் பார்த்தனர். கோவிட்-19 பெரும் தொற்றையும் பாக்கிஸ்தானிலும் பார்க்க பங்களாதேசம் சிறப்பாக கையாண்டது.

மட்டுப்படுத்த முடியாத பயங்கரவாதம்

மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்இம்ரானின் ஆட்சிக்காலத்தில் பலுச்சிஸ்த்தானில் சீன முதலீடுகளுக்கு எதிராக பல தீவிரவாத தாக்குதல்களும் நடந்தன. சீனாவின் பட்டி-பாதை முன்னெடுப்பு என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் மிகப்பெரிய பகுதி பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யப்பட்டது. அதன் இதயப் பகுதியாக பலுச்சிஸ்த்தானும் அங்குள்ள குவாடர் துறைமுகமும் அமைந்திருந்தன.  பாக்கிஸ்தானின் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட China Pakistan Economic Corridor எனப் பெயரிடப்பட்ட திட்டம் நிறைவேற்ற முடியாமல் போனது.

மட்டுப்படுத்த முடியாத புவிசார்-கூட்டு

உக்ரேனில் போர் தொடங்கிய பின்னர் உலகம் மூன்று கூட்டுகளாக உருவெடுக்கின்றது. முதலாவது கூட்டில் நேட்டோ நாடுகள், ஜப்பான், ஒஸ்ரேலியா, தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இருக்கின்றன. இரண்டாவது கூட்டில் இரசியா, சீனா, பெலரஸ், சிரியா, கஜக்ஸ்த்தான், வெனிசுவேலா போன்ற நாடுகள் இருக்கின்றன. இவையிரண்டிலும் இணையாத இந்தியா, பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தான் இரசிய-சீனக் கூட்டில் இணைவதை அமெரிக்கா மிகவும் அபாயகரமானதாகப் பார்க்கின்றது. சீனா, இரசியா, பாக்கிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகள் இணைந்தால் யூரோ – ஆசியாவின் பெரிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்த முடியும். நடுவண் ஆசிய நாடுகள் அமெரிக்காவிற்கு எட்டாத ஒன்றாக மாறிவிடும்.

புவிசார்-கேந்திரோபாயங்களை எதிர்த்தாடிய இம்ரான் கான்

மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்த்தானில் களம் அமைத்து அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தாக்குதல்களை நடத்தி வந்தது. பாக்கிஸ்த்தானில் சிஐஏ வைத்திருந்த தளம் 2011இல் வெளியேற்றப்பட்டது. 2020இல் அமெரிக்கா சடுமென ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் அமைக்க சிஐஏ விரும்பியது. அங்கிருந்து அல் கெய்தாவினர் உட்பட பல தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முக்கியமாக ஆளிலிவிமானத் தாக்குதல் நடத்த சிஐஏ விரும்பியது.

ஆனால் இம்ரான் கான் அதற்கு மறுத்து விட்டார். இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளால் ஒரு படையணியாக மாறிவிட்ட சிஐஏயிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. 2021 ஏப்ரலில் சிஐஏ இயக்குநர் வில்லியம்ஸ் பேர்ன் பாக்கிஸ்த்தான் சென்றிருந்த வேளையில் அவரைச் சந்திக்க  இம்ரான் கான் மறுத்திருந்தார். 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனை ஆக்கிரமிக்க 25-ம் திகதி இம்ரான் கான் திட்டமிட்டபடி தனது இரசியப் பயணத்தை மேற் கொண்டு அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்து உரையாடினார். 2020 மார்ச் மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இம்ரான் கான் அழைத்திருந்தார்.

மட்டுப்படுத்த முடியாத படைத்துறை

பாக்கிஸ்தானில் ஆட்சி மாற்றங்களை அதன் படைத்துறையே முன்னின்று நடத்துவது வழமை. 2018-ம் ஆண்டு இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போதும் 2022 ஏப்ரலில் அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போதும் பாக்கிஸ்தானின் படைத்துறை பின்னணியில் இருந்தே செயற்பட்டது. தங்களது அரசியல் தலையீடுதான் பாக்கிஸ்தானின் பொருளாதாரத்தைப் பின் தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்த படையினர், பங்களாதேசத்தைப் போல் நல்ல ஆட்சி தம் நாட்டிற்கும் அவசியம் என உணர்ந்திருந்தனர். ஆனாலும் ஊழல் நிறைந்த பொருளாதாரத்தால் கோவிட்-19 ஆல் பெரும் விலைவாசி அதிகரிப்பு ஏற்பட்டது. இம்ரானின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அவரை வாக்குப் பெட்டி திணிப்பின் மூலம் படையினர் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவியபோது, படையினர் இம்ரானின் எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்தனர். க ஷெபாஸ் ஷெரிஃபைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் நெருங்க இந்த கட்சிகளுக்கு இடையிலே பிளவு அதிகரிக்கும் என்பதால், அடுத்த ஆண்டு தேர்தல் வரை அவரது ஆட்சி நின்று பிடிப்பது ஐயம். இம்ரான் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றியது அமெரிக்காவே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றார்.

கட்டிப்பிடிப்பாரா சவுதி மன்னர்?

இம்ரான் கானை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம ஆட்சியில் இருந்து அகற்றிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியும், இம்ரான் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவியவர்களும் இணைந்து புதிய தலைமை அமைச்சராக ஷெபாஸ் ஷெரிஃப்பை தெரிவு செய்தனர். புதிய தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷெரிஃப் சவுதி சென்று மக்காவில் தொழுகை செய்த பின்னர் சவுதி மன்னர் குடும்பத்தினரைச் சந்திப்பார். பாக்கிஸ்தானுக்கு சவுதி அரேபியா பெருமளவு நிதி உதவியை வழங்கினால் தான் ஆட்சியை நடத்தலாம். நலிவடைந்த சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை புட்டீன் தனது போர் மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார் எனச் சொல்லுமளவிற்கு இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை எரிபொருள் விலையை ஏற்றியுள்ளது. மேலதிக வருமானத்தில் ஒரு பகுதியை பாக்கிஸ்தானுக்கு சவுதி வழங்குமா?

இரசிய-சீனக் கூட்டணியில் பாக்கிஸ்த்தான் இணைந்தால் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் பிரிவினைவாதம் தீவிரமடையலாம். அது மட்டுமல்ல ஆப்கான் – பாக் போர் கூட வெடிக்கலாம். பாக்கிஸ்தான் தன் புவிசார்-கேந்திரோபாய நிலையை உணர்ந்து காய்களை நகர்த்துமா?

Tamil News