ஆப்கான் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: ‘யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்’ அமெரிக்கா

ஆளில்லா விமானத் தாக்குதல்

கடந்த ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட  ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு எந்த அமெரிக்க இராணுவத்தினரையோ, அதிகாரிகளையோ பொறுப்பாக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறத் தொடங்கிய பிறகு தாலிபன், அந்நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றினர். அப்போதுதான் அமெரிக்கா இந்த ஆளில்லா விமானத்   தாக்குதலை நடத்தியது.

அத்தாக்குதலில் சமைரி அஹ்மதி என்ற ஒரு தொண்டூழிய சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கடந்த மாதம் ஓர் உயர்மட்ட உள்விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஆளில்லா விமானத்  தாக்குதல் தொடர்பாக எந்த வித தவறான நடவடிக்கையோ, புறக்கணிப்போ இல்லை, எந்த வித சட்ட விதிமுறைகளும் மீறப்படவில்லை. எனவே எந்தவித ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் எடுக்கத் தேவை இல்லை என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் லாய்ட் ஆஸ்டினால் திங்கட்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.