இலங்கையில் சீரற்ற கால நிலை- 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு, 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம்  கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல – தும்பலியத்த பிரதேசத்தில் மாடி வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

அன்றைய தினம் முற்பகல் மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இதன்போது குறித்த வீட்டில் நால்வர் இருந்துள்ளனர். அவர்களில் ஆணொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து குறித்த மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே ஏனைய இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண்ணொருவரும், 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் ஆவர். இவர்கள் தாயும் மகனுமாவர் என்று  காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வரகாப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வரகாப்பொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று முற்பகல் வரை சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இம்மாவட்டங்களில் 2 வீடுகள் முழுமையாகவும், 117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 64 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் 4 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.