எரிபொருளுக்காக பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை புரிந்து கொள்ளுங்கள்- ஐ.நா வதிவிடப்பிரதிநிதி கோரிக்கை

மக்களின் விரக்தியை புரிந்து கொள்ளுங்கள்

தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களைச் செலவிடும் மக்களின் விரக்தியை பாதுகாப்புத் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் 18ஆம் திகதி சனிக்கிழமை இரவு எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றுக்கு அருகில் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரால் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த சம்பவத்தை மேற்கோற்காட்டி  செய்துள்ள ட்விட்டர் பதிவில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் “எரிபொருள் வரிசைகளில் காவல்துறை மற்றும் இராணுவத்தினருடன் தொடர்புடைய வன்முறையின் படங்கள் சிக்கலுக்குரியவை. நீண்ட வரிசையில் பல மணிநேரங்களைச் செலவிடும் மக்களின் விரக்தியைப் புரிந்துகொள்ள பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொள்கின்றேன். அது குறித்து விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil News