Home செய்திகள் இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு- யாழ். பல்கலையில் நடைபெறுகிறது

இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு- யாழ். பல்கலையில் நடைபெறுகிறது

இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு
இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு: யாழ். பல்கலைக்கழக கலைப் பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

‘சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம்” எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 100 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகளை நிகர்நிலையிலும் ஒளிபரப்புவதங்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

இந் நிகழ்வு தொடர்பில் ஊடகங்களினூடாகப் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு நேற்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது கலைப் பீடாதிபதி பேராசிரியர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:

இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் கலைத்துறை அதாவது சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடக் கற்கைகள் கற்பிக்க ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையில் பல்கலைக்கழக கல்வி குறித்து சிந்தித்த இலங்கைக் கல்விமான்கள் தேசிய அடையாளம், பண்பாடு மற்றும் மரபுத் தொடர்ச்சிகள் குறித்து அதிகம் அக்கறை எடுத்திருந்த காரணத்தினால் இலங்கையில் விஞ்ஞானம் சார் கற்கைகள் வளர்ச்சியடைந்தமைக்;கு மேலாக கலைத்துறை சார்ந்த சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப் பண்பியல்; கற்கைகள் அதிகம் வளர்ச்சியுற்றன.

பல்கலைக்கழகங்களில் பிரதான பணிகளாக மூன்று விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. கற்பித்தல், ஆராய்ச்சி கலச்சாரம் ஊடான அறிவுப் பரவலாக்கம் மற்றும் சமூக ஒன்றிணைவு என்பனவே அவையாகும். இவ் விடயங்களை எய்தும் அல்லது வழங்கும் முதன்மைத் தளமாகவிருப்பவை பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் ஆய்வுமாநாடுகள் ஆகும். இவற்றுள் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் முழுமையாக ஆய்வாளர்களாக கொண்டு நடத்தப்படும் ஆய்வு மாநாடுகள் பல வகைகளில் முக்கியத்துவமிக்கன. இந்தப் பின்னணியில் 1ST UNDERGRADUATE RESEARCH SYMPOSIUM IN ARTS – 2021 எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. “Humanities and Social Sciences for Equality, Justice and Development” அதாவது சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம் எனும் மகுடத்துடன் முன்னெடுக்கப்படும் இவ் ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களின் 100 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கலைப் பீடாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். மாநாட்டின் சிறப்பு அம்சமாக கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறும் அங்குரார்பண நிகழ்வில் திறவுரைகளை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் தகைசார் பேராசிரியருமான பேராசிரியர்.வ.மகேஸ்வரன், அமெரிக்காவின் ஸலிபெரி பல்கலைகழக பேராசிரியர்.எஸ்.ஐ.கீதபொன்கலன், கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி சாந்தி செகராஐசிங்கம் மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். மாலை அமர்வில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பன்னிரு ஆய்வுத் தடங்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. இவ் ஆய்வுத் தடங்களை துறைசார் பேராசிரியர்கள் தலைமை தாங்கவுள்ளனர்.

இன்றைய உலகப் பெருந்தொற்றுக் காலப்பகுதியிலுள்ள பல்வேறு நடைமுறைசார் சவால்களைத் வெற்றிகரமாக முகாமைசெய்து எமது பீடம் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை 2021 இல் முன்னெடுத்திருந்தது. அதன் உயர் அடையாளமாக இந்த ஆய்வரங்கு நடைபெறுகின்றது. வருடம் தோறும் எமது பீடத்தில் சமூகவிஞ்ஞானம், மனிதப்பண்பியல்;, ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியக் கலைகள் உள்ளிட்ட 26 கற்கைக் பரப்புகளில் ஏறக்குறைய 400 ஆய்வுகள் இளங்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

எமது பீடத்தில் நீண்ட காலமாகவே இத்தகையதொரு ஆய்வரங்கை நடத்தவேண்டும் எனும் எண்ணக் கருவாக்கம் இருந்தபோதும் பல தவிர்க்க முடியாத பின்னணிகளில் இதுவரை அது சாத்தியமாகவில்லை. ஆனால் இன்று விதையிடப்படும் இவ் ஆய்வரங்கு எதிர்காலத்தில் வருடம் தோறும் நடைபெறவுள்ளதுடன் எமது இறுதியாண்டு மாணவர்கள் தமது ஆய்வு முடிவுகளைச் சமூகப்பரவலாக்கம் செய்யும் வாய்ப்பையும் வழங்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சமூகம் சார்ந்த பொறுப்பை பட்டதாரிகள் மட்டத்தில் நிறைவேற்றும் ஒரு தளமாக இவ் ஆய்வரங்கு அமைகின்றது. அத்துடன் எமது பட்டதாரிகள் ஆய்வுக் கலாசாரத்துக்குள் தம்மை புகுத்திக்கொள்ளவும் இது துணை செய்யும். கலைப்பீடம் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுக் கலாசாரத்தில் காண்பித்து வரும் அதியுன்னதமான செயற்பாட்டுக்கு இவ் ஆய்வரங்கு ஒரு முக்கிய தளமாக அமைகின்றது.

ஆர்வமுள்ள எவரும் இவ் ஆய்வரங்கில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள முடியும். குறிப்பாக பாடசாலைகளில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் பங்கு பற்றும் போது பல்கலைக்கழகங்கள் குறித்த அவர்களது சிந்தனை இன்னும் ஒரு படி மேலே மேம்படும். அத்துடன் பல்கலைக்கழகங்களின் ஆய்வுச் செயற்பாடுகள் குறித்து ஆர்வமுள்ள ஆற்றலாளர்களும் கலந்து கொள்வதனை வரவேற்கிள்றோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version