Home ஆய்வுகள் ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும்....

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். | பேராசிரியர் குழந்தை

ஐ.நா.கூட்டத்தொடர்

ஐ.நா.கூட்டத்தொடர்-தமிழர்களுடைய பங்களிப்பு என்ன

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எவ்வாறு அமையும் என்று சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தை அவர்களை இலக்கு ஊடகம் கருத்துக் கேட்ட போது, அவர் கூறிய கருத்துக்களை இங்கே தருகின்றோம்.

பெப்ரவரி திங்கள் 28ஆம் திகதி 2022ஆம் ஆண்டு அன்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமை பேரவை நாற்பத்தி ஒன்பதாவது பேரவையானது தொடங்க இருக்கின்றது.  இந்த பேரவையில், ஈழத் தமிழர்களுடைய உரிமையும் இந்தப் பேரவையின் உடைய பங்களிப்பையும் பற்றி நாம் சிந்திக்க இருக்கின்றோம்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை – சிங்கள அரசு திட்டமிட்டு அரங்கேற்றிய இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக சிங்களப் பேரினவாத அரசு, உலகநாடுகளுடைய உதவியையும், குறிப்பாக சீனாவின் உதவியையும், இந்திய ஒன்றிய அரசின் உடைய உதவியையும், பிரித்தானிய அரசனுடைய உதவியையும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசையும் இன்றைக்கு நாடி ஓடி தேடிக் கொண்டிருக்கிறது.

அதற்காக தமிழர்களையே அது ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தி, குறிப்பாக சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் போன்ற நபர்களை இதற்காக பயன்படுத்தி, இவர்கள் வழியாக தமிழர்களுக்கு நடைபெற்ற ஒரு இனப்படுகொலையை மூடி மறைப் பதற்காக பல்வேறு முயற்சிகளை அது எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நாற்பத்தி ஒன்பதாவது கூட்டத்தொடர் எந்த அளவிற்கு இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை, மனித உரிமை மீறலை, ஒரு இனப்படுகொலையை எந்தளவிற்கு உலகிற்கு எடுத்துச் சொல்லி ஒரு நீதியைக் கொண்டு வரும் என்பதை ஒரு மிகப்பெரிய ஐயத்தோடு நாம் அணுக வேண்டும். ஏனென்றால், உலக நாடுகளுடைய பங்களிப்பை வைத்துத் தான் இந்த மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத் தொடர் நடைபெறும். அப்படி நடை பெறுகின்ற ஒரு சூழ்நிலையில், இந்த நாடுகள் ஒட்டித்தான் அவை முன்வைக்கின்ற கோரிக்கைகளை தான் அந்த பேரவையானது கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதை ஒட்டித்தான் அது செயற்படும்.

எனவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். தமிழர்கள்  ஈழ மண்ணிலிருந்து இன்றைக்கு உலகம் முழுவதும் புலம்பெயர்ந்திருக்கின்ற இவ்வேளையில், எந்தெந்த நாடுகள் இந்த மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக பங்களிப்பு செய்திருக்கிறார்களோ, அந்த நாடுகளுடைய அரசை ஒரு நிர்ப்பந்தத்திற்குக் கொண்டு வந்து, அந்த அரசுகளிடம் உண்மையான ஆவணங்களை எடுத்து வைத்து அவர்களை புரிய வைத்து அவர்களை தெளிவாக நாம் சிந்திக்க வைத்தோம் என்று சொன்னால், நம்முடைய பிரச்சினையை தெளிவாக உலகறிய எடுத்துச் சொல்லப்படும். இல்லையென்றால் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு தங்களுடைய ஆதாயத்தைத் தேடிக் கொண்டு, நிறைவேற்றிக் கொண்டு, அதை விரும்பி திட்டமிட்டு செயல்படுத்தி, அதிலிருந்து அந்த நாடுகள் வளருமே ஒழிய ஒருபோதும் தமிழர்களுக்கு உரிமை கிடைப்பது சாத்தியம் அல்ல. இதனால் அந்த நாடுகளுக்கு தெளிவான ஒரு செய்தியை நாம் ஆவணங்களோடு தக்க ஆவணங்களோடு நாம் கொடுக்கின்ற பொழுதுதான், அது உலக நாடுகளுக்கு புரியவைக்க முடியும்.

ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட செயல்பாடுகளில் தமிழ் இயக்கங்களும் சரி, தமிழ் அரசியல் கட்சிகளும் சரி, தமிழர்களுடைய பங்களிப்பும் சரி, மிகக் குறைவாக இருப்பதை பார்க்கிறோம். அதற்கு மேலாக பிரிந்து போய், சிங்கள அரசுக்கு கைக்கூலியாக வாழ்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கின்ற இந்த வேளையில், தங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைத்துக் கொண்டு, தங்களுடைய ஆதாயங்களை அவர்கள் பெறுவதற்காக தங்களடைய வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்காக ஒரு இனத்தையே காட்டிக் கொடுக்கக் கூடிய இனத் துரோகிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில், தமிழ் மக்களுடைய இனப்படுகொலையை நாம் எவ்வாறு உலக அரங்கில் அது ஒரு அநீதியான செயல் என்று  நிலை நிறுத்துகின்றோம் என்பது கூட தெரியாமல் செயல்படுகின்ற ஒரு ஒரு வேளையில் நாம் எவ்வாறு நம்முடைய உரிமையை – நீதியை நிலைநிறுத்த முடியும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சில அமைப்புகள் தொடர்ந்து இன்றைக்கு இந்த ஒரு அநீத செயலை இனப்படுகொலையை நிலைநிறுத்துவதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கங்களை, அந்த மக்கள் அமைப்புகளை, அந்தக் கட்சிகளை, அந்த நபர்களை நாம் சரியாக இனம் கண்டு, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினோம் என்று சொன்னால், கண்டிப்பாக வெற்றி நிச்சயம் நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த தமிழர்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?

ஒன்று – நம்முடைய வேறுபாடுகளை  பின்தள்ளி விட்டு நாம் எந்தப் புள்ளியில் ஒன்றாக சேருகிறோமோ – நம்மை ஒன்று சேர்க்கின்ற அனைத்துக் கூறுகளையும் நாம் மையப்படுத்தி, அந்தக் கூறுகளின் அடிப்படையில் நாம் செயற்படுகின்ற ஒருங்கிணைக்கக் கூடிய, ஒற்றுமையோடு செயற்படுகின்ற நல்ல உள்ளங்களை நாம் கண்டிப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எனவே நம்முடைய நோக்கம் தளத்திலும் வேலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் இப்படிப்பட்ட பேரவைகளிலும் வேலை செய்ய வேண்டும். உலக அமைப்புகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும். அதற்கு அறிவுபூர்வமாகவும் வேலை  செய்ய வேண்டும். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் நாம் செயற்பட்டோம் என்று சொன்னால், கண்டிப்பாக நம்முடைய பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும். இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையை உலகறியச் சொல்லி, அதற்கு வேண்டிய ஒரு நீதியையும், அதற்கு வேண்டிய ஒரு பரிகாரத்தையும் நாம் பெற முடியும் என்பதில் உறுதியாக இருந்து,  ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு நாம் முனைந்து வருவோம் அப்பொழுது வெற்றி நிச்சயம் என்பதை தெளிவாக புரிந்து கொள்வோம்.

Exit mobile version