Tamil News
Home செய்திகள் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மலேசிய அலுவலகத்தை மூட மலேசிய அரசு முடிவு:  கைவிட கோரிக்கை 

ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் மலேசிய அலுவலகத்தை மூட மலேசிய அரசு முடிவு:  கைவிட கோரிக்கை 

மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் அலுவலகத்தை மூடும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. 

இதற்கு பதிலாக அகதிகளின் உரிமைகளுக்கான சட்ட கட்டமைப்பினை உருவாக்குவதற்கு மலேசிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என IDEAS என்று அழைக்கப்படும் ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக மலேசியாவில் உள்ள அகதிகளை நிர்வகிக்கும் பொறுப்பினை மலேசிய அரசு கையில் எடுத்துள்ளதால் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அலுவலகத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் சிறப்பு செயல்பாடுகளுக்கான அமைச்சர் லட்டிப் அகமது தெரிவித்திருந்தார்.

ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடாக மலேசியா உள்ள நிலையில், மலேசியாவில் இருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பதில் ஐ.நா. அகதிகள் ஆணையம் முக்கிய பங்கு வகித்து வந்ததாக IDEAS ஆய்வு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரிசியா யோஹ் தெரிவித்துள்ளார்.

அகதி அந்தஸ்தை தீர்மானித்தல், மீள்குடியமர்த்தல் உள்ளிட்ட பல விதமான பாதுகாப்பினை அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்கி வந்தது. சுகாதாரம், கல்வி, பொருளாதார உதவி, தங்குமிட வசதி, ஆலோசனை, இதர நல உதவிகள் என அகதிகளுக்கு உதவுவதற்காக பல தொண்டு நிறுவனங்களுடன் ஐ.நா. ஆணையம் பணியாற்றி வந்தது,” என்கிறார் IDEAS மையத்தின் திரிசியா யோஹ்.

“அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை நிர்வகிப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தயார் நிலையை வெளிப்படுத்த அரசாங்கம் முதலில் 1951 அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்,” எனக் கோருகிறார் திரிசியா யோஹ்.

அப்படி இல்லையெனில், மலேசியாவுக்கு என்று சர்வதேச தரத்திலான அகதிகள் கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Exit mobile version