Home நேர்காணல்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன்

உள்ளக பொறி முறை

எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  உள்ளக பொறி முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது

இந்த ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அந்த அறிக்கை இலங்கை அரசை கண்டிப்பதாக இருக்கின்றது. அதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனாலும் கடந்த காலங்களிலே சில சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திடம் இந்த பொறுப்பு கூறலுக்கான ஆர்வம் இல்லை. இலங்கை அரசாங்கத்தினுடைய அரச இயந்திரங்களுடைய கட்டமைப்புகள் இனவாதத்துக்குள் மூழ்கிப் போய்விட்டன. அவை ஒரு நடுநிலையான விசாரணை நடத்த தகுதி அற்றன. ஆகவே சர்வதேச குற்றவியல் விசாரணையை, நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களையெல்லாம் வலியுறுத்தி இருந்தார்கள்.

ஆனால் இம்முறை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அதனை பார்க்கின்ற போது இதுவரைக்கும் ஆணையாளருடைய அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை முற்றாக புறக்கணித்து மனித உரிமைகள் பேரவையில், நாடுகள் தீர்மானங்களை இயற்றுகின்ற போது அவர்கள் வெறுமனே இலங்கை தொடர்பான விவகாரத்தில் தாங்கள் ஒரு பிடியை வைத்து கொள்வதற்காக ஒரு பேருக்கு ஒரு தீர்மானத்தை, நிறைவேற்றினார்களே தவிர உள்ளக விசாரணைக்கான வாய்ப்புகளை கொடுத்து இலங்கை அரசை தங்களுடைய வழிக்கு கொண்டு வருவதற்கான தீர்மானங்களை எடுத்தார்களே தவிர தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய இந்த முடிவுகளும் இதுவரையில் பொறுப்புக் கூறல் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதன் காரணமாக நாங்கள் ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மனித உரிமைகள் பேரவையுடைய ஆணையாளருடைய அறிக்கை, ஓரளவுக்கு எங்களுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருந்திருக்கிறது. அவர் அங்கு நடந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துகின்ற போது அதன் அடிப்படையில் தொடர்ந்து ஒரு கருத்துருவாக்கத்தை செய்து அதை நோக்கி செல்வதற்கு எங்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக இருந்தது.

ஆனால் அந்த விடயங்களை எல்லாம் நீர்த்துப்போக செய்யப்பட்டு அவர்களுடைய அறிக்கை கூட அமைந்திருப்பது என்பது படிப்படியாக இவர்கள் அந்த பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க அனைவரும் சேர்ந்து முற்படுகிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகத்தைத்தான் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.

எங்களைப் பொறுத்தவரையில்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  உள்ளக பொறி முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளக விசாரணை மூலமாக, எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது. நாற்பத்தாறு ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று ஒரு ஆண்டு கடக்கிறது.

இது வரைக்கும் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. ஆகவே எங்களை பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த விடயம் காலம் தாமதிக்காமல் இந்த நாடுகள், இந்த முடிவை உடனடியாக எடுத்து ஐசிசி க்கு கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இன்று சிரியா – உக்ரேனில் நடைபெறுகின்ற போரிலே தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. எங்கள் மீதும் இலங்கை அரசாங்கம்  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட தரப்புகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் சர்வதேச விசாரணையை நோக்கி கொண்டு செல்வதற்கு எந்த விதமான முயற்சிகளும் இல்லை. அவர்கள் வெறுமனே எங்கள் மக்கள் மீது நடந்த இந்த இனப்படுகொலைகள், குற்றங்கள், போர் குற்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி இலங்கை மீது ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு தங்களுடைய பூகோள பிராந்திய ஆதிக்க நலன்கள் விடயத்திலே சீனாவிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு அழுத்த கருவியாக மட்டும்தான் அதை பயன்படுத்துகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்காக அவர்கள் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது மிகப் பெரிய ஒரு ஏமாற்றம்.

ஆகவே எங்களை பொறுத்தவரையிலே இந்த மனித உரிமைகள் பேரவை செப்டம்பர் மாதம் வரைக்கும் காத்திருக்காமல் இலங்கை அரசு ஒரு பொழுதும் பொறுப்பு கூறல் செய்யப் போவதில்லை. உள்ளக பொறிமுறையால் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறோம். என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version