இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: ஏன் இந்தியா புறக்கணித்தது ?

ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள்  பேரவையில் இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம்  வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட  போது,   பிரிட்டன், அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலாந்து, தென் கொரியா, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவாகவும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் ஆகிய நாடுகள் புறக்கணித்த நிலையிலும் அது நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை புறக்கணித்துள்ள இந்தியா, “சமத்துவத்திற்கான தமிழர்களின் நம்பிக்கை” மற்றும் “இலங்கையின் அமைதி மற்றும் இறையாண்மை” என்கிற இரண்டு அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் இந்தியா வழிநடத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை தமிழர்களின் நியாயமான விருப்பங்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக, இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா தொடர்ந்து பணியாற்றும் எனவும், அது தெரிவித்துள்ளது.

தவிர, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண தேர்தல்களை விரைந்து நடத்துதல் உள்ளிட்டவற்றை இலங்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும், இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

இத் தீர்மானத்தை நிறைவேற்றும்போது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உணர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் மற்றும் அவற்றை நோக்கிய முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து இலங்கை மக்களின் வளர்ச்சி மற்றும் கண்ணியம், அமைதி ஆகியவற்றுக்கான இலங்கை தமிழர்களின் நியாயமான விருப்பங்களை உணர்ந்து செயல்படுதல் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. 2009க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயல்முறைகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது” .” எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என, இந்த தீர்மானங்களை இலங்கை அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.