‘உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது’ – ஐ.நாவிடம் இலங்கை வலியுறுத்தல்

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாது இருப்பது முக்கியமானது என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்தைந்தாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் காணொளி மூலம் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவரின் உரையில்,

“ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றிபெற வாழ்த்துவதுடன், எங்களின் முழுமையான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறோம்.

கடந்த பொதுச் சபையின் திறமையான தலைவராக விளங்கிய மேன்மைதங்கிய பேராசிரியர் டிஜானி முஹம்மது–பாண்டேவுக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன்.

தொற்றுநோயால் உருவாகியுள்ள முன்னெப்போதும் இல்லாத நிலைமைகளுக்கு மத்தியில் கூட, ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்களைப் பின்தொடர்வதில் அவரது ஆற்றல்மிக்க தலைமை மற்றும் அயராத முயற்சிகளுக்காக பொதுச்செயலாளர் மேன்மைதங்கிய அன்டோனியோ குடெரெஸ் அவர்களுக்கு இலங்கை நாட்டின் பாராட்டை தெரிவிக்க விரும்புகிறேன்.

தற்போதைய தடைகளுக்கு ஏற்ப ஐ.நா பொதுச்சபையை மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் நடத்த எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது.

தொற்றுநோயால் தமது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும், முன்னணியில் நின்று உழைத்த சுகாதார மற்றும் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தியாகம் மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டின் பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருள் காலத்திற்கு ஏற்றதாகும். அது COVID-19 இன் பாதிப்புகளைத் தணிப்பதில் தேசிய எல்லைகள் கடந்து ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எதிரொலிக்கிறது.

“COVID 19 உலகளாவிய மனிதாபிமான பதிற்குறி திட்டம்” மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ‘COVID-19 பதிற்குறி மற்றும் மீட்பு நிதியத்தை நிறுவுதல் உள்ளிட்ட இந்த சவாலுக்கு முகம்கொடுப்பதற்கு ஐ.நா. எடுத்த முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்.

தொற்றுநோய்க்கான உலகளாவிய பதிற்குறியை வடிவமைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள உலக சுகாதார தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் விரிவான பணிகளை இலங்கை ஆதரிக்கிறது.

விருத்தி செய்யப்பட்டதுமே COVID-19 தடுப்பூசிக்கான உலகளாவிய அணுகலை எளிதாக்க உலக சுகாதார தாபனம் இப்போது முயல வேண்டும், இது ஒரு அடிப்படை பொது நன்மையாக வகுக்கப்பட வேண்டும் என்பதுடன் அனைவருக்கும் கட்டுப்படியான வகையில் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

தனது நீண்டகால ஜனநாயக மரபுகளைப் பற்றி பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு என்ற வகையில், இலங்கை அரசு இரண்டு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் சந்தித்தது. அதன் மூலம் நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், எனது அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பெறப்பட்ட மகத்தான ஆணைகள் ஒரு வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்க உதவியது.

COVID – 19 தொற்றுநோயை அடுத்து உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள் கூட கணிசமான சவால்களை எதிர்கொண்டிருந்த நேரத்தில், இலங்கையினால் வெற்றிகரமாக அந்த சவாலை எதிர்கொள்ள முடிந்தது.

ஒரு வலுவான உள்ளூர் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் உதவியுடன் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் நன்கு ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைக்கப்பட்ட பொறிமுறையின் விளைவாக, அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த முக்கிய பணியில் எனது நாட்டின் மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான, உள்ளடக்கிய, பாகுபாடற்ற மற்றும் முழுமையான நடவடிக்கைகளின் காரணமாக இந்த பேரழிவின் போது இலங்கை அதன் வாழ்வாதார நிலையை உறுதிசெய்தது.

இந்த நடவடிக்கைகளில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள், நாள் வருமானம் ஈட்டுபவர்கள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய குழுக்கள் ஆகியவற்றை நிதி ரீதியாக ஆதரித்தல் மற்றும் நாடு திரும்பும் இலங்கையர்களை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகித்தல் ஆகியவை அடங்கும்.

புதிய பொருளாதார போக்குகளை உருவாக்க இலங்கை வர்த்தக வழிகளையும் ஆராய்ந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க விவசாயிகள், விநியோகஸ்தர் மற்றும் நுகர்வோர் ஆகியோரை இணைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் இணைய வழி கல்வியை வழங்குதல் ஆகியன இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்து இன, மத அல்லது சமூக பின்னணியையும் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்கள் மற்றும் விமானப் பயணத்தின் மீதான தடைகளின் போது சிக்கியுள்ள அனைத்து வெளிநாட்டினரின் ‘வாழ்க்கைக்கான உரிமையை’ உறுதி செய்தன.

வளமான நாடுகளைப் பார்க்கிலும் எளிய வழிமுறைகளைக்கொண்டு மிகவும் வினைத்திறனாக COVID-19 ஐ கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளை உலக சுகாதார தாபனம் பாராட்டியுள்ளது.

யுனிசெப் நிறுவனம் பாராட்டியபடி, பிள்ளைகளை பாதுகாப்பாகக் மீளக் கொண்டுவருவதற்காக பாடசாலைகளைத் திறந்த தெற்காசியாவின் முதல் நாடுகளில் இலங்கையும் இருந்தது. உலக பயண மற்றும் சுற்றுலா பேரவை சமீபத்தில் இலங்கையை சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக உறுதிசெய்தது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தொற்றுநோயால் முன்னெப்போதுமில்லாத வகையில் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன என்பதையும், அத்தகைய நாடுகளுக்கு கடன் நிவாரணம் மற்றும் நிதி ஊக்குவிப்புகளின் அவசியத்தை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் இலங்கை ஆழ்ந்த கரிசனையுடன் குறிப்பிடுகிறது.

பேண்தகு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.

மேலும், ஒரு நாடாக, எமது சுற்றாடலைப் பாதுகாப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். எங்களுக்கு தனித்துவமான ஒரு உயிர்–பல்வகைமையுடன், எமது சுற்றுச்சூழல் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், விவேகத்துடன் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அபிவிருத்தியை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் இடையில் சரியான சமநிலையை பேண எனது அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

எங்கள் கடல் எல்லையில் அண்மையில் ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத சேதம் சம்பந்தப்பட்ட நிகழ்வு நமது கடல் வளங்களை எந்த வகையிலும் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்து கவனமாக நிர்வகிக்கப்பட்டது. இந்த அளவிலான பேரழிவுகளை கையாள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு சிறிய நாடு என்ற வகையில், அண்டை நாடுகளின் உதவியுடன், எண்ணெய் தாங்கிக் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் குறைத்தோம்.

வறுமை ஒழிப்புக்கான கூட்டணியை ஆரம்பிக்க 74 வது பொதுச் சபை தலைவரின் முயற்சியை இலங்கை வரவேற்கிறது, இது இந்த விவகாரத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கை பிரகடனத்தின் தொலைநோக்கின் அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்க பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது. புதிய முயற்சிகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதில் இச்செயலணி கவனம் செலுத்துகிறது.

இது நமது சமூகத்தை தீவிர வறுமையிலிருந்து பாதுகாக்கும் எனது நாட்டின் நீண்ட மற்றும் நிலையான வரலாற்றை முழுமைப்படுத்துகிறது.

ஏழைக் குடும்பங்களை இலக்காகக்கொண்டு நாட்டில் வறுமையைக் குறைப்பதற்கான ஒரு தைரியமான மற்றும் ஆக்கபூர்வமான முயற்சியை எமது அரசாங்கம் எடுத்து வருகிறது, மேலும் இதுபோன்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உறுப்பினருக்கு ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அக்குடும்பம் வறுமையிலிருந்து வெளியேறி எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்க உதவும்.

வறுமையிலிருந்து வெளிவருவதற்கு கல்வி ஒரு முக்கிய கருவி என்று நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையில், தேசிய கொள்கை கட்டமைப்பில் திட்டமிடப்பட்டுள்ள “ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கற்றல் வாய்ப்பு” என்ற கருப்பொருளின் படி தேசிய கல்வி முறை மறுசீரமைக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க உதவும் வகையில் பிள்ளைகளுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் பல கிராமப்புற பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, ஏனையவை நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

தொற்றுநோய் காலப்பகுதியில் பாடசாலை பிள்ளைகளுக்கு அனைத்து தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்களின் ஆதரவோடு, கட்டணமில்லா உத்தியோகபூர்வ “இலத்திரனியல் கற்றல் வாய்ப்பு”, வீட்டு கற்றலுக்கு வெற்றிகரமாக பங்களித்துள்ளது.

நாட்டின் பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வித் துறைகளை உள்ளடக்கிய, தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து இராஜாங்க அமைச்சுக்கள் அண்மையில் நிறுவப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பான சமூக–பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை ஆழ்ந்த உறுதியுடன் உள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருளைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் கல்வி அமைப்புகள் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் மற்றும் போதை மருந்துகளிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும்.

சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்துவரும் நுணுக்கங்கள் குறித்து இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இதை நிவர்த்தி செய்வதற்காக, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளது.

இது நிறுவப்பட்டதிலிருந்து, பாராட்டத்தக்க பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த இலங்கை, உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் மிக வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கை மண்ணிலிருந்து அது நீக்கப்பட்ட போதிலும் அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தியும் அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை பரப்பியும் இந்த பயங்கரவாத அமைப்பின் சர்வதேச வலையமைப்பு செயற்பட்டு வருகின்றது.

வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ் தொடர்ந்து ஆதரிக்கின்ற மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த அரசும் சகித்துக்கொள்ளாது என்று நாங்கள் நம்புகிறோம்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு உலகளாவிய சமூகம் குறுகிய உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களை கருத்திற் கொள்ளாது, இலங்கைக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும். உலகிற்கு தற்கொலை குண்டுவெடிப்பை அறிமுகப்படுத்திய இந்த சித்தாந்தம் உலகம் முழுவதும் வன்முறை தீவிரவாத செயல்களுக்கு முன்னுதாரணங்களை அமைத்துள்ளது. தீவிரவாத அமைப்புகளின் ஆட்சேர்ப்பு உந்துதல் இதற்கு சான்றாகும்.

இந்த பயங்கரவாத அமைப்பின் வன்முறை மிக்க கடந்த காலத்தை உலக சமூகம் மறக்கவோ அல்லது மீள எழுதவோ முயலாது என்பதும், மற்றொரு தலைமுறை இளைஞர்களை தீவிரமயப்படுத்துவதையும் கொள்கையை போதிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இக்குழுவின் பிரச்சாரத்தை பரப்புவதற்கு உலக சமூகம் இடமளிக்காது என்பதும் எனது மக்களின் நம்பிக்கையாகும்.

போரின் கசப்பை அனுபவித்த ஒரு தேசம் என்ற வகையில், உலகம் முழுவதும் அமைதியை ஊக்குவிப்பதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. ஐ.நா அமைதி காக்கும் பணியில் நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள ஐ.நா அமைதிப் பணிகளில் 20,000 க்கும் மேற்பட்ட இலங்கை அமைதி காக்கும் படையினருடன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுடன் நீண்டகால தொடர்பு வைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான நிலப்பரப்புகளில் மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவை முக்கியமான சேவைகளை வழங்குகின்றன.

ஒரு தேசமாக, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பின் பொதுவான குறிக்கோளுக்கு பங்களிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபை 75 ஆவது ஆண்டை அடைந்திருக்கும் இச்சந்தர்ப்பம், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியைப் பேணுவதற்கான அணுகுமுறை மற்றும் வெற்றியை சுய மதிப்பீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்பாகும்.

ஐ.நா. அமைப்பு மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடியதாக இருக்கும் அதேநேரம் சமபங்கு, உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

அமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கு எதிராக கேள்விக்குரிய நோக்கங்களின் ஊடாக அரசியலெதிரி வேட்டை நிறுத்தப்பட வேண்டும்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் தேவைகளை மிகச் சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன.

அந்த மக்களின் தேவைகளுக்கான நிலையான தீர்வை கொண்டு வருவதற்கு அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயல்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும்.

எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் அல்லது அதிகார அமைப்பையும் சாராத நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற இலங்கை உறுதிபூண்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய அமைவிடத்தை கொண்டுள்ள நாடு என்ற வகையில், இந்து சமுத்திரம் அமைதி வலயமாக பேணப்படுவதை உறுதிசெய்வது நமது முன்னுரிமையாகும்.

மேலும், இந்து சமுத்திரத்தில் பல சர்வதேச கடல் பாதைகள் உள்ளன, அவை ஏராளமான நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை, எனவே அவை உலகளாவிய வர்த்தகம் மற்றும் வாணிபத்திற்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

புவி–அரசியல் ரீதியாகவும் இந்து சமுத்திரம் முழு உலகினதும் கவனத்தை பெறுகிறது. இந்த சூழ்நிலையில், இந்து சமுத்திரத்தின் நடுநிலைமையைப் பேணுவதற்கும் அதன் பெறுமதிமிக்க கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் சக்திவாய்ந்த நாடுகளும் தேசங்களும் தங்கள் ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும்..

நிறைவாக, நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.” என்று கூறப்பட்டுள்ளது.