“ ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்!” – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்

இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

“ஐ.நா. மனித உரிமை அவையும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்!” என இணையவழியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அவைக் கூட்டத்தொடரில் – தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் உரையாற்றினார்.

ஐ.நா. மனித உரிமை அவையின் 48ஆவது கூட்டத்தொடர் கடந்த 2021 செப்டம்பர் 13இல் தொடங்கி இன்று (01.10.2021) வரை நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்துலக விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமை அவையின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவிலிருந்து இக்கூட்டத்தொடர் இணையவழியில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தொடரின் 29.09.2021 நாளன்று நடந்த கூட்டத்தில், பிரிவு 5-இன் கீழான பொது விவாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு அமைப்பினரும், செயல்பாட்டாளர்களும் வெவ்வேறு சிக்கல்கள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில், தமிழீழச் சிக்கல் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசினார்.  அவரது உரையின் தமிழாக்கம் :

“இலங்கையில் ஈழத்தமிழர்களே பலியாக்கப்பட்டோர் ஆவர். ஐ.நா. மனித உரிமைகள் அவையின் சிறப்பு விதிகள் ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவத்தின் கட்டமைப்பு இன அழிப்புக்கு இரையானவர்கள் என அங்கீகரிக்கக் கோருகிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் – காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடந்த மாதம் பல ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி, அனைத்துலகச் சமூகம் இலங்கை அரசுக்கு எதிரான தடைகளை செயல்படுத்துமாறு கோரினர். இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசின் அதிகாரிகள் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர்.

கடந்த 2021 பிப்ரவரியில், பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரை சற்றொப்ப 400 கிலோ மீட்டருக்கு 2 இலட்சம் தமிழர்கள் பங்கேற்ற ஐந்து நாள் பேரணி நடைபெற்றது. அப்பேரணியில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், தமிழ் மக்கள் பலரையும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் அச்சுறுத்தியும், விசாரித்தும் வருகின்றனர்.  இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா, தமிழர்கள் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டுமென அச்சுறுத்தி வருகிறார்.

ஐ.நா.மனித உரிமைகள் அவை – இலங்கை இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்திடம் சிறப்புக் கூட்டம் நடத்தி இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும், அனைத்துலகச் சமூகம் – பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்களுக்கான நீதியைப் பெற தொழில்நுட்ப உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் நான் கோருகிறேன்! நன்றி!”

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021