உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? | வேல் தர்மா

உக்ரேனியர்கள்

உக்ரேனியர்கள் ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா?

உக்ரேனின் கிழக்குப் பிராந்திய மாகாணங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை தனிநாடாக அங்கீகரித்த ரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உக்ரேன் என ஒரு நாடு இல்லை அது ரசியாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி என்றார். உக்ரேனைச் சுற்றவர ரசியா, பெலரஸ், மொல்டோவா ஆகிய நாடுகளிலும் ரசியா உக்ரேனிடம் இருந்து பிரித்தெடுத்த கிறிமியாவிலும் கருங்கடலிலும் அசோவ் கடலிலும் ரசியப் படைகளைக் குவித்துக் கொண்டு தான் உக்ரேனுடன் போர் செய்யப் போவதில்லை என தொடர்ச்சியாக அறிவித்த புட்டீன் உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினார். உக்ரேனை படைகளில்லாமற் செய்வதற்காக தான் படைகளை அனுப்பியதாகச் சொன்னார்.

புட்டீனின் மனதில் என்ன உண்டு புட்டீனே அறிவார்

உக்ரேனியர்கள்உக்ரேனை புட்டீன் ரசியாவுடன் இணைக்கப் போகின்றாரா? உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றாரா? உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய விடாமல் தடுக்கப் பார்க்கின்றாரா? இக் கேள்விகளுக்கான விடை அவருக்கு மட்டுமே தெரியும். போர் அபாயத்தில் இருக்கும் நாடு ஒன்றை நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இணைக்க முடியாது. பொருளாதாரப் பிரச்சனை உள்ள ஒரு நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க மாட்டார்கள். உக்ரேனைப் போர் அபாயத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் வைத்திருப்பதற்கான நகர்வுகளை 2014இல் இருந்து புட்டீன் செய்து வருகின்றார். ரசியா தலைமையிலான யூரோ-ஏசியன் பொருளாதார ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் உக்ரேனும் ஜோர்ஜியாவும் இணையாமல் அவை நிறைவான கூட்டமைப்புக்கள் ஆக முடியாது.

வஞ்சிக்கப்பட்ட உக்ரேன்

உக்ரேனியர்கள்உக்ரேனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க மாட்டோம் என நேட்டோ எழுத்து மூலமான உறுதி மொழி வழங்க வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக முன்வைத்த புட்டீன் 2022 பெப்ரவரி 23-ம் திகதி உக்ரேன் ரசியாவின் பகுதி என்றார். 1991இல் உக்ரேன் சோவியத்திடமிருந்து பிரிந்து தனிநாடாகிய போது அதனிடம் பெருமளவு அணுக்குண்டுகள் இருந்தன அரசியல் உறுதிப்பாடற்ற ஒரு புதிய நாட்டிடம் அணுக்குண்டுகள் இருப்பது ஆபத்தானது என்பதால் அமெரிக்கா, ரசியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் அவற்றை ரசியாவிடம் ஒப்படைக்கும் படி வேண்டினர். அதற்குப் பதிலாக உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் அந்த நாடுகள் உறுதி வழங்கும் உடன்பாடு ஒன்று 1994-ம் ஆண்டு ஹங்கேரித் தலைநகர் பியூடப்பெஸ்ற்றில் கைச்சாத் திடப்பட்டது. 2014இல் அந்த உடன்பாட்டை மீறி உக்ரேனை ரசியா ஆக்கிரமித்து அதனிடமிருந்து கிறிமியாவை அபகரித்தது. அதற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் எடுத்த நடவடிக்கைகள் போதாது.

நேட்டோ கழுத்தில் கத்தி வைத்த புட்டீன்

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனுக்கு தாம் படைக்கலன்களை அனுப்புவதாக முழங்கினாலும் அவை கேந்திரோபாய படைக்கலன்கள் அல்ல தற்பாதுகாப்பு போருக்கு மட்டும் பயன்படக் கூடியவை. ரசியாவின் போர்த் தாங்கிகளையும், கவச வண்டிகளையும் உலங்கு வானூர்திகளையும் அழிக்கக் கூடிய ஏவுகணைகளையே அவர்கள் வழங்கியுள்ளார்கள். SU -34,  SU-35, MiG-31, MiG-35 போன்ற ரசியாவின் முன்னணி விமானங்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை அமெரிக்காவோ, பிரித்தானியாவோ உக்ரேனுக்கு வழங்கவில்லை. புட்டீனின் சினத்தை அதிகரிக்க அவை விரும்பவில்லை.

நேட்டோ நாடுகளின் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்து, அவற்றின் பெரும்பாலான விமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்யக் கூடிய வலிமை, உலகின் எப்பாகத்திற்கும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளை வீசக் கூடிய வலிமையையும் பெற்றுக் கொண்டே புட்டீன் உக்ரேன் போர்க்களத்தில் இறங்கியுள்ளார். ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal ‘Dagger’ hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய  MiG-31 போர் விமானங்களையும் ரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் ரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நேட்டோ நாடுகள் ரசியாவிற்கு எதிராக சுண்டு விரலைத்தன்னும் அசைக்க மாட்டாது என அவர் நம்புகின்றார்.

பொருளாதாரத் தடை என்னும் வெத்து வேட்டு

உக்ரேனுக்குள் புட்டீன் படை அனுப்பியவுடன் ரசிய வங்கிகளுக்கும் ரசிய அரசின் கடன்முறிகளுக்கும், ரசிய செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரதடைகள் விதித்தன. இது புட்டீன் எதிர்பார்த்ததுதான். தனது பொருளாதாரத்தை அதற்கு ஏற்ப கட்டி எழுப்பி விட்டுத்தான் அவர் களத்தில் இறங்கியுள்ளார். ரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 600பில்லியன் களுக்கும் மேல். ரசியாவின் பாதிட்டில் வரவு அதிகம். ரசியா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பில் 20%இற்கும் குறைந்த அளவிலேயே அமெரிக்க டொலரில் வைத்திருக்கின்றது. உக்ரேன் படை நடவடிக்கை எரிபொருள் விலையை அதிகரிக்கும். அதனால் எரிபொருள் ஏற்றுமதி நாடான ரசியாவின் வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரம் படித்த, சதுரங்க விளையாட்டில் வல்ல, ஜூடோவில் சிவப்புப் பட்டியும் வெள்ளைப் பட்டியும் பெற்றவர் புட்டீன். அவர் எதிரியின் நகர்வுகளை முன் கூட்டியே அறிந்து தன் நகர்வுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

ரசியத் தாங்கிகளும் அமெரிக்க பிரித்தானிய ஏவுகணைகளும்

உக்ரேனியர்கள்உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஜவலின் ஏவுகணைகளை Fire & Forget ஏவுகணைகள் என அழைப்பர். அவற்றை இலக்கை நோக்கி ஏவுவிட்டால் மிகுதி வேலையை அவையே பார்த்துக் கொள்ளும் இலக்கு அசைந்து சென்றாலும் ஜவலின் தன் திசையையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். T-90 போர்த்தாங்கிகள் தன்னைச் சுற்ற ஒரு புகைக் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியின் அகச்சிவப்பு உணரிகளைக் குழப்பிவிடும் செயற்பாடு கொண்டவை. ஜவலின் ஏவுகணைகள் மூன்று மைல் தொலைவுவரை பாய்ந்து தாங்கிகளை அழிக்க வல்லவை. ரசியாவின் மிக்ச் சிறந்த தாங்கிகள் T-14 Armata ஆகும். இவற்றில் எதிரியின் ஏவுகணைகளை குழப்பி திசைமாற்றும் திறன் உண்டு. அதனால் அமெரிக்கா தனது ஏவுகணைகளில் கம்பி வழிகாட்டியைப் பயன்படுத்துகின்றது.

ஏவுகணைகளில் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் அதன் மூலம் எதிரியின் இலக்கு தொடர்பான தகவல்களை ஏவுகணைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் ஏவுகணைக்கு இலக்குத் தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும். இதனால் ரசிய தாங்கிகளை அமெரிக்க ஏவுகணைகள் அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரித்தானியா தனது New Generation Light Anti Tank Weapon (NGLAW) எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளில் இரண்டாயிரத்தை உக்ரேனுக்கு அவசரமாக 2022 ஜனவரியில் அனுப்பி வைத்துள்ளது. தோளில் காவிச் சென்று ஏவக் கூடிய  NGLAW 27.5இறாத்தல் எடையுள்ளது. எண்ணூறு மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அது துல்லியமாகத் தாக்கக் கூடிய வகையில் அது கணினிமயப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரேனியர்கள் கரந்தடிப் போர் அனுபவமற்றவர்கள். அவர்களின் மன உறுதிப்பாட்டில் தான் அவர்களின் வெற்றி தங்கியுள்ளது. போலந்து மற்றும் துருக்கியப் படைகள் இரகசியமாக உக்ரேன் செல்வார்களா?

Tamil News