உக்ரைன் போர்: முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

உக்ரைன் போரில் பங்கேற்க முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் திகதி போர் தொடுத்தது. 6 மாதங்கள் கடந்த நிலையில் போர் முடிந்தபாடில்லை. போரின் தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு வெற்றிகள் கிடைத்தாலும், கடந்த சில நாட்களாக அந்நாடு பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளதால், பொருளாதார ரீதியாகவும் அந்நாடு பாதிப்பை சந்தித்து வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், பகுதியளவு இராணுவ அணிதிரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் கொண்ட முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பகுதியளவு அணிதிரட்டல் இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், நாட்டின் ஆயுத உற்பத்திக்கான நிதியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சுமார் 3 இலட்சம் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையையும் புதின் விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.