உக்ரைன் போர்: ஈராக்கில் ஜோர்ஜ் புஷ்ஷின் தவறுகளிலிருந்து புட்டின் பாடம் படித்தாரா?  பகுதி 1

Russia Invasion of Ukraine Highlights Ugly Truths About U.S. and NATO

சரியாக இருபது வருடங்களுக்கு முன்னர், அதாவது மே 01, 2003 அன்று, ஈராக் நாட்டில் தாம் முன்னெடுத்த முக்கிய இராணுவ நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வருவதாக, “எமது இலக்கு அடையப்பட்டுவிட்டது” என்ற வாக்கியத்தைத் தாங்கிய ஒரு பிரமாண்டமான பதாகைக்கு முன்னே நின்று, ஐக்கிய அமெரிக்காவின் அன்றைய அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ், பகிரங்கமான அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டார். அதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் தான் சட்டவிரோதமான முறையில் அமெரிக்கா அந்த மத்திய கிழக்கு நாட்டை ஆக்கிரமித்திருந்தது.

ஈராக்கின் நகரங்களுக்குள் அமெரிக்க இராணுவத் தாங்கிகள் நகர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு காட்சியை ஏப்பிரல் மாதம் 9ம் திகதியிலிருந்து பல்வேறு பன்னாட்டுச் செய்தி வலைப்பின்னல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. ஈராக்கில் தொடர்ந்து அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளை மீட்டுப் பார்க்கும் போது, மேலுள்ள கூற்றின் உண்மைத்தன்மையை ஒருவரால் ஊகித்தறிய முடியும்.

ஈராக்கின் தலைநகரமான பாக்தாத்தின் வீர்தோஸ் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சதாம் ஹ_செயினின் சிலை உடைத்து வீழ்த்தப்பட்ட காட்சி, ஈராக்கிய மக்களின் விடுதலையையும் பாத் கட்சியின் 35 ஆண்டு கால ஆட்சியின் முடிவையும் பறைசாற்றி இருக்க வேண்டும். உண்மையில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் முடிவாக அது அமையவில்லை. அதற்கு மாறாக, நீண்ட, இரத்தம் தோய்ந்த ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்குக்கு கட்டியம் கூறுவதாகவே அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

ஈராக்கில் அன்று அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை எட்டு வருடங்கள் தொடர்ந்து நீடித்தது மட்டுமன்றி, அந்த மத்திய கிழக்குப் பிரதேசத்தின் உறுதித்தன்மையை சீர்குலைத்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கும் காரணமானது. உண்மையில் அங்கு கொல்லப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கை ஒருபோதும் கணக்கிடப்படவில்லை.

அன்று, ஈராக்கில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எதிர்பார்த்தது போலவே, ரஷ்ய அரசும், 2022இல் உக்ரேனை ஆக்கிரமித்த பொழுது, விரைவான ஒரு வெற்றியைத் தாம் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்தது.

தம்மை யாருமே வெற்றிகொள்ள முடியாது என்ற மமதையில், ஒரு அணிவகுப்பை மேற்கொள்வது போன்று, நீண்ட அணிகளாக உக்ரேனுக்கு நுழைந்ததனால், அமெரிக்கத் தயாரிப்பான ஜவெலின் ஏவுகணைகளின் இலக்குக்கு ரஷ்ய இராணுவத்தினர் இரையானார்கள். உக்ரேனின் தலைநகரமான கீவ்வின் வீதிகளில் மிக விரைவாக அணிவகுத்து வருவோம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஒரு வருடம் கழிந்த பின்பும் கூட முடிவின்றித் தொடர்ந்து நீண்டுகொண்டிருக்கும் ஒரு மோசமான போருக்குள் இப்போது அவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் இழைத்த அதே தவறை இன்று ரஷ்ய அதிபரான புட்டினும் இழைப்பதைக் காணமுடிகிறது. அதிபர் புஷ் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ரஷ்ய அதிபர் உக்ரேனின் மீது மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த இரண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் நாம் காணும் ஒற்றுமைகள் எவை? வேற்றுமைகள் எவை?

சுருக்கமான பதில்: உண்மையில் இரண்டு ஆக்கிரமிப்புகளுக்கும் இடையே ஆழமான ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே பொய்யான சாக்குப்போக்குகளைச் சொல்லி ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள். இரண்டிலும் ஐக்கிய நாடுகளின் அதிகாரம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் இரு சாராரையும் போரை முன்னெடுக்கத் தூண்டிய காரணிகளுள் வேறுபாடுகள் அதிகமாக இருக்கின்றன என்று வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இரண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு மரபு ரீதியிலான போரை நடத்துவதில் ரஷ்யாவைவிட அமெரிக்கா வெற்றியடைந்ததைக் காணமுடிகிறது.

அமெரிக்காவின் தலைமையில் ஈராக்கில் போரை முன்னெடுத்த கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி, தமது படைப்பலம் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த மமதை உணர்வுதான் இருசாராரையும் போருக்கு இட்டுச் சென்றிருக்கிறது” என்று கலிபோர்ணியாப் பல்கலைக்கழகத்தில், ஈராக்கிய வரலாற்றுப் பேராசிரியராக விளங்குகின்ற இப்ராஹிம் அல்-மறாஷி கருத்துத் தெரிவித்தார்.

போரில் ஈடுபட்ட இந்த இரு தரப்பினருமே தமது எதிரி நாட்டின் தலைமையை இலகுவாக அகற்றி, தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கக்கூடிய, தமது சொந்த நலனைக் கவனிக்கக்கூடிய அரசை நிறுவலாம் என்ற எண்ணத்துடனே தான் தமது ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்தார்கள்.

“அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஈராக்கின் தலைமையை அவர்களால் அகற்ற முடிந்தது. ஆனால் ஈராக்கின் மக்கள் தொடர்பாக அவர்கள் தப்புக்கணக்குப் போட்டிருந்தார்கள்” என்று அல்-மறாஷி தெரிவித்தார். சதாம் ஹ_செயினின் ஆட்சியைக் கவிட்டு, தம்மை விடுவிக்க வந்தவர்களாக ஈராக் மக்கள் தம்மைப் பார்ப்பார்கள் அமெரிக்கா எண்ணியது. ரஷ்யா என்ன யோசித்தது? இந்த பாசிச ஆட்சியை அகற்றுவதனூடாக உக்ரேன் மக்கள் தம்மை மீட்பர்களாக வரவேற்பார்கள் என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் விளைவு ஒன்றாகவே இருந்தது. இரண்டு அதிகார மையங்களையும் தலைகுனிய வைக்க்ககூடிய விதத்தில் மக்களின் தேசிய எழுச்சி வடிவெடுத்திருந்தது.

அவர்களது மமதை பல வழிகளில் வெளிப்பட்டது,

புஷ் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், ஈராக்கை ஆக்கிரமிக்கும் முடிவை மேற்கொண்ட பொழுது, ஈராக்கிய ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே அவர்களது கவனம் முற்றுமுழுதாகவிருந்தது, இதன் காரணமாக அவர்கள் எதிர்பார்க்காத விளைவுகள் தொடர்பாக அவர்கள் அலட்சியமாக இருந்தார்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதுமட்டுமன்றி, அவர்களால் சகிக்க முடியாத பல உண்மைகளையும் பார்க்க முடியாதவாறு அவர்களது கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் றொண் சுஸ்கின்டுக்கு கூறிய வார்த்தைகளிலிருந்து இது தெளிவாகின்றது. “இப்போது நாங்கள் ஒரு சாம்ராஜ்யமாகவிட்டோம். நாம் செயற்படும் போது, எமது யதார்த்தத்தை உருவாக்குகின்றோம்.” என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

தமது சொந்த யதார்த்தத்தை உருவாக்குவது என்பது பன்னாட்டுச் சட்டத்தையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதையே குறிக்கும். அமெரிக்காவானாலும் சரி ரஷ்யாவானாலும் சரி இரண்டு நாடுகளுமே இந்த சாசனம் உருவாக்கப்பட்ட போது அதில் ஒப்பம் இட்ட நாடுகளாகும். இந்த போர்க்குணம் நிறைந்த நாடுகள் இறைமையுள்ள இரு நாடுகளை தாக்குவதை இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமைக்கப்பட்ட உலக ஒழுங்கமைப்பினால் தடுக்க முடியவில்லை.

ரஷ்யாவும் சரி அமெரிக்காவும் சரி பொய்யான சாக்குப் போக்குகளைச் சொல்லித்தான் போரைத் தொடங்கினார்கள். அமெரிக்காவையும் அதன் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய இராச்சியத்தையும் எடுத்து நோக்கும் போது, அவர்களது சந்தேகத்துக்குரிய புலனாய்வு, சதாம் ஹ_செய்னை அல்கைடாவை ஆதரிப்பவராகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பவராகவும் ஒரு பன்னாட்டுப் பயங்கரவாதியாகவும் சித்தரித்தது.

அல்-மறாஷிக்கு இது தொடர்பாக நேரடியான அனுபவம் இருக்கிறது. ஈராக்கை ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்த எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் தான் எழுதிய விடயங்கள் களவாடப்பட்டதாக அல் மறாஷி தெரிவித்தார். சதாமை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரித்து, அவரது ஆட்சி கவிழ்க்கப்படவேண்டும் என்பது போன்ற ஒரு தோற்றப்பாடு அங்கு ஏற்படுத்தப்பட்டது.

கீவ் நகரத்தில் தங்களுக்கு எதிரான ஒரு நிர்வாகம் இருப்பதாகவும் அந்த ஆட்சி கவிழ்க்கப்படவேண்டும் என்று கூறியதுடன், உக்ரேனின் யூத இனத்தைச் சார்ந்த அதிபரான ஸெலென்ஸ்கியை புதிய நாஸிகளின் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் ஒருவராகவும் ரஷ்ய சித்தரித்தது.

“நாட்டை ஆளும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு கும்பலிடமிருந்து உக்ரேன் மக்களைப் பாதுகாப்பதே புட்டினின் முதன்மை நோக்கமாக இருந்தது” என்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் போரசிரியரான மார்கரெட் மக்மிலன் தெரிவித்தார். போதைக்கு அடிமையான இந்தக் கும்பலுக்கு உக்ரேனிய மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்ற உண்மை புலப்பட்ட போது, உக்ரேனிய மக்களுக்கு எதிராகப் போர் திருப்பப்பட்டது.

உக்ரேனின் கிரேமியாக் குடாநாட்டை ரஷ்யாவுடன் இணைத்த நிகழ்வின் முதலாவது ஆண்டைக்கொண்டாடுவதற்காக, ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோவில், கிரெம்ளினுக்கு வெளியே, 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி புதன்கிழமை ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. “ரஷ்ய இனத்தைச் சார்ந்த மக்களைப் பாதுகாப்பதையும் தமது தேசத்தின் வரலாற்று வேர்களை மீளப்பெற்றுக்கொள்வதற்காகவுமே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று புட்டின் அந்த நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

நன்றி: அல்ஜஸீரா

தமிழில்: ஜெயந்திரன்