புதிய தொழில்நுட்பங்களையும், உத்திகளையும் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன்

உக்ரைன் ரஸ்ய போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்துவதற்கு உக்ரைன் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்குலகம் தன்னிடம் உள்ள அத்தனை வளங்களையும் கூட்டாக களமிறக்கியுள்ளது.

ஜவலின், எரி-4 போன்ற மிக நவீன தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஸ்ரிங்கர், Starstreak anti-aircraft missile, சாம்-8, சாம்-14 போன்ற ரஸ்யத் தயாரிப்பான பெருமளவான ஏவுகணைகளையும் உக்ரைன் படையினருக்கு அள்ளி வழங்கி வருவதுடன், செய்மதிகள் மூலமும், உக்ரைனுக்கு அருகில் உள்ள நேட்டோ  நாடுகளின் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட தனது வான்படை விமானங்கள் மூலமும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் உக்ரைன் படையினருக்கு ரஸ்யாவின் படை நகர்வுகள் தொடர்பில் தகவல்களை வழங்கி வருகின்றன.

புதிய தொழில்நுட்பங்கள்நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய பிராந்திய தளங்களில் உள்ள அமெரிக்காவின் அவாக்ஸ் உளவு விமானம், எப்-15, எப்-16, எப்-18, மற்றும் எப்-35 விமானங்களும் நேட்டோ நாட்டு எல்லைக்குள் தமது பறப்புக்களை மேற்கொண்டு, அங்கிருந்தே உக்ரைனில் இடம்பெறும் ரஸ்யாவின் நகர்வுகள் தொடர்பான தகவல்களை திரட்டி உக்ரைன் தரப்புக்கு வழங்கி வருகின்றன.

அது மட்டுமல்லாது, ஒய்வுபெற்ற படை அதிகாரிகளையும், சிறப்பு படையினரையும் உக்ரைனின் பாதுகாப்பான பகுதி எனப்படும் மேற்கு பகுதிக்கு அனுப்பி, அங்கிருந்து பயிற்சிகளையும், தாக்குதல் திட்டங்களையும் வகுத்து வழங்கி வருவதுடன்,  தம்மால் வழங்கப்படும் ஆயுதங்களையும் அங்கு வைத்து விநியோகித்து வருகின்றனர்.

போலந்தின் எல்லையில் இருந்து 15 மைல்கள் தொலைவில் இருந்த இவ்வாறான தளங்களில் ஒன்றைத்தான் கடந்த 13 ஆம் நாள் ரஸ்யாவின் ஏவுகணைப் படை தாக்கி அழித்திருந்தது. தாக்குதல் இடம்பெற்ற சமயம் அங்கு 1000 இற்கு மேற்பட்ட மேற்குலக மற்றும் உக்ரைன் படையினர் தங்கியிருந்தனர். கலிபர் மற்றும் கே.எச்-555 வகையான 30 ஏவுகணைகள் வீழந்து வெடித்ததாகவும், இந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப் பட்டதுடன், 135 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ள போதும், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் அதிகம் என மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

3 பிரித்தானியாவின் சிறப்புப் படையினரும் பல அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 180 பேர் கொல்லப்பட்டதுடன், பல நூறு பேர் காயமடைந்துள்ளதாகவும், மேற்குலகம் வழங்கிய பெருமளவான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் படையினருடன் இணைந்து போரிடுவதாக தெரிவித்து பல நாடுகளில் இருந்து சென்றவர்களில் ரஸ்ய உளவாளிகளும் ஊடுருவியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் படையினரின் ஆயுதங்களை களைவது மற்றும் அவர்களின் போரிடும் வலுவை இல்லாது செய்வது என்பனவும் ரஸ்யா மேற்கொண்டுள்ள சிறப்புப் படை நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று. ரஸ்யா அதனை மெல்ல மெல்ல நிறைவேற்றி வருகின்றது. உக்ரைனின் வான்படையின் பலத்தை கணிசமாகக் குறைத்துள்ள ரஸ்யா, தற்போது அவர்களின் ஆயுத உற்பத்தி நிலைகளையும் தாக்கி அழித்து வருகின்றது. சைரோமியர் தாங்கி உற்பத்தி நிலையத்தை கடந்த 6 ஆம் நாள் தாக்கி அழித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்உக்ரைன் படையினருக்கான கவசவாகன தயாரிப்பு, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் கவசவாகன தயாரிப்பு மற்றும் திருத்தும் பணிகளை மேற்கொண்டு வந்த இந்த தொழிற்சாலை முற்றாக அழிவடைந்துள்ளது. அதேபோல கொஸ்ரோமெல் பகுதியில் உள்ள அன்ரனோவ் விமான உற்பத்தி நிறுவனம், லிவிவ் பகுதியில் உள்ள விமானங்களை பழுது பார்க்கும் நிறுவனம் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

போர் ஆரம்பமாகிய நாளே உக்ரைனின் பேர்டன்ஸ் துறைமுகத்தை கைப்பற்றியதுடன், கடற்படையின் 10 கடற்படை கப்பல்களை ரஸ்யா கைப்பற்றியது, அதனைத் தொடர்ந்து உக்ரைன் கடற்படையினர் தமது மிகப்பெரும் Krivak III-class frigate எனப்படும் போர்க் கப்பலை மக்கலேவ் துறைமுகத்தில் வைத்து தகர்த்து விட்டனர்.

அது மட்டுமல்லாது உக்ரைன் படையினரின் சிறப்பு படை பிரிவான அசோவ் படைப்பிரிவு (Azov Battalion) முற்றாக மரியபோல் பகுதியில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகையை அவர்கள் உடைக்கத் தவறினால் அவர்களின் சிறப்பு படையணி முற்றாக அழிந்துபோகும் நிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த படை அணியை அழிப்பதும் ரஸ்யாவின் நோக்கங்களில் ஒன்று.

புதிய தொழில்நுட்பங்கள்எனினும் இந்த தாக்குதல்களில் ரஸ்யாவும் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருகின்றது. ரஸ்யா படையினர் பழைய ஆயுதங்களையே பயன்படுத்துவதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள போதும் அவற்றை எதிர் கொள்வதற்கும் மேற்குலக படையினரின் வழி காட்டுதலில் இயங்கும் உக்ரைன் படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக களநிலமைகள் தெரிவிக்கின்றன.

ஒரு விமானத்தை வீழ்த்துவதற்கு 10 இற்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஒரேசமயத்தில் ஏவும் புதிய உத்தியை அவர்கள் கையாண்டுவருகின்றனர். அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இந்த வாரம் ரஸ்யாவின் எஸ்யூ-25 தாக்குதல் விமானத்தை தாக்கியபோதும் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் அதனை பெலாரூஸில் உள்ள தளத்தில் விமானி தரையிறக்கியது அந்த விமானத்தின் தப்பிப் பிழைக்கும் திறன் தொடர்பில் மதிப்பை உயர்த்தியுள்ளதாக படைத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 2015 ஆம் ஆண்டு சிரியாவில் களமிறங்கியபோது  320 இற்கு மேற்பட்ட தனது புதிய ஆயுதங்களை பரீட்சித்து பார்த்த ரஸ்யா தற்போது உக்ரைன் போரிலும் புதிய ஆயுதங்களை பரீட்சிக்க ஆரம்பித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்அமெரிக்காவின் ஸ்ரிங்கர் வகை ஏவுகணைகள் மற்றும் ஏனைய நாடுகள் வழங்கிய ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பம் மூலம் ஏவுகணை தாக்குதல்களை தடுக்க முடியும் என நம்பிய உக்ரைனுக்கு தற்போது ரஸ்யா தனது குறும்தூர ஏவுகணைகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கன்டர் எம் (Iskander-M) எனப்படும் 500 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகளில் எதிரிகளின் ஏவுகணை தடுப்பு பொறிமுறைகளை குழப்பும் சிறிய வகை ஏவுகணைகளை பொருத்தி  (Decoy systems) ஏவும் புதிய தொழில்நுட்டபத்தை ரஸ்யா இந்த வாரம் பரீட்சித்து பார்த்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்மேற்குலக படையினரிடம் இல்லாத இந்த தொழில்நுட்பம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடன் 6 சிறிய ஏவுகணைகளை சுமந்துவரும் பிரதான ஏவுகணை எதிரியின் ஏவுகணை தடுப்பு பொறிமுறையை கண்டறிந்ததும், சிறிய ஏவுகணைகளை வெளிவிடுவதால் எதிரியின் தடுப்பு பொறிமுறையில் இருந்து தப்பித்து தனது இலக்கை துல்லியமாக அழித்துவிடும்.

முதலில் இதனை கொத்தணிக் குண்டுகள் என தவறாக நினைத்த மேற்குலக படை நிபுணர்கள் தற்போது இந்த தொழில் நுட்பத்தை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். சிறிய ஏவுகணைகள் அதிக வெப்பத்தை வெளியிடுவதுடன், ராடர் அலைகளையும் குழப்பும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

புதிய தொழில்நுட்பங்கள்நிஜமான போர்க்களத்தில் தனது உத்தி களையும், புதிய தொழில் நுட்பங்களையும் பரீட்சித்துப் பார்க்கும் ரஸ்யாவின் நடவடிக்கை என்பது எதிர் காலத்தில் அவர்களை மேலும் பலப்படுத்தும் களமாகவே அமையப் போகின்றது.

 

 

Tamil News