உக்ரைன் ரஷ்யா போர்- அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும்  இரு நாடுகளும் அறிவிப்பு

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் ரஷ்யா போர்

போர் தொடர்கின்ற போதும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய  இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி 24-ம் திகதி உக்ரைன்  மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக மேரிபோல் நகரில் ரஷ்ய இராணுவம் நேற்று சண்டை நிறுத்தத்தை அமுல் செய்தது. அந்த நகரில் சிக்கித் தவித்த பலர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் நிருபர்களிடம் கூறும்போது, “ஏப்ரல் 1-ம் திகதி முதல் ரஷ்யாவுடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.