மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன் – ரஸ்யாவிடம் சரணடையுமா?

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்: இன அழிப்பில் இருந்து மக்களை காப்பதற்கும், ரஸ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உக்ரேனின் ஆயுதங்களை களைவதே சிறந்தது என்ற வாதத்துடன் சிறப்பு படை நடவடிக்கையை ரஸ்யா கடந்த வியாழக்கிழமை (24) அதிகாலை ஆரம்பித்துள்ளது. முதல் நாளில் 83 இற்கு மேற்பட்ட படைத்துறை இலக்குகளை தாக்கி அழித்த ரஸ்யா வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளின் ஊடாக வேகமாக நகர்ந்துள்ளது.

உக்ரைன் படையினர் பல இடங்களில் எதிர்ப்புக்களை காண்பித்த போதும், ரஸ்யாவின் படை பலம் உக்ரேனின் வான்படை, வான் எதிர்ப்பு படை மற்றும் கட்டளை பீடங்களை தகர்த்து விட்டதால் பெருமெடுப்பிலான தாக்குதல்களை முன்னெடுக்க முடியாத நிலையில் உக்ரைன் படையினர் தற்காப்பு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த செய்தி எழுதும் சமயம் ரஸ்யா படையினர் உக்ரேனின் தலைநகர் கிவிவ் இன் வடக்கு நகாருக்கு முன்நகர்ந்துள்ளதாகவும், அங்கு வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இந்த நகரானது தலைநகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

மோதல்களில் இரு தரப்பும் சேதங்களை சந்தித்துள்ளபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த மும்முனைத் தாக்குதலின்போது மேற்கு பகுதியை மக்கள் வெளியேறு வதற்கான பாதையாக ரஸ்யா விட்டுள்ளதால் பெருமளவான மக்கள் தலைநகரைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், அருகில் உள்ள நாடுகளுக்கும் சென்றுள்ளனர். இதுவரை பல பத்தாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சில ஆயிரம் மக்கள் இருகில் உள்ள போலந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைன் படையினரை பலவீனப்படுத்துவது, தலைநகரை சுற்றிவளைத்து ஒரு முற்றுகைக்குள் வைத்து தற்போதைய ஆட்சியாளர்களை வெளியேற்றுவது, ரஸ்யாவினதும், அதன் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு அரசை அமைப்பதே ரஸ்யாவின் திட்டமாக இருக்கலாம்.

இந்த படை நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ரஸ்யா மீது கடுமையான பொருளாதார அழுத்தங்களை அவை மேற்கொண்டுள்ளன. ரஸ்யாவின் பொருளாதாரத்தை முற்றாக முடக்குவதே தமது நோக்கம் என அவை தெரிவித்துள்ளபோதும் இந்த நடவடிக்கை மேற்குலகத்தையும், அங்கு வாழும் மக்களையும் பாதிக்கலாம் என்பதே நிதர்சனம்.

ரஸ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் காட்டமான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. மேற்குலகத்தின் பொருளாதாரத் தடையில் இந்த நாடுகள் இணைந்துகொள்வதற்கான சாத்தியங்களும் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேற்குலகத்தின் தடைகளை தாண்டி தமக்கு தேவையான பசளை வகைகளை இறக்குமதி செய்வதற்கு ரூபாய் மூலமான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளப் போவதாக இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை (25) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கோவிட்-19 நெருக்கடியினால் சீரழிந்துள்ள தமது பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை மேலும் பின்தள்ளிவிடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு உண்டு.

பொருளாதார தடைகளுக்கு அப்பால், உக்ரேனுக்கு படைபல ரீதியாகவே அல்லது கனரக ஆயுதங்களை வழங்கி உதவிகளை மேற்கொள்ளவோ மேற்குலகம் விரும்பவில்லை. அது ரஸ்யாவுடன் தம்மை ஒரு நேரிடையான போருக்கு இட்டுச் செல்லும் என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு.

எனவே ரஸ்யாவை பலவீனப்படுத்தும் மறைமுகமாக திட்டத்துடன் மேற்குலகம் உக்ரேனை பலி கொடுத்துள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். அதனை தான் உக்ரைன் அதிபரின் கருத்தும் பிரதிபலிக்கின்றது. நாம் தனிமையில் நின்று போராடும் நிலைக்கு கைவிடப்பட்டுள்ளோம் என அவர் கடந்த வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News