Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் மனித உரிமைகள் சீரழிந்துள்ளது-பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பு

சிறீலங்காவில் மனித உரிமைகள் சீரழிந்துள்ளது-பிரித்தானிய மனித உரிமைகள் அமைப்பு

சிறீலங்காவில் மனித உரிமை செயற்பாடுகள் சீரழிந்துள்ளதாகவும், தற்போது சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ள விமர்சனத்திற்குரிய புதிய நியமனங்கள் அங்குள்ள நிலமையை மேலும் மேசமாக்கியுள்ளதாகவும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (18) சமர்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பான 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடு தொடர்பில் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. நீதி மற்றும் சட்டபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீது சிறீலங்கா அரசு தனது கண்காணிப்புக்களை அதிகப்படுத்தியுள்ளதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அங்கு இனங்களுக்கு இடையிலான பதற்றங்கள், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகள், மனித உரிமை செயற்பாட்டளர்கள் மீதான துன்புறுத்தல்கள் என்பன அதிகரித்துள்ளது. ஐ.நா தீர்மானம் 40/1 ஜ நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளும் மிக மந்தமாகவே உள்ளது.

போரின் இறுதி நாட்களில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட படையணியை வழிநடத்திய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் பிரித்தானியாவும், அதன் அனைத்துலக நண்பர்களும் தமது கவலையை வெளியிட்டிருந்தன. இந்த நியமனமானது மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியை எழுப்பியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version