ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரமும் உள்ளடங்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இலங்கை தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார் .

2021 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான கௌரவம் உள்ளிட்டவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் அவதானிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில்  பதிலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் சார்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, ஆகியோர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர். அதே நேரம் நாளை தினம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற 46ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் நிகழ்வில் இலங்கை தொடர்பாக 46/1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பத குறிப்பிடத்தக்கது.

Tamil News