யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோரை பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும்  பாதுகாப்பு முத்திரையைப் பயன்படுத்தி ஓமான் நாட்டுக்கு தொழிலுக்குச்  செல்ல முயன்ற இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் விமான நிலைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, ஓமானுக்கு  செல்வதற்காக குடிவரவுத் திணைக்களத்தின்  கருமபீடத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது இவர்களால் அங்கு  வழங்கப்பட்ட அவர்களது கடவுச்சீட்டில் இடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் வெளிநாட்டு பணியக உத்தியோகபூர்வ முத்திரைகள் என்பன போலியானவை என கண்டறிந்த குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவுக்கு  அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதன்போது அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின்   அடிப்படையில், கொழும்பைச் சேர்ந்த  தரகர் ஒருவரே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.