தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம்

தமிழ் மக்களின் தவிப்பு

பி.மாணிக்கவாசகம்

தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பு: தமிழ்த்தேசியமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள், இன்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் செய்து வந்த தமிழ்க்கட்சிகள், தமது அரசியல் செல்நெறியில் இப்போது இரு கூராகப் பிளவுண்டிருக்கின்றன.

ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநாட்டுக் கோரிக்கை தளர் நிலைமைக்கு ஆளாகியது. ஒற்றையாட்சியின் கீழ் தனிநாடு கோரமாட்டோம் என சத்தியப் பிரமாணம் செய்து நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டதன் மூலம் தமிழ்த் தலைவர்கள் தமிழ்த்தேசியத்தில் – தனிநாட்டுக் கோரிக்கையில் சமரசம் செய்து கொண்டார்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வு காண அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அதன்படி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இறைமையுடன் கூடிய மீளப் பெற முடியாத ஆட்சி அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தீர்வே முடிவு என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்தார்கள்.

தமிழ் மக்களின் தவிப்புஆனால் வடக்கு கிழக்கு இணைந்த தாயக நிலம், சிங்களப் பேரினவாதத்தின் பௌத்த சிங்களத் தனிநாடு என்ற அரசியல் முனைப்பில் பலத்த தாக்கத்திற்கு உள்ளாகியது. நீதிமன்ற உத்தரவொன்றின் மூலம் இணைந்திருந்த வடக்கு கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அந்த மாகாணங்களின் மாகாணசபைத் தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டன. வெற்றி பெற்று ஆசனங்களைக் கைப்பற்றின. ஆட்சி நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டன.

இந்த அரசியல் செயற்பாட்டின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிரிக்கப்பட்ட மாகாணங்களின் ஊடாகக் கைப்பற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளாகிப் போயின.

வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடாவிட்டால், வேண்டாத அரசியல் எதிர்க்கட்சிகள் அவற்றின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்ற அரசியல் ரீதியான அச்சத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். அந்தப் போக்கில் வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சி அதிகார அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து முரண் நிலையில் தேர்தல் களத்தில் குதித்திருந்தார்கள். மக்கள் தமிழ்த் தேசியப் பற்றுடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமிழ்க்கட்சிகளைத் தேர்தலில் தெரிவு செய்தனர். தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தமிழ்த்தேசியம் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி நிர்வாகத்தைப் பெரும்பான்மைப் பலத்துடன் கைப்பற்ற முடியவில்லை. தேர்தலில் கிடைத்த வெற்றியை தாராளவாத அரசியல் போக்கை வெளிப்படுத்துவதற்காக முஸ்லிம்களிடம் தாரைவார்த்தார்கள். ஆனால் அந்தத் தாராள அரசியல் அணுகுமுறைக்கு பிரதிபலனாக தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. முஸ்லிம் மக்களின் நலன்களையே முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்தியவர்களிடம் உரிமையுடன் தட்டிக்கேட்டு தமிழர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் தமிழ்த் தலைவர்களினால் முடியாமற் போனது.

அதேவேளை இந்தத் தாராளவாத அரசியல் கொள்கையின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டு அரசியலில் முஸ்லிம்களைப் பங்காளர்களாக இணைக்க முடியாமலும் போனது. இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – ‘தமிழ் பேசும் மக்களின் தாயகம்’ என்ற நிலைப்பாட்டிற்கு முஸ்லிம்களை இணங்கச் செய்யவும் முடியவில்லை. மாறாக முஸ்லிம்கள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கின்ற பேரினவாதிகளின் அரசியல் நிலைப்பாட்டிற்கே வலுச் சேர்த்தார்கள்.

வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கான முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற முடியாத நடைமுறை அரசியல் நிலையிலும் தமிழர் தாயக அரசியல் போக்கில்  அவர்கள் இறுக்கமாகவே இருந்தார்கள். ஆனால் தமிழர் தாயக அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான நடைமுறை அரசியல் செயற்பாட்டை அவர்கள் முன்னெடுக்கவில்லை. அதாவது முஸ்லிம் மக்களையும் பங்காளர்களாக இணைத்துக் கொண்டு தாயகக் கோட்பாட்டு அரசியலில் வெற்றிகரமாகப் பயணிக்கவில்லை.

தமிழ் மக்களின் தவிப்புவடக்கு மாகாணசபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் அமோக வெற்றி காணச் செய்தார்கள். தேர்தல் வெற்றியையடுத்து, தமிழ் அரசு உதயமாகி விட்டதாக ஊடகம் ஒன்று பெருமையுடன் செய்தி வெளியிட்டது. ஆனால் ஓய்வு நிலை நீதியரசரும் முதலமைச்சருமான  சி.வி.விக்னேஸ்வரனால் உள்ளதைக் கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்த முடியவில்லை.

மாகாணசபை உறுப்பினர்களும் தங்களை நிகரற்ற அரசியல்வாதிகளாகப் பாவனை செய்து நடந்து கொண்டார்களே தவிர, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கமைய செயற்படவில்லை. அல்லது செயற்பட முடியவில்லை. மக்களுக்கு சேவையாற்று வதிலும் பார்க்க கட்சி அரசியல் நடத்துவதிலேயே அதிகக் கவனம் செலுத்திச் செயற்பட்டார்கள். இதனால், வடமாகாண ஆட்சி நிர்வாகத்தை வலுவற்றதாக்குவதில் ஈடுபட்டிருந்த பேரின அரசுக்கு மாகாணசபையின் ‘குலைந்த’ செயற்பாடு உறுதுணையாக அமைந்து விட்டது. தமிழர்களின் பொறுப்பில் நிர்வாகச் செயற்பாடுகள் சென்றடைந்தால், அதனை அவர்கள் சிறப்பாகச் செயற்படுத்த மாட்டார்கள் என்ற அவச் சொல்லுக்கே வடக்கு மாகாணசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆளாகிப் போனார்கள்.

மறு புறத்தில் தமிழர் தாயகக் கோட்பாட்டை இடித்தழிப்பதற்கான பேரின ஆட்சியாளர்களின் அரசியல் நடவடிக்கைகளை அவர்களால் வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களின் வலிந்த குடியேற்றத்தையும் பௌத்த மத ஆதிக்கத்தையும் தமிழ் அரசியல் கட்சிகளினால் ஆக்கபூர்வமாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இனவாத ஆட்சிப் போக்கினால், அவற்றைத் தாமதப்படுத்தவும் அவர்களால் முடியாமற் போனது.

இதனால் நிலவழித் தொடர்புடன் கூடிய இணைந்த வடக்கும், பெருமளவில் கிழக்குப் பிரதேசக் காணிகளும் பேரினவாத அரசினாலும், இராணுவத்தினராலும், பௌத்த பிக்குகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பிரதேசத்தைத் துண்டாடி சீர்குலைத்திருக்கின்றன. இது தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதற்கே வழிவகுத்துள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா? - BBC News தமிழ்
ராஜீவ் – ஜே.ஆர் ஒப்பந்தம்

ராஜீவ் – ஜே.ஆர் ஒப்பந்தம் ஒற்றை ஆட்சியின் கீழ் மாகாண ஆட்சி முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டிருந்தது. அதற்கான அரசியலமைப்பு மாற்றமும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழிவகுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கமைய, இலங்கை அரசுகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள பேரினவாத ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரச மயப்படுத்தவதற்கான நடவடிக்கைகளையே முனைப்புடன் முன்னெடுத்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமற் செய்து மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை முற்றாக இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத் திருக்கின்றார்கள்.

இத்தகைய இக்கட்டான அரசியல் பின்னணியிலேயே தமிழரசுக்கட்சி தவிர்ந்த தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்த முற்பட்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் தவிப்புஅதேவேளை, மனித உரிமை மீறல்களுக்கான இலங்கையின் பொறுப்புக் கூறல் விவகாரத்தை முனைப்புடன் கையாள முற்பட்டுள்ள அமெரிக்காவின் அழைப்பினை யடுத்து, தமிழரசுக்கட்சி அமெரிக்க உயர் மட்டத்தினரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இந்த முயற்சிகள் இடம் பெற்றிருந்த போதிலும், ஏனைய தமிழ்க்கட்சிகள் இந்தியாவை முதன்மைப் படுத்தி, அதன் ஊடாக மாகாணசபை ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

ஆனால் தமிழரசுக் கட்சியோ மாகாணசபைக்கு அப்பால் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமெரிக்காவை நாடியுள்ளது. இலங்கையின் பொறுப்புக் கூறல் கடப்பாட்டை வலியுறுத்துகின்ற அதேவேளை, இனப்பிரச்சினை தொடர்பிலும் இதுகால வரையிலும் இல்லாத வகையில் அமெரிக்கா கவனம் செலுத்தியிருக்கின்றது.

அமெரிக்காவின் இந்தப் புதிய அணுகுமுறை, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையின் அடிப்படையிலானதல்ல. அது இந்து சமுத்திரப் பிரதேசத்தை முனைப்புடன் ஆக்கிரமிக்க முற்பட்டுள்ள சீனாவின் நடவடிக்கைகளை முடக்குகின்ற செயற்பாட்டின் ஓர் அம்சமாகவே கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்காவைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக்காண வேண்டும் என்று தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிடம் நிதியுதவி கேட்கச் சென்ற தருணத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டமைப்பின் தலைவர் புறமொதுக்கி இருந்தார்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்றுள்ள நிலையில், இந்திய அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த அங்கு செல்வது பொருத்தமற்றது என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய அழைப்பை ஏற்கவில்லை என்று தெரிகின்றது.

இந்த நிலையில்தான் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் உள்ளடக்கி கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் தவிர்த்து ஏனைய கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் கோருவது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்கள். இந்தக் கோரிக்கைக்கான கடிதத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சித் தலைவர்கள் ஒப்பமிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் சம்பந்தன் அதற்கு உடனடியாக உடன்படவில்லை.

தமது கட்சியாகிய தமிழரசுக் கட்சியுடன் கலந்து பேசியே அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, அந்த தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் பிறிதொரு நாளைக்கு (21 ஆம் திகதிக்கு) ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த்தேசியத்தை உயிர்மூச்சாகக் கொண்டுள்ளதாகக் கூறும் வடக்கு கிழக்குத் தமிழ்க்கட்சிகள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மாகாணசபை ஆட்சி முறை என்பது இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண வேண்டும் என்றும் இரு கூராகப் பிளவுபட்டு நிற்கின்றன.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதன் மூலம் தமது காணி உரிமைகள், வாழ்வுரிமைகள், அரசியல் உரிமைகள் நிரந்தரமான முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்கள் இந்த ‘இரு கூர் அரசியல்’ நிலைமைக்குள் சிக்கித் தவிப்பதையே காண முடிகின்றது.

Tamil News