ட்விட்டர் சமூகவலைதள செயலி: நீல குருவிக்குப்பதிலாக நாய்- சொன்னதை செய்த எலான் மஸ்க்

ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ட்விட்டர் மொபைல் வெர்சனில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவில்லை. எலான் மஸ்க்கின் இந்த திடீர் நடவடிக்கை ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். ப்ளூ டிக் கட்டண சந்தா முறை தொடங்கி பல மாற்றங்கள் இதில் அடங்கும்.

தளத்தில் தொழில்நுட்ப மாதிரியான அம்சங்கள் மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ட்விட்டர் செயலியின் லோகோவையே மாற்றி அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

புதிய லோகோவின் பின்னணி: ட்விட்டரின் லோகோவை ஏன் மாற்றினார் என்பதற்கும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கமளித்துள்ளார். முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ட்விட்டர் லோகோவை2 ‘Doge’ படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இந்த உரையாடல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பயனருக்கு எலான் மஸ்க், லோகோவை மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதன்படியே தற்போது நீல குருவிக்குப் பதிலாக Dogecoin லோகோவான நாய் படத்தை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் ‘Dogecoin’ எனப்படும் க்ரிப்டோகரென்சி நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.