திருப்பமும் பொறுப்புக்களும் -பி.மாணிக்கவாசகம்

போர்க்கால மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலும் நடப்பு நிலையில் பொதுவான மனித உரிமை நிலைமைகளையும் கவனத்திற் கொண்டிருந்த ஐநா மனித உரிமைப் பேரவை இம்முறை பொருளாதார உரிமை குறித்த நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கின்றது. இது தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினையாகிய உரிமை மீறல்களுக்கு நீதி கோருகின்ற விடயம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற அரசியல் உரிமைப் பிரச்சினை என்பவற்றின் மீதான கவனக்குவிப்பைக் குறைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

பொதுவான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூறுதல் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துதல், ஜனநாயக உரிமைகள் மற்றும் பண்புகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு அப்பால், தேசிய அளவில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்த புதிய பார்வையை திரைநீக்கம் செய்திருப்பதைக் காண முடிகின்றது.

பொருளாதாரப் பிரச்சினை என்பது பொருளாதாரத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது மக்களின் அடிப்படை வாழ்வுரிமையையும் பாதிக்கின்றது என்ற உண்மை இப்போது சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜனநாயக வழிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியும் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் இப்போது உரிமைசார் விடயமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நாட்டு மக்களின் பொளாதாரப் பாதுகாப்பும் முக்கியமானது என்பது இடித்துரைக்கப்பட்டிருக்கின்றது. போர்க்காலத்தில் தமிழ் மக்கள் மீது மிக மோசமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவர்களின் நடமாட்டம் மிக மோசமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. படை அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட வகையிலேயே தமிழ் மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு போர்க்காலத்தில் வடபகுதியின் எல்லைப்புற நகர்ப்பிரதேசமாகிய வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பாஸ் நடைமுறை அந்த அதிகாரிகளுக்குப் பேருதவியாக அமைந்திருந்தது. தமிழ் மக்கள் மீது அவர்கள் பிரயோகித்த கெடுபிடிகளுக்கு சட்ட ரீதியான அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அந்த பாஸ் நடைமுறை வழங்கியிருந்தது.

எரிபொருள் இல்லை. பெயர் குறித்து அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களே  விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. அரிசி, பருப்பு, கிழங்கு போன்ற மிக முக்கியமான உணவுப்பொருட்களே அங்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசிய பாவனைப் பொருட்களும் சைக்கிள்களுக்கு அவசியமான உதிரிப்பாகங்களும்கூட தடை செய்யப்பட்டிருந்தன. அத்தகைய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் அனுபவித்த கடினமான சூழலை சிங்கள மக்களும் எதிர் கொள்வதற்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி இருந்தது.

ஒப்பீட்டளவில் இந்தப் பொருளாதாரப் பிரச்சினையின் தாக்கம் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த தாக்கத்திலும் பார்க்க பல மடங்கு குறைவானது என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பிரதேசத்து மக்கள் போர்க்காலத்தில் தமது உணவுத் தேவைக்கு பொது நிகழ்வாக விநியோகிக்கப்பட்ட அரிசிக் கஞ்சியையே குறிப்பிட்ட காலம் நம்பியிருந்தார்கள். அதுவே அவர்களின் ஜீவாதாரமாகத் திகழ்ந்தது. அதன் காரணமாகவே இப்போது முள்ளிவாய்க்கால் படுகொலை நிலைமைகளை நினைவுகூரும்போது கஞ்சி வழங்கும் நிகழ்வு முக்கிய இடம்பிடித்திருக்கின்றது. அன்று தமிழ் மக்கள் அனுபவித்திருந்த கடின நிலைமையை அடுத்து வருகின்ற தலைமுறையினரும் அறிந்திருக்க வேண்டும் என்பதே, இந்தக் கஞ்சி வழங்கலின் முக்கிய நோக்கம்.

அரசாங்கத்தினால் வலிந்து மேற்கொள்ளப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக தமிழ் மக்கள் அப்போது மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்குள் சிக்கியிருந்தார்கள். அவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்த அந்த உணவுக்கான நெருக்கடி குறித்து, யுத்தத்திற்குப் பின்னரான கடந்த 13 வருடங்களில் எந்த மனித உரிமைச்செயற்பர்டாளர்களும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. பொதுவாக மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்ற விடயங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

அப்பாவிகளான ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவ தாக்குதல்கள், அந்த மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட படுகொலைகள் என்பன போர்க்குற்றச் செயற்பாடுகளின் தன்மையைக் கொண்டிருந்த போதிலும், அது போர்க்குற்ற வரையறைக்குள் அடங்குமா இல்லையா என்பதைப் பலர் விவாதப் பொருளாக்கியிருக்கின்றார்கள்.

நிராயுதபாணிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களைப் படுகொலை செய்வது போர்க்குற்றச் செயலாக நோக்கப்படுகின்றது. ஆனால் ஆயுதத் தாக்குதல்கள் இல்லாமமேலயே அந்த அப்பாவி மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை உரிய அளவில் விநியோகம் செய்யாமல் அவர்களைப் பட்டினி நிலைமைக்கும் நோய்த்தாக்கங்களுக்கும் ஆளாகச் செய்திருப்பது எத்தகைய பாதகமான செயல் என்பதை விபரித்துக் கூற வேண்டியதில்லை. அது குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கு ஒப்பான விடயமாகும். இதனை இப்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் சிரமங்களையும் கடின சூழலையும் எதிர்கொண்டிருப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மிக மோசமாக தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்களினால் வலிந்து திணிக்கப்ப்டடிருந்த பொருளாதாரத் தடையின் ஊடான நெருக்கடி தனித்துவமான மனிதாபிமானப் பிரச்சினையாகவும், தனித்தவமான உரிமை மீறல் விடயமாகவும் நோக்கப்பட வேண்டும் என்பதை தற்போது இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அதனால் எழுந்துள்ள பிரச்சினைகளும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கமும் ஆட்சியாளர்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் ஒரு புறமிருக்க அதனால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உரிமைசார்ந்த விடயமாக இப்போது குறித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தில் இந்த விடயம் உரிமைசார் விடயமாகக் கையாளப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச மன்னிப்புச் சபை அதன் பிந்திய அறிக்கையொன்றில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இலங்கை அதிகாரிகளும் சர்வதேச சமூகமும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக் கூறும் கைங்கரியத்தில் மனித உரிமைகளை முழுமையாக உள்ளடக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது. மிகமோசமான வறுமை, மிகப் பரவலான ஊட்டச்சத்தின்மை, பட்டினி நிலைமை என்பவற்றுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்கள் தமக்குரிய மருத்துவ பராமரிப்பைப் பெற முடியாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அந்த மக்கள் பல்வேறு நிலைகளில் உரிமைகள் மீறப்பட்டவர்களாகத் திகழ்கின்றார்கள். பொருளாதார நெருக்கடியில் அந்த மக்களின் சுகாதார உரிமை, உணவுக்கான உரிமை, சமூகப் பாதுகாப்பு உரிமை என்பவற்றைப் பாதுகாக்க முற்படுகையில் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிலைமைகளில் அந்த மக்களுக்கு நேர்ந்துள்ள பெருங்கேடுகள் வெளிப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டிருக்கின்றது.

மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாகும். பொருளாதாரப் பாதுகாப்பு எனும்போது, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு, கல்விப் பாதுகாப்பு, போக்குவரத்துப் பாதுகாப்பு என பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக அந்த பொறுப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இயல்பாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல் அவசியம். அதேபோன்று எரிபொருள், மின்விநியோகம், மருத்துவ சேவைகள், போக்குவரத்துச் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்களையும் அவர்கள் தங்குதடையின்;றி பெறக் கூடிய நிலைமை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை நாட்டில் நிலவவில்லை. இதற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஆட்சி நடத்திய ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அவர்கள் தமது இயல்பான வாழ்க்கையையும் வாழ்வு நிலையிலான பொருளாதாரத்தை ஈட்டுவதிலும் அனைப் பேணிப்பாதுகாப்பதிலும் தமது கடமைகளைச் செவ்வனே செய்திருந்தார்கள். ஆனால் ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற செயற்பாடுகளும், தீர்க்கதரிசனமற்ற கொள்கை வழிப்போக்கும், மிக மோசமான ஊழல் நடவடிக்கைகளும், ஆளணி மற்றும் நாட்டின் செல்வங்களை பொறுப்பற்ற முறையில் விரயம் செய்தமையுமே பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாகும். எனவே பொருளாதார நெருக்கடிக்கான முழுப் பொறுப்பையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும். அதற்கு பொறுப்பு கூறவும் வேண்டும்.

இந்த பொறுப்பு கூறல் என்பது பொருளாதார நெருக்கடியினால் பல்வேறு வாழ்வுரிமை நிலைகளில் மக்கள் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகள் உரிமை மீறல்கள் என்பவற்றையும் உள்ளடக்கியதாகும். இதனையே சர்வதேச மன்னிப்புச் சபை தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இலங்கை தொடர்பிலான ஐநா மனித உரிமைப் பேரவையின் இந்த செப்டம்பர் மாத அமர்விலான 51-1 இலக்கத் தீர்மானத்தில் பொருளாதாரம் சார்ந்த உரிமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. இது இந்தப் பிரேரணையின் வழிவந்த முக்கியத் திருப்பமாகும். பொருளாதார நெருக்கடி நாட்டின் மனித உரிமை நிலைமைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம்.

இதேபோன்று யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுடன் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார உரிமை மீறல்கள், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், அவர்களது பாரம்பரிய வாழ்விடம் தொடர்பிலான வாழ்நிலை பிரச்சினைகள், இன ஒடுக்கு முறையிலான அரச தரப்பின் ஆக்கிரமிப்புக்களின் மூலம் வாழ்வுரிமை மீறப்பட்டிருக்கின்றமை உள்ளிட்ட விடயங்களும் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டும்..

இது தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் முறையான வழிகளில் உரிமை மீறல் முறைப்பாடுகளைச் செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த்தரப்பினரும், மனித உரிமை விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்.