ஈராக்கில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது ஈராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகம் ஜூலை 27 காலை தாக்கப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என ஈராக்கிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூடிவரும் வேளையில், ஈராக்கின் கோரிக்கையை முன்வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது மேலும் கவலைக்குரிய விடயம் என வெளிவிவகார அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கவனம் செலுத்தி அங்கிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்குமாறு ஈராக்கிடம் துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்தில், செவ்வாயன்று, ஈராக்கின் டுஹோக் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கூட்டு விசாரணைக்கு துருக்கியும் ஈராக்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது. ஈராக் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கோரியிருந்தது.

கடந்த ஜூலை 20 அன்று, ஈராக் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஒன்பது ஈராக்கிய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு துருக்கி இராணுவம் தான் காரணம் என ஈராக் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை துருக்கி நாடு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.