ஆரியகுளத்தின் நடுவில் பௌத்த சின்னங்களை அமைக்க முயற்சி! மேயரும் உடந்தையா?

09 ஆரியகுளத்தின் நடுவில் பௌத்த சின்னங்களை அமைக்க முயற்சி! மேயரும் உடந்தையா?

ஆரியகுளத்தின் நடுவில் பௌத்த சின்னங்களை அமைக்க முயற்சி! மேயரும் உடந்தையா? புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் “இந்து – பெளத்த மண்டபம்” என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாரதிபதி நடவடிக்கையை எடுத்து வருகின்றார். இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுசரணையையும் அவர் கோரியுள்ளார். ஆனால் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், கட்டவிழும் இந்த முயற்சியை மூடி மறைத்து ஒளித்து நாடகமாடுகிறார் என யாழ். மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் யாழ். ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

இந்த விடயத்தை அவர் வேண்டும் என்றே ஒளிப்பதால், அவரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆரியகுளம் புனரமைப்புத் திட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இந்த மண்டப அமைப்பும் இடம் பெறலாம் எனப் புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது.

பௌத்த சின்னங்களை அமைக்க முயற்சி
ஆரியகுளத்தை இவ்வாறு புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2021-08-30 அன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்குத் தாம் எழுதிய கடிதத்தில், இந்த ஆண்டு இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வில் இக்குளத்தின் மத்தியில் இந்து – பெளத்த நல்லிணக்க மண்டபம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது என விகாராதிபதி வண. மீஹாஹயண்துர ஸ்ரீவிமல தேரர் குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த மண்டபத்தை அமைப்பதற்கு யாழ் மேயர் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மாநகர முதல்வருக்கு முகவரியிடப்பட்ட இக்கடிதம் கிடைத்ததும் அதன் முக்கியத்துவம் கருதி “இவ்விடயத்தை சபையில் சமர்ப்பிப்பதே பொருத்தமானது – அடுத்த சபைக் கூட்டத்தில்’ என்ற பரிந்துரையுடன் அதை மேயருக்கு அனுப்பிவைத்தார் யாழ் மாநகர ஆணையாளர். ஆனால் “இதனை(கடிதத்தை) கோவையில் சேர்க்க’ என்று பணித்து, விடயத்தை அப்படியே அமுக்கி உள்ளார் நகர மேயர் மணிவண்ணன்.

அது மட்டுமல்ல, இது குறித்து மாநகர சபையின் கூட்டத்தில் தெளிவாக விடயத்தைக் குறிப்பிட்டு எதிரணியால் கேள்வி எழுப்பப்பட்டது. ஆரியகுளத்தினுள் எந்தவொரு பெளத்த அடையாளத்தையும் அமைத்துத் தருமாறு நாகவிகாரையின் விகாராதிபதி கேட்கவேயில்லை என அடித்துக் கூறிமறுத்தார் மேயர் மணிவண்ணன்.

Was Bail Granted To Jaffna Mayor By The Government Or By Courts? - Colombo Telegraphமேயர் மணிவண்ணன்

“யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் உள்ளே ஓர் சின்னம் அமைத்து, அதில் புத்தர் உள்ளிட்ட சின்னங்கள் ஏதும் அமைத்து தருமாறு அருகில் உள்ள விகாரையின் பிக்கு எழுத்தில் கடிதம் ஏதும் அனுப்பியுள்ளாரா?” – என 2021-09- 28ஆம் திகதி மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற சபையின் செப்ரெம்பர் மாத கூட்டத்தில் உறுப்பினர் ப.தர்சானந்த் கேள்வி எழுப்பினார்.

ஆரியகுளத்திலே இந்து, பெளத்த கலாச்சார சின்னம் என்னும் பெயரில் புத்தரையும் வைக்க முயற்சிக்கப்படுவததாகக் கூறப்படுவதனால் இது குறித்து விளக்கம் கோருகின்றேன் என்றார் அவர். இவ்வாறு தர்சானந்த் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவ்வாறு எந்தக் கோரிக்கையினையும் பிக்கு மாநகர சபைக்கு முன் வைக்கவில்லை எனத் தெரிவித்தார். இதன்போது கருத்துரைத்த உறுப்பினர் மு.ரெமிடியஸ் கடிதமே வரவில்லை என்பதனால் அந்த விடயம் தேவையற்ற ஒன்று எனக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இப்போது நாக விகாரையின் விகாரதிபதியின் கடிதம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் ஆரியகுளத்தில் இந்து – பெளத்த மண்டபம் அமைக்க விகாராதிபதி முயற்சி செய்யும் விடயம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிந்திருந்திருந்தும் அதை தற்சமயத்துக்கு மூடிமறைக்க அவர் முயன்றுள்ளமை நிரூபணமாகியுள்ளது.

ஸ்ரீ நாக விகாரைக்கு முன் பக்கத்தில் உள்ள குளத்தின் மத்தியில் இந்து – பெளத்த நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-

“ஸ்ரீ நாக விகாரைக்கு முன் பக்கத்திலுள்ள குளத்தில் ஆரியர்கள் நீராடியதன் காரணமாக இந்த குளமானது ஆரியகுளம் எனும் நாமத்தை பெற்றிருக்கின்றது என வரலாறுகள் கூறுகின்றன. “இந்தக் குளத்தில் மக்களின் தகாத நடவடிக்கைகளினால் அசுத்தமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அசுத்தமான சூழலை மாற்றி தூய்மையாகவும் சிறப்பான முறையில் பாதுகாப்பதற்காகவும் இந்த வருடஅரச வெசாக் நிகழ்வில் இந்தக் குளத்தின் மத்தியில் இந்து – பெளத்த நல்லிணக்க மண்டபம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“ஆனால் தற்போதைய காலங்களில் தங்களால் இந்த குளத்தினை துப்புரவு செய்து அபிவிருத்தி திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதனை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நற்பணிகளுக்கு பெளத்த ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க என்றும் துணை நிற்போம் எனவும் தெரியப்படுத்துகிறோம். “மேலும் இந்த குளத்தினைச் சூழ இந்து ஆலயங்கள், பெளத்த விகாரை போன்ற சமய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதனால் சமய கெளரவத்தினை பாதுகாப்பதற்கும் இன ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் இந்த பெளத்த நல்லிணக்க மண்டபத்தை அமைப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு ஸ்ரீ நாக விகாரை சர்வதேசபெளத்த நிலையத்தின் விகாராதிபதி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்படி நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பான திட்டத்திற்கு உரிய தகவல்களை அவசியமான சந்தர்ப்பங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021