Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்ப் மகனின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்ப் மகனின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜுனியர், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளே ஆக்கிரமித்து வருகின்றன.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் சார்பாக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் இரு வேட்பாளர்கும் மாறிமாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

பல மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது.

அரிசோனா, கொலராடோ, கான்சாஸ், லூயிசியானா, மிஷிகன், நெப்ராஸ்கா, நியூ மெக்ஸிகோ, நியூ யார்க், வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, டெக்சாஸ், விஸ்கான்சின், வியோமிங் ஆகியவற்றில் வாக்குப்பதிவு நிறைவடையவிருக்கிறது.

இதில் அரிசோனாவில் பைடனுக்கு சாதகமான நிலை உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. 38 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட டெக்சாஸ் பைடனுக்கு சாதகமாக இருந்தால், டிரம்பின் வெற்றி வாய்ப்பு சிக்கலாகலாம்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு குறித்து தனது கருத்தை வெளியிடும் வகையில், ஒரு உலக வரைபடத்தை ட்ரம்ப் மகன் ஜூனியர் வெளியிட்டுள்ளார்.

அதில் உள்ள இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெறவில்லை. மாறாக காஷ்மீர் தனி பிராந்தியமாக காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த வரைபடத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் இந்தியாவுடன் இல்லாமல் தனித்த பிராந்தியங்களாக காட்டப்பட்டுள்ளன.

தனது தந்தை டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதி என்பதை குறிக்கும் வகையில், டிரம்ப் ஜுனியர் பகிர்ந்துள்ள வரைபடத்தில், ஏறக்குறைய அனைத்து நாடுகளும் குடியரசு கட்சியின் நிறமான சிகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, மெக்சிகோ உட்பட சில நாடுகள் மட்டும், ஜனநாயக கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து “டிரம்புடன் நமோவின் (மோடியின்) நெருங்கிய உறவிற்கு கிடைத்த விலை இது” என்று தனது டிவிட்டரில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மற்றும் மெக்சிகோ போன்ற பிரச்சனைக்குரிய நாடுகளுடன் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுள்ளதை குறிக்கும் வகையில், அந்நாட்டின் கருவூலத்துறை சார்பாக 20 ரியால் நோட்டு வெளியிடப்பட்டது. அதில் அச்சிடப்பட்டிருந்த உலக வரைபடத்தில், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து சவுதியிடம் இந்தியா கவலையை தெரிவித்ததுடன், உடனடியாக அதை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version