யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு மேல் படையினரின் பிடியில்-மாவை சேனாதிராஜா

யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு

யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாப்புப் படையின் பிடியில் தற்போதும் உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் பிறந்த தின, அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில், மக்களின் காணிகள் அரச அலுவலங்களால் அல்லது படையினரால் சுவீகரிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். எனினும் யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இது தவிர கரையோரப் பிரதேசத்தில் 539 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. குறிப்பாக தொல்லியல் திணைக்களம், வன வள திணைக்களம் ஆகியன காணி சுவீகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது தவிர பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கு பல்வேறு வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இவை தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றோம். அத்துடன் இதுவரை சுவீகரிக்கப்பட்ட காணிகளின் விபரமும் எங்களிடம் உள்ளது என்றார்.