ஈழத்தமிழ் மக்களுக்கான சிறீலங்காவின் முக்கோண வலைப்பின்னல்

இலக்கு மின்னிதழ் 144 இற்கான ஆசிரியர் தலையங்கம்

இவ்வாரத்தில் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சிறீலங்கா காவல் துறையினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் பயிற்சிகள் அளிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்னும் பலத்த கோரிக்கை, பிரித்தானியாவின் நான்கு முக்கிய மனித உரிமை ஆர்வலர் அமைப்புக்களால் ஸ்கொட்லாந்தின் நீதிக்கான அமைச்சரவைச் செயலாளர் கெய்த் பிரவுண் அவர்களிடம் எழுப்பப்பட்டு, அதன் பிரதிகள் ஸ்கொட்லாந்தின் தலைமை காவல்துறை அதிகாரி இயன் லிவ்விங் ஸ்டோன்  அவர்களுக்கும், ஸ்கொட்லாந்தின் காவல்துறை அதிகார சபையின் தலைவர் மார்டின் இவன்ஸ் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பிரித்தானிய மனித உரிமைகள் கண்காணிப் பகத்தின் இயக்குநர் யஸ்மின் அகமட், சித்திரவதைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான கொள்கைகள் வழிநடத்தல்கள் அமைப்பின் இயக்குநர் ஸ்டீவ் கிரஸோ, ஸ்கொட்லாந்தின் பக்ஸ் கிரிஸ்டி அமைப்பைச் சேர்ந்த மரியன் பலிஸ்டர்,  சிறீலங்காவில் நீதிக்கும் அமைதிக்குமான பரப்புரை அமைப்பின் இயக்குநர் மெலிசா டிரிங், ஆகியோர் இந்த கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ளனர். இது உலக அளவில் ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியும், இலங்கை மக்களுக்கான மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உலக மக்களின் ஆர்வம் தணியாது தொடர்வதை எடுத்துக் காட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறீலங்கா மீது குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளைத் தொடங்குவதற்கான தரவுகள், சான்றாதா ரங்களை ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கான செயற்பாட்டு நிதிக்கான முதல் கட்ட நிதியளிப்பை பிரித்தானிய அரசாங்கம் கோவிட் 19 இன் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இவ்வாண்டின் நடுப்பகுதியில் உறுதி செய்தமை, உலக நாடுகளும், அமைப்புக்களும் சிறீலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதில் காட்டி வரும் அக்கறையை, கோவிட் 19 மற்றும் அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றம் என்பன பெரிதாகப் பாதிக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.

இவ்வாறான ஈழத்தமிழ் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்குமான உலகின் நீதி வழங்கு முயற்சிகளை சிதைப்பதற்கான திட்டம்,  கடந்த வாரத்தில் சிறீலங்காவின் அமைச்சரவையில் அவசர அவசரமாக ஏற்படுத்தப்பட்ட முக்கோண வலைப்பின்னல் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முக்கோண வலைப்பின்னல் அமைச்சரவை மாற்றத்தின் மையப்புள்ளியாக ஜி.எல்.பீரிசு கட்டமைக்கப்பட்டு உள்ளார். இவருக்கான பணியாக முன்னை போலவே ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு அரசியலை இவரது சட்ட முனைவர், சட்டப் பேராசிரியர் என்ற சட்டப்பலம் கொண்டு, நியாயப்படுத்தி உலக நாடுகளும், இந்தியாவும் தமிழர்களின் கண்ணிய வாழ்வைச் சிறீலங்கா முன்னெடுக்க வேண்டும் என முன்வைக்கும் நிபந்தனைகளைப் பேரம் பேசுவதால், தளர வைப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கோண வலையின் உச்சப் புள்ளியாகச் சிறீலங்காவின் இன்றைய அரச அதிபர் கோத்தபாய இராசபக்ச விளங்குகின்றார். முக்கோண வலைப்பின்னலில் இவரது பணியாக பசில் இராசபக்ச அமெரிக்க ஆதரவையும், மகிந்த ராசபக்ச இந்திய ஆதரவையும் பெருக்கும் பொழுது, சீனா முகம் கோணாது பாதுகாக்கும் வகையில் சீனப்பிரதமர் லீ கெகியாங் அவர்களின் சிறீலங்காவுக்கான செப்டெம்பர் வருகையைப் பயன்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கோண வலையின் அடிக்கோட்டின் வலது மூலையாக பசில் ராசபக்ச மேற்குலகத் தொடர்புக்கான பலமான புள்ளியாக அமைக்கப்பட்டுள்ளார். கெரவலபிட்டி திரவ இயற்கைவாயுத் திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதுடன், அமெரிக்க மூலதன நகர்வை இலங்கைக்குள் இழுத்து வரத் தொடங்கும் இவரது முயற்சி, சீனாவின் கொழும்புத் துறைமுகத் திட்டதில் அமெரிக்காவுக்கும் பங்கேற்பு உரிமை அளித்து, சீன – அமெரிக்க – சிறீலங்கா நட்புறவுத் தளமாக கொழும்புத் துறைமுகத் திட்டத்தை மாற்றி, இந்திய அழுத்தத்தைச் சமாளிக்க உதவுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கோண வலையின் அடிக்கோட்டின் இடது மூலையாக பிரதமர் மகிந்த ராசபக்ச இணைக்கப்பட்டுள்ளார்.  இவரது பணியை உற்சாகப்படுத்தும் செயல்களாக இந்தியா ஏற்க மறுத்த இந்தியாவிற்கான சிறீலங்காத் தூதுவராக சிறீலங்கா நியமித்த மெலிந்த மொரகொடவை இந்தியா ஏற்றுள்ளமையும், கல்கத்தாவில் சிறீலங்காவின் மூன்றாவது துணைத் தூதரகத்தை அமைக்க அனுமதியளித்தமையும் அமைகிறது.

இவ்வாறு சிறீலங்கா மிகவும் கவனமாகத் தனது ஆற்றலாளர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, ஈழத்தமிழ் மக்களுக்கு உலகின் நீதி கிடைப்பதையும் தாமதப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா உட்பட உலக நாடுகளிலும், சிறீலங்காவுக்குச் சாதகமான நகர்வுகள் தென்படும் இந்நேரத்தில், யாழ்ப்பாண மாநகரசபை சிறீலங்காவைக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்தப்பட வேண்டும் என்னும் முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை உலகத் தமிழர்கள் தங்கள் தீர்மானமாக எவ்வளவுக்கு முன்னெடுப்பார்களோ அவ்வளவுக்குத் தான் சிறீலங்காவின் முக்கோண ராசதந்திர வலைப்பின்னலை அறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முயற்சிகள் சரியான நேரத்தில் சரியான முறையில் அமைய உதவ முடியும். இதற்கு உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் உடன் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடிய ஈழத் தமிழர்களின் உலக குடைநிழல் அமைப்பு ஒன்று தாதமின்றி கட்டமைக்கப்பட வேண்டிய தேவையுண்டு என்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.


ilakku-weekly-epaper-144-august-22-2021