காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாள்: விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

காலி முகத்திடலில் கட்சி சார்பற்ற அமைதியான மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாளை  எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காலவரையறையற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தரப்பு மக்களும் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கோட்டா கோ கமவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு மேலதிகமாக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

போராட்டத்தின் 50ஆவது நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடுவதற்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு காலி முகத்திடலுக்கு கறுப்புக் கொடியுடன் வருமாறும் அல்லது அருகிலுள்ள நகரில் ஒன்று கூடுமாறும் போராட்டக்காரர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக எரிபொருள் வரிசையில் நிற்கும் பொதுமக்களை கறுப்பு நிற ஆடை அணிந்து கறுப்புக் கொடியை ஏந்துமாறும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தை குறிக்கும் வகையில் இசை மற்றும் கலாசார நிகழ்ச்சி ஒன்று காலி முகத் திடலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பட்டி சந்தியிலிருந்து ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணியின் ஊடாக ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையை கையளிப்பதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் இரத்திந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி வன்முறையைத் தூண்டும் குற்றச்சாட்டின் கீழ் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டவிரோதமாக கைது செய்தமைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சட்டவிரோதக் கைதுகளை நிறுத்துமாறும், பதவி விலகுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி- தினக்குரல் Tamil News