அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஐ. நா. தயார்-  அன்டோனியோ குட்டெரஸ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ், ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்கும் அவரது தலைமை முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிமொழிகளை வரவேற்கும் அதேவேளையில், பொது மக்களுடன் கலந்தாலோசித்தல், அத்துடன் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட அனைத்து பங்குதாரர்களிடையே உரையாடலை ஊக்குவிப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உடனடி மற்றும் நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது, சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் நலனுக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கு செயலாளர் நாயகம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.