அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்

ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்

ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்

நீண்ட காலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அடுத்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் விடுவிப்பதற்கான உத்தரவை நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதியின் நேரப்படி நடைபெறவுள்ளது. சோதிடர்களின் நல்ல நேர கணிப்பின்படியே ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தும் அது அவர்களுக்கு நல்ல நேரமாக அமையவில்லை என்பதையே மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சினைகள், அரசு முகம்கொடுக்கும் சிக்கல்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதியோடு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடத்தும் பேச்சு வார்த்தை தமிழ் மக்களை அரசியல் சிக்கல்களுக்கு  இட்டுச் செல்லக்கூடாது.

இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தமிழ் தேசியக்கூட்டமைப்பினை மட்டும் சந்திப்பிற்கு அழைப்பது இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் உறவை வளர்த்து கொள்ளவா? அல்லது நல்லாட்சி காலமென கூறப்பட்ட மைத்திரி-ரணில் ஆட்சி காலம் போன்று கட்சியிலிருந்து ஆதரவை பெற்று கொள்ளவா என்பது தொடர்பில் தெரியவில்லை.

ஜனாதிபதியின் அழைப்பில் உள்நோக்கம் ஓரளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரிந்திருக்கும் என நம்பலாம். அதன் காரணமாகவே வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகளோடு உரையாடாது ஜனாதிபதியை சந்திக்க செல்கின்றனர். தமிழர்களின் அரசியல் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் எனில் அரசு தமிழ் தேசிய கூட்டமைப்போடு மட்டும் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைக்க வேண்டும்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்து ஏன் செல்ல வேண்டும்? பேச்சுவார்த்தை என்பது கடந்த கால அனுபவங்களோடு கூட்டுத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும். தற்போது தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் அரசியலை முன்னகர்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளை செய்துவரும் நிலையில் அவர்களுடைய ஆலோசனையும் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியான பிரச்சினையை கதைப்பதற்கு செல்ல வேண்டும்.

இந்தப் பேச்சு வார்த்தையை மையப்படுத்தி நடக்கவிருப்பதாக கூறப்படும் மாகாணசபை தேர்தலில் அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகவும் இது அமைந்து விடக்கூடாது. இந்த நோக்கில் மக்களை திசை திருப்புவது என்பது அழிவிற்கே வழிவகுக்கும்.

நலமான பேச்சுவார்த்தைக்கான அடித்தளமாகவும் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் நீண்ட காலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுவிப்பதற்கான உத்தரவை நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அத்தோடு புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்பின் சின்னமாக தமிழர் தாயகத்தில் பலவந்தமாக வைப்பதை தடுத்து நிறுத்தவும் உத்தரவிடுமாறு கோர வேண்டும்.

மேலும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை அயலக மற்றும் வல்லரசுகளின் அரசியல் தேவைகளை மட்டும் நிறைவேற்றும் ஒன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நலன் சார்ந்து கைக்கூலிகளாக ஏற்படக்கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News